இந்தியாவில் இந்த ஆண்டு நடைபெற்று முடிந்த 2025 ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது புள்ளி பட்டியலில் கடைசி இடத்தை பிடித்து வெளியேறியது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய ஏமாற்றத்தை அளித்தது. அதோடு ஐபிஎல் வரலாற்றில் ஜாம்பவான் அணியாக பார்க்கப்பட்ட சிஎஸ்கே-வுக்கு இப்படி ஒரு நிலை இருப்பதை சென்னை அணியின் முன்னாள் வீரர்களே பேசி வருத்தப்பட்ட நிகழ்வும் அரங்கேறியது.
2 தமிழக வீரர்களை சோதனைக்கு அழைத்த சி.எஸ்.கே நிர்வாகம் :
இதன் காரணமாக அடுத்த ஆண்டு சிஎஸ்கே அணியை பலப்படுத்தும் நோக்கில் தற்போது நிர்வாகம் சில முக்கிய முடிவுகளை எடுத்து வருகிறது. ஏற்கனவே 2025 ஐபிஎல் தொடரின் பிற்பாதியில் இளம் வீரர்களை பிளேயிங் லெவனில் இணைத்தும் சிஎஸ்கே அணி விளையாட வைத்திருந்தது.
இந்நிலையில் அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கு முன்னதாக தற்போது சிஎஸ்கே அணியின் நிர்வாகமானது இரண்டு இளம் தமிழக வீரர்களை சோதனைக்கு அழைத்துள்ளது. அந்த வகையில் ஆர்.எஸ் அம்ப்ரிஷ் என்கிற 19 வயதுக்கு உட்பட்ட தமிழக வீரரை சோதனைக்கு அழைத்துள்ளது. ஏற்கனவே அவர் இந்திய அணிக்காக 19 வயதுக்குட்பட்டார் அணிக்காகவும் விளையாடியுள்ளார்.
வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான இவரிடம் மிகச் சிறப்பான பேட்டிங் மற்றும் பந்துவீச்சு ஆகியவை இருப்பதினால் அவரை சோதனைக்கு அழைத்துள்ளார்கள். அதேபோன்று இந்த ஆண்டு தமிழகத்தில் நடைபெற்ற டி.என்.பி.எல் தொடரில் அசத்திய 23 வயதான வேகப்பந்து வீச்சாளர் இசக்கி முத்துவையும் சிஎஸ்கே அணி நிர்வாகம் சோதனைக்காக அழைத்திருந்தது.
ஏனெனில் இந்த ஆண்டு நடைபெற்று முடிந்த டி.என்.பி.எல் தொடரில் ஐ ட்ரீம்ஸ் திருப்பூர் அணிக்காக மிகச் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய அவர் இந்த தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது வீரராகவும் இருந்தார். அவரது பந்துவீச்சு டெத் ஓவர்களில் மிகச்சிறப்பாக இருப்பதை கவனித்த நிர்வாகம் அவரது திறமை மீது நம்பிக்கை வைத்துள்ளது.
இதையும் படிங்க : அவரோட பிரச்சனை பத்தி தெரியாம தப்பா பேசாதீங்க.. ஜஸ்ப்ரீத் பும்ராவுக்கு ஆதரவு தெரிவித்த – பரத் அருண்
இதன் காரணமாகவே அவரையும் சிஎஸ்கே அணி நிர்வாகம் தேர்வுக்கு அழைத்துள்ளது. சி.எஸ்.கே அணியின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இப்படி தமிழக இளம் வீரர்களுக்கு சிஎஸ்கே அணி நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது ரசிகர்கள் மத்தியிலும் வரவேற்பினை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.



