- Advertisement -
உலக கிரிக்கெட்

0 ரன்ஸ்.. 7 விக்கெட்ஸ்.. 17 வயதில் யாராலும் உடைக்க முடியாத உலக சாதனை படைத்த இந்தோனேஷிய வீராங்கனை

உலகம் முழுவதும் நடைபெற்ற பல்வேறு வகையான கிரிக்கெட் போட்டிகளில் அவ்வப்போது தனித்துவமான வியக்கத் தகுந்த சாதனைகள் நிகழ்த்தப்படுவது வழக்கமாகும். அந்த வகையில் உறுப்பு நாடுகளான இந்தோனேசியா மற்றும் மங்கோலியா மகளிர் அணிகள் மோதிய 5வது டி20 போட்டி ஏப்ரல் 24ஆம் தேதி நடைபெற்றது. பலி நகரில் நடைபெற்ற அப்போட்டியில் டாஸ் வென்ற இந்தோனேசியா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

அதைத் தொடர்ந்து களமிறங்கிய அந்த அணி 20 ஓவரில் ஓரளவு நன்றாக பேட்டிங் செய்து 151/5 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக துவக்க வீராங்கனை சக்காரினி 6 பவுண்டரி ஒரு சிக்சருடன் 61 ரன்கள் எடுத்தார். அதைத் தொடர்ந்து 152 ரன்களை சேசிங் செய்த மங்கோலிய அணி 17 வயதில் அறிமுகமாக களமிறங்கிய ரோஹ்மாலியாவின் தரமான சுழல் பந்துகளுக்கு தாக்குப் பிடிக்க முடியாமல் திணறியது.

- Advertisement -

அபார உலக சாதனை:
குறிப்பாக தனது அறிமுகப் போட்டியின் முதல் பந்திலேயே விக்கெட்டை எடுத்த ரோஹ்மாலியா அடுத்து வந்த வீராங்கனைகளையும் 1 ரன் கூட எடுக்க விடாமல் டக் அவுட்டாக்கினார். அந்த வகையில் அவருடைய சுழலுக்கு தாக்குப் பிடிக்க முடியாத மங்கோலிய வீராங்கனைகளில் 5 பேர் டக் அவுட்டானார்கள்.

அதனால் 16.2 ஓவரில் மங்கோலியா அணி வெறும் 24 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணிக்கு அதிகபட்சமாக கேப்டன் அரியொன்செட்செக் 7 (22) ரன்கள் எடுத்தார். இந்தோனேசியா சார்பில் அதிகபட்சமாக ரோஹ்மாலியா 3.2 ஓவரில் 3 மெய்டன் உட்பட 1 ரன் கூட கொடுக்காமல் 7 விக்கெட்டுகளை சாய்த்து 127 ரன்கள் வித்தியாசத்தில் மெகா வெற்றி பெற உதவினார்.

- Advertisement -

இதன் வாயிலாக சர்வதேச மகளிர் டி20 கிரிக்கெட்டில் ஒரு போட்டியில் சிறந்த பந்து வீச்சை (0/7) பதிவு செய்த வீராங்கனை என்ற மாபெரும் உலக சாதனையையும் அவர் படைத்தார். இதற்கு முன் 2021 மகளிர் யூரோ டி20 உலகக் கோப்பை ரீஜனல் குவாலிபயர் தொடரில் பிரான்ஸ் அணிக்கு எதிராக நெதர்லாந்து அணி வீராங்கனை ப்ரெட்ரிக் ஓவர்டிஜ் 3 ரன்கள் கொடுத்து 7 விக்கெட்டுகள் எடுத்ததே முந்தைய சாதனையாகும்.

இதையும் படிங்க: விராட் கோலி, துபே, ரிங்குவுக்கு இடமில்லை.. தனது 2024 டி20 உ.கோ இந்திய அணியை வெளியிட்ட மஞ்ரேக்கர்

ஆனால் தற்போது 0 ரன்னுக்கு 7 விக்கெட்டுகள் எடுத்து ரோஹ்மாலியா படைத்துள்ள இந்த சாதனையை யாரும் அவ்வளவு சுலபமாக உடைக்க முடியாது என்றே சொல்லலாம். வேண்டுமானால் 0 ரன்னுக்கு 8 விக்கெட்டுகள் எடுத்தால் மட்டுமே அவருடைய சாதனையை உடைக்க முடியும். அந்த வகையில் 17 வயதிலேயே இவ்வளவு அற்புதமான சாதனை படைத்த அந்த வீராங்கனைக்கு ரசிகர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

- Advertisement -