ஐசிசி டி20 உலகக் கோப்பை 2024 கிரிக்கெட் தொடர் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. அதில் இந்தியா தங்களுடைய முதல் போட்டியில் அயர்லாந்து அணியை எதிர்கொள்கிறது. அப்போட்டி அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு நடைபெறுகிறது. இவ்விரு அணிகளை பொறுத்த வரை இந்தியா ஐசிசி தரவரிசையில் நம்பர் ஒன் இடத்தில் வலுவான அணியாக இருக்கிறது.
மேலும் ரோகித் சர்மா தலைமையில் விராட் கோலி, பும்ரா, சூரியகுமார் போன்ற தரமான வீரர்கள் இந்திய அணியில் நிறைந்திருக்கிறார்கள். எனவே இப்போட்டியில் அயர்லாந்தை வீழ்த்தி இந்தியா எளிதாக வெல்லும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். இருப்பினும் சமீபத்தில் பாகிஸ்தானை தோற்கடித்த அந்த அணி முடிந்தளவுக்கு இந்தியாவுக்கு சவாலை கொடுத்து போராட தயாராகியுள்ளது.
இந்தியாவுக்கு சவால்:
இந்நிலையில் இந்திய அணி மிகவும் தரமானது என்பதை சொல்வதற்கு கூச்சப்படவில்லை என அயர்லாந்து வீரர் ராஸ் அடைர் தெரிவித்துள்ளார். இருப்பினும் இந்த உலகக் கோப்பைக்காக முழுமையாக தயாராகியுள்ள தாங்கள் இந்தியாவை வீழ்த்தி வெற்றி காண்போம் என்றும் அவர் சவால் விடுத்துள்ளார். இது பற்றி போட்டிக்கு முந்தைய செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் பேசியது பின்வருமாறு.
“இந்த போட்டிக்காக அணியாக நாங்கள் ஆர்வமுடன் உள்ளோம். இந்திய வீரர்களை நியூயார்க் நகரில் முதல் போட்டியில் எதிர்கொள்வதை எதிர்நோக்கியுள்ளம். இந்தியா எந்தளவுக்கு நல்ல அணி என்பதை நாங்கள் அறிவோம். அதை சொல்வதற்காக நாங்கள் கூச்சப்படவில்லை. ஆனால் நாங்கள் இந்த போட்டிக்காக முழுமையாக தயாராகியுள்ளோம்”
“அதனால் இந்தியாவுக்கு நாங்கள் நல்ல போட்டியை கொடுப்போம் என்று நம்புகிறோம். போட்டியை எந்த நேரத்திலும் மாற்றக்கூடிய வீரர்கள் இந்திய அணியில் நிறைந்திருக்கிறார்கள். இருப்பினும் நாங்கள் எங்களுடைய சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்தி முடிந்த வரை இந்தியாவை அமைதியாக வைத்திருக்க முயற்சிப்போம்” என்று கூறினார்.
இதையும் படிங்க: 10 ஓவரில் பயத்தை காட்டிய ஸ்காட்லாந்து புதிய உலக சாதனை.. 5க்கு 5.. ஐரோப்பாவிடம் தொடரும் இங்கிலாந்தின் பரிதாபம்
முன்னதாக டி20 கிரிக்கெட்டில் இதுவரை இந்தியா மற்றும் அயர்லாந்து அணிகள் 7 போட்டிகள் மோதியுள்ளன. அந்த 7 போட்டிகளிலும் அயர்லாந்து அணியை வீழ்த்தி இந்தியா வெற்றி கண்டுள்ளது. மேலும் 2009 டி20 உலகக் கோப்பையில் சந்தித்த ஒரு போட்டியிலும் அயர்லாந்தை வீழ்த்தி இந்தியா வென்றுள்ளது. அந்த வரிசையில் இம்முறையும் இந்தியா வெற்றி பெறும் என்று உறுதியாக நம்பலாம். இருப்பினும் அயர்லாந்து நல்ல சவாலை கொடுக்கும் என்று உறுதியாக எதிர்பார்க்கலாம்.