ஐசிசி 2025 சாம்பியன்ஸ் ட்ராபி ஒருநாள் கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் நடைபெற்று வருகிறது. அதில் பிப்ரவரி 21ஆம் தேதி கராச்சியில் நடைபெற்ற குரூப் பி பிரிவின் மூன்றாவது போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் தென்னாபிரிக்க அணிகள் மோதின. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென்னாபிரிக்கா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய அந்த அணிக்கு டீ ஜோர்சி 11 ரன்னில் அவுட்டானார்.
ஆனால் மறுபுறம் அசத்தலாக விளையாடிய ரியான் ரிக்கல்ட்டன் ரன் குவிப்பில் ஈடுபட்டார். அவருடன் எதிர்புறம் இரண்டாவது விக்கெட்டுக்கு 129 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த கேப்டன் பவுமா அரை சதத்தை அடித்து 58 ரன்னில் பெவிலியன் திரும்பினார். மறுபுறம் தொடர்ந்து அசத்தலாக விளையாடிய ரிக்கல்டன் நேரம் செல்ல செல்ல நேர்த்தியாக விளையாடி சதத்தை அடித்தார்.
தென் ஆப்பிரிக்கா அதிரடி:
மொத்தம் ஏழு பவுண்டரி ஒரு சிக்சரை அடித்த அவர் 103 (106) ரன்கள் குவித்து ரன் அவுட்டானார். மிடில் ஆர்டரில் வேன் டெர் டுஷன் 52, ஐடன் மார்க்ரம் அதிரடியாக 52* (36) ரன்கள் விளாசி அசத்தினார்கள். இறுதியில் டேவிட் மில்லர் 14, வியான் முல்தர் 12* எடுத்த உதவியுடன் 50 ஓவரில் தென்னாப்பிரிக்கா 315-6 ரன்கள் குவித்தது.
ஆப்கானிஸ்தானுக்கு அதிகபட்சமாக முகமத் நபி 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அடுத்ததாக விளையாடிய ஆப்கானிஸ்தானுக்கு எதிராக தென்னாபிரிக்கா பவர் பிளே ஓவர்களில் துல்லியமாக பவுலிங் செய்தது. அதில் அதிரடி காட்ட முடியாமல் திணறிய ஆப்கானிஸ்தானுக்கு குர்பாஸ் 10, இப்ராஹிம் ஜாட்ரான் 17, செதிகுல்லா 16, கேப்டன் ஷாஹிதி 0 ரன்களில் அவுட்டாகி பின்னடைவை கொடுத்தனர்.
ஆப்கானிஸ்தான் சொதப்பல்:
அதனால் 50-4 என ஆரம்பத்திலேயே தடுமாறிய அந்த அணிக்கு ரஹ்மத் ஷா வெற்றிக்கு போராடினார். ஆனால் எதிர்ப்புறம் ஓமர்சாய் 18, முகமது நபி 8, நைப் 13, ரசித் கான் 18 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். இறுதியில் ரஹ்மத் ஷா போராடி 90 ரன்கள் எடுத்தும் 43.3 ஓவரில் 208 ரன்களுக்கு ஆப்கானிஸ்தானை சுருட்டிய தென்னாபிரிக்கா 107 ரன்கள் வித்தியாசத்தில் வென்று தொடரை வெற்றியுடன் துவக்கியுள்ளது.
இதையும் படிங்க: இதை செய்தாலே போதும்.. ராசியான துபாயில் இந்தியாவுக்கு ஹாட்ரிக் தோல்வியை கொடுப்போம்.. ஹரிஷ் ரவூப்
அதிகபட்சமாக ரபாடா 3, லுங்கி நிகிடி 2, முல்தர் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். மறுபுறம் சமீபத்திய ஐசிசி தொடர்களில் பாகிஸ்தான், இங்கிலாந்து, நியூசிலாந்து போன்ற வலுவான அணிகளை தோற்கடித்து சீறி வந்த ஆப்கானிஸ்தான் இம்முறையும் அசத்தும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். இருப்பினும் முதல் போட்டியிலேயே பேட்டிங்கில் சொதப்பிய அந்த அணி ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்தது.



