முழுநேர கேப்டனாக மாறிய ரோஹித் சர்மாவின் தற்போதைய சம்பளம் எவ்வளவு தெரியுமா? – விவரம் இதோ

rohith
- Advertisement -

கடந்த டிசம்பர் 8ஆம் தேதி இந்திய அணியின் தேர்வு குழுவானது தென்னாப்பிரிக்க தொடருக்கான இந்திய டெஸ்ட் அணியை தேர்வு செய்து அறிவித்தது. விராட் கோலியின் தலைமையின் கீழ் 18 பேர்கொண்ட அணி அறிவிக்கப்பட்ட பின்னர் டி20 போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டு வரும் ரோகித் சர்மாவை தென்னாபிரிக்க சுற்றுப்பயணத்தின் ஒருநாள் தொடரிலும் கேப்டனாக நியமித்தது. இதன் காரணமாக விராட் கோலி ஒருநாள் கிரிக்கெட்டில் தனது கேப்டன் பதவியை இழந்துள்ளார். அதோடு இனிவரும் டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கு ரோகித் சர்மா கேப்டனாகவும், டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலி கேப்டனாகவும் செயல்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டது.

Rohith

- Advertisement -

எதிர்வரும் 26-ஆம் தேதி தென்னாப்பிரிக்க நாட்டில் துவங்கும் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கு பின்னர் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற உள்ளது. அந்த தொடரில் இருந்து முதல்முறையாக ரோகித் சர்மா t20 மற்றும் ஒருநாள் போட்டிகள் என இரண்டையும் சேர்த்து முழுநேர கேப்டனாக இந்திய அணிக்காக ஒயிட் பால் கிரிக்கெட்டில் செயல்பட இருக்கிறார். ஏற்கனவே விராட் கோலி டி20 கேப்டன் பதவியில் இருந்து விலகிய போதே பிசிசிஐ அவரை கேப்டன் பதவியிலிருந்து விலக வேண்டாம் என்று கேட்டுக் கொண்டது.

அதனை மதிக்காமல் விராத் கோலி கேப்டன் பதவியை ராஜினாமா செய்ததால் தேர்வுக்குழுவினர் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் தனித்தனி கேப்டன் இருப்பது நல்லதல்ல என்று எண்ணி இந்த கேப்டன் மாற்றத்தை செய்துள்ளனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்திய அணியின் முழுநேர கேப்டனாக செயல்பட இருக்கும் ரோகித் சர்மாவிற்கு நல்ல கேப்டன்சி திறன் இருப்பதாகவும், அதற்கு அவர் தகுதியானவர் என்பதனாலேயே அவர் அணிக்கு கேப்டனாக தேர்ந்தெடுக்கப் பட்டார் என்றும் பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்திருந்தார்.

rohith 1

இந்நிலையில் ரோகித் சர்மாவின் தற்போதைய சம்பளத்தில் ஏதேனும் மாற்றம் உள்ளதா என்கிற அடிப்படையில் ஒரு தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி ஏற்கனவே பிசிசிஐ காண்ட்ராக்ட் படி ஏ ப்ளஸ் (A+) பிரிவில் இருக்கும் ரோகித் சர்மா ஓராண்டுக்கு 7 கோடி ரூபாய் சம்பளம் பெற்று வருகிறார். தற்போது கூடுதலாக அவர் கேப்டன் பொறுப்பை ஏற்று செயல்பட்டாலும் அவரது சம்பள பட்டியலில் எந்தவித மாற்றமும் இருக்காது என்று கூறப்பட்டுள்ளது.

- Advertisement -

இதையும் படிங்க : ரஹானேவின் துணைக்கேப்டன் பதவியை பறிக்க இதுவே காரணம் – பி.சி.சி.ஐ போட்டுள்ள ஸ்கெட்ச்

ஒரு ஆண்டிற்கு ஏழு கோடி ரூபாய் பெறும் மூத்த வீரராகவே ரோஹித் அணியில் தொடர்வார் என்றும் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஐபிஎல் தொடரை பொறுத்தவரை 5 கோப்பைகளை கையில் வைத்திருக்கும் ரோகித் சர்மாவின் தலைமையில் நிச்சயம் இந்திய அணி ஐசிசி கோப்பையை வெல்ல வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement