சஞ்சு சாம்சன் கொடுத்த புகாரால் வேலையை இழந்த ராஜஸ்தான் அணி நிர்வாகி- ஸ்ட்ரிக்ட் நடவடிக்கை

- Advertisement -

ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ஐபிஎல் 2022 கிரிக்கெட் தொடர் மார்ச் 26-ஆம் தேதியன்று கோலாகலமாக துவங்குகிறது. வரும் மே 29-ஆம் தேதி வரை நடைபெறும் இந்த தொடரில் 10 அணிகள் விளையாடுவதால் 74 போட்டிகள் கொண்ட பிரம்மாண்ட ஐபிஎல் தொடர் 65 நாட்கள் ரசிகர்களை மகிழ்விக்க உள்ளது. இந்த வருடத்தின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் சந்திக்கின்றன. இந்த தொடரை பார்ப்பதற்காக 25% ரசிகர்கள் மட்டுமே மைதானத்திற்குள் அனுமதிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜாலியான ராஜஸ்தான் அட்மின்:
இந்த தொடரில் கோப்பையை வெல்வதற்காக நடப்பு சாம்பியன் சென்னை உள்ளிட்ட அனைத்து அணிகளும் தீவிர பயிற்சிக்குப் பின் தயாராக உள்ளன. இந்த தொடரில் பங்கேற்கும் அனைத்து அணிகளும் பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் என அனைத்து விதமான சமூக வலைதளங்களிலும் தங்களுக்கென்று தனி கணக்கை வைத்து அதில் தங்களின் ரசிகர்களுக்கு தேவையான அப்டேட் கொடுப்பது வழக்கமான ஒன்றாகும்.

- Advertisement -

அதேபோல் ஒரு சில அணிகள் எப்போதும் ஜாலியாக ஏதோ ஒரு பொழுது போக்கு சம்பந்தமான பதிவுகளை பதிவிட்டு ரசிகர்களை மகிழ்விப்பதும் வழக்கமான ஒன்றாகும். அந்த வகையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் சமூக வலைதள கணக்கு அட்மின் எப்போதும் ஜாலியாகவும் வேடிக்கையாகவும் ஏதேனும் பதிவுகளை பதிவிடுவதும் அது ரசிகர்களிடையே வைரலாக மாறுவதும் சகஜமான ஒன்றாகும். அதேபோல் தங்கள் அணிக்காக விளையாடும் வீரர்களையும் அந்த அட்மின் ஜாலியாக கலாய்ப்பதும் வழக்கமாக இருந்து வருகிறது.

சாம்சனிடம் எல்லை மீறிய அட்மின்:
அந்த வகையில் இன்றைய பயிற்சியை முடித்துவிட்டு பேருந்தில் அரைகுறை உடையுடன் பயணித்துக் கொண்டிருந்த ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சம்சனை புகைப்படம் எடுத்த ராஜஸ்தான் அட்மின் அதை ஒருசில ஆப்ஸ்களை பயன்படுத்தி அவர் தலையில் தலைப்பாகையும் கண்ணாடியையும் அணிந்து இருப்பது போல் மாற்றம் செய்து அதை ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் அதிகாரப்பூர்வ சமூகவலைத்தள பக்கத்தில் கலாய்க்கும் வண்ணம் பதிவேற்றியிருந்தார். இதனால் கடுப்பான சஞ்சு சாம்சன் “நண்பர்களிடையே இது சகஜமானது. ஆனால் ஒரு ஐபிஎல் அணி என்பது கட்டுக்கோப்பாக இருக்க வேண்டும்” என தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

- Advertisement -

அது மட்டுமல்லாமல் அந்த விரக்தியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் கணக்கை பின் தொடர்வதை நிறுத்தினார். இந்த செயல்கள் ரசிகர்களின் கவனத்தை பெற்ற நிலையில் அதோடு நிற்காத சஞ்சு சாம்சன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி உரிமையாளர்களை தொடர்பு கொண்டு இதுபற்றி புகார் செய்ததாக தெரிகிறது. உடனடியாக இதற்கு நடவடிக்கை எடுத்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் நிர்வாகம் முதலில் அந்த சர்ச்சையான பதிவை நீக்கியது.

வேலையிழந்த அட்மின்:
அத்துடன் தங்களின் கேப்டனை அவமதிக்கும் செயலில் ஈடுபட்ட அந்த அட்மினை அந்த வேலையில் இருந்து அதிரடியாக நீக்கி விட்டதாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. இதுபற்றி அந்த அணி வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கூறியது பின்வருமாறு. “இன்று நடந்த ஒரு சில சலசலப்பான சம்பவங்களால் எங்களின் சமூக வலைதள குழுவை மாற்றியமைக்க முடிவெடுத்துள்ளோம்.

மேலும் ஹைதராபாத் அணிக்கு எதிரான எங்களின் முதல் போட்டிக்கு முன்பாக எங்கள் அணியில் எந்தவித அசம்பாவிதமும் இல்லாததால் எங்கள் அணி வீரர்கள் தொடர்ந்து பயிற்சி மேற்கொள்ள உள்ளனர். மேலும் எங்கள் அணியின் டிஜிட்டல் குழுவை மாற்றி அமைப்பது பற்றி ஆலோசித்து நல்ல முடிவு எடுக்கப்படும். அதுவரை எங்கள் அணி சம்பந்தமான தகவல்களை ரசிகர்களுக்கு தெரிவிக்க தற்காலிகமான ஒரு முடிவு எடுக்கப்படும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

மொத்தத்தில் ஜாலியாக ஆரம்பித்த ஒரு சிறிய சம்பவம் ஒருவரின் வேலையை இழக்கும் அளவுக்கு கொண்டு போய் விட்டதைப் பார்த்த ரசிகர்கள் வியப்படைந்துள்ளனர் என்றே கூறலாம். மேலும் இதுமட்டுமல்லாமல் சமீப காலங்களாகவே யூஸ்வென்ற சஹால் போன்ற வீரர்களுடன் இணைந்து கொண்டு அந்த அணியின் வேலை இழந்த அட்மின் பல ரகளைகளில் ஈடுபடுவது வழக்கமாக இருந்தது. ஆனால் இன்று எல்லை மீறிய காரணத்தால் “அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு” என்பது போல் வேலை இழந்து நிற்க வேண்டிய நிலைமை மோசமான ஏற்பட்டுள்ளது.

Advertisement