இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் இரண்டாவது போட்டி நேற்று அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியும், நிக்கலஸ் பூரன் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் பூரன் முதலில் பந்து வீசுவதாக தீர்மானம் செய்யவே இந்திய அணி முதலாவதாக பேட்டிங் செய்தது.

அதன்படி இந்திய அணி முதலில் விளையாடி பெரிய ரன் குவிப்பில் ஈடுபடும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் இந்திய அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தனர். பின்னர் ராகுல் மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை ஓரளவு டீசன்ட்டான ரன் குவிப்பிற்கு அழைத்துச் சென்றனர். ராகுல் 49 ரன்களும், சூரியகுமார் யாதவ் 64 ரன்களும் குவித்தனர்.
இறுதியில் இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 237 ரன்கள் குவித்தது. பின்னர் 238 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணியானது 46 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 193 ரன்கள் மட்டுமே அடித்தது. இதன் காரணமாக 44 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

இந்த போட்டியில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணா சிறப்பாக பந்துவீசி 9 ஓவர்களில் 3 மெய்டன் ஓவர்கள் வீசி 12 ரன்கள் மட்டும் விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இதன் காரணமாக அவருக்கு ஆட்ட நாயகன் விருதும் வழங்கப்பட்டது. இந்நிலையில் போட்டி முடிந்து அவரது இந்த சிறப்பான பந்து வீச்சு குறித்து பாராட்டிப் பேசிய இந்திய அணியின் கேப்டன் ரோகித் கூறுகையில் :
இந்த போட்டியில் பிரசித் கிருஷ்ணா பந்து வீசிய விதம் மிகவும் பிரமாதமாக இருந்தது. நீண்ட நாட்களுக்கு பிறகு நான் இதுபோன்ற ஒரு அட்டகாசமான பௌலிங் ஸ்பெல்லை பார்க்கிறேன். இது போன்ற சிறப்பான பந்துவீச்சை நீண்ட நாட்களுக்கு பிறகு தற்போது தான் நமது அணியில் பார்க்கிறேன். அவர் அதி வேகமாகப் பந்து வீசுகிறார். அதோடு சரியான லைன் மற்றும் லென்த்தில் அவருடைய இன்றைய பந்துவீச்சு மிகவும் அட்டகாசமாக இருந்தது.
இதையும் படிங்க : தோத்தாலும் பரவாயில்ல. அடுத்த போட்டியில் அவர் விளையாடுவாரு – உறுதி செய்த கேப்டன் ரோஹித் சர்மா
அணியில் உள்ள மற்ற பந்து வீச்சாளர்களும் அவருக்கு உதவி செய்யவே அவரால் சிறப்பாக பந்துவீசி முடிகிறது என்று ரோஹித் கூறினார். மேலும் இந்திய அணியில் 5 பவுலர்கள் இருந்தாலும் தீபக் சாஹர் எப்போதுமே அணியுடன் 6-ஆவது பவுலராக இருப்பார் என்றும் இனி இந்திய அணியில் பவுலர்கள் சுழற்சி முறையில் வாய்ப்புகளை பெறுவார்கள் எனவும் ரோஹித் சர்மா கூறியது குறிப்பிடத்தக்கது.



