கேப்டனாக இருந்தாலும் இப்படியா நடந்துக்குறது? கேப்டன் ரோஹித் மீது எழும் கண்டனம் – என்ன நடந்தது

Rohith
- Advertisement -

வெஸ்ட்இண்டீஸ் அணிக்கு எதிராக இந்தியா பங்கேற்று வரும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த பிப்ரவரி 16ஆம் தேதி துவங்கிய இந்த தொடரின் முதல் 2 போட்டிகளில் மிகச் சிறப்பாக செயல்பட்ட ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா அடுத்தடுத்த வெற்றிகளை பெற்று 2 – 0* என்ற கணக்கில் முன்னிலை பெற்று கோப்பையை கைப்பற்றியுள்ளது.

முன்னதாக இந்த தொடரில் முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றதால் இத்தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் முக்கியமான 2வது போட்டி நேற்று கொல்கத்தாவில் நடைபெற்றது. அதில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 186/5 ரன்களை சேர்த்தது. அதிகபட்சமாக இந்தியாவிற்கு விராட் கோலி மற்றும் ரிஷப் பண்ட் ஆகிய இருவருமே தலா 52 ரன்கள் விளாசினார்கள்.

- Advertisement -

பரபரப்பில் இந்தியா வெற்றி:
இதை தொடர்ந்து 187 ரன்கள் என்ற இலக்கை துரத்திய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு தொடக்க வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றிய போதிலும் மிடில் ஆர்டரில் மிரட்டிய நிக்கோலஸ் பூரான் 62 ரன்கள் எடுத்து வெற்றிக்காக போராடினார். இறுதியில் மிரட்டலாக பேட்டிங் செய்த அந்த அணியின் ரோவ்மன் போவல் 68* ரன்களை விளாசி தனது அணியை வெற்றியின் விளிம்பு வரை அழைத்துச் சென்றதால் கடைசி நேரத்தில் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டது.

அந்த பரபரப்பான சூழ்நிலையில் கடைசி ஓவரில் வெற்றிக்கு 25 ரன்கள் தேவைப்பட்ட போது வெஸ்ட்இண்டீஸ் 16 ரன்கள் மட்டுமே எடுத்ததால் இந்தியா 8 ரன்கள் வித்தியாசத்தில் கடைசி ஓவரில் திரில் வெற்றியை பெற்றது. இதன் காரணமாக ஒருநாள் தொடரை தொடர்ந்து இந்த டி20 தொடரையும் கைப்பற்றியுள்ள ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா சொந்த மண்ணில் அபார வெற்றி பெற்று ரசிகர்களை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது.

- Advertisement -

புவியிடம் கோப்பட்ட ரோஹித் சர்மா:
முன்னதாக இந்தப் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் 2வதாக பேட்டிங் செய்து கொண்டிருக்கும் போது 16வது ஓவரை இந்தியாவின் நட்சத்திர அனுபவ வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் வீசினார். அப்போது அந்த ஓவரின் 5-வது பந்தை எதிர்கொண்ட ரோவ்மன் போவல் அதை சிக்சராக பறக்கவிட முயன்றார். ஆனால் அந்தப் பந்து கேட்ச்சாக மாறி மிகவும் உயரத்திற்கு சென்றபின் பந்து வீசிய புவனேஷ்வர் குமாரின் கைக்கு சென்றது. ஆனால் இரவு நேரம் என்பதால் பனியின் தாக்கம் இருக்கும் என்பதால் மிக உயரத்தில் சென்ற பின் கைக்கு வந்த அந்த கேட்ச்சை புவனேஸ்வர் குமார் தவற விட்டுவிட்டார்.

அதே சமயம் அந்த இடத்தின் அருகில் இருந்த கேப்டன் ரோகித் சர்மா புவனேஸ்வர் குமார் கேட்சை தவற விட்டதால் மிகவும் கோபமடைந்து அந்த பந்தை புவனேஸ்வர் குமார் மீது படும் அளவுக்கு எட்டி உதைத்தார். பின்பகுதியில் அதை பிடிக்க எந்த பீல்டரும் இல்லாத நிலையில் கடும் ஆக்ரோஷத்துடன் கோபத்தால் ரோகித் சர்மா எட்டி உதைத்த அந்த பந்தை பிடிக்க யாரும் இல்லாத காரணத்தால் வெஸ்ட்இண்டீஸ் அணிக்கு ஒரு எக்ஸ்ட்ரா ரன் கிடைத்தது.

- Advertisement -

ரசிகர்கள் கண்டனம்:
ரோஹித் சர்மாவின் இந்த செயல் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அத்துடன் என்னதான் கேப்டனாக இருந்தாலும் ஒரு சீனியர் வீரராக இருக்கும் புவனேஸ்வர் குமாரிடம் ரோகித் சர்மா இவ்வாறு நடந்து கொள்ளலாமா என்ற நியாயமான கண்டனத்தை இந்திய ரசிகர்கள் சமூக வலைதளங்களில் முன்வைக்கிறார்கள்.

இத்தனைக்கும் தொடர்ந்து நடந்த அந்த போட்டியில் கடைசி 2 ஓவர்களில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் வெற்றிக்கு 29 ரன்கள் தேவைப்பட்ட போது 19-வது ஓவரை வீசிய புவனேஸ்வர் குமார் தனது அனுபவமான பந்துவீச்சால் 4 ரன்கள் மட்டுமே கொடுத்து இந்தியாவின் வெற்றியை கிட்டத்தட்ட உறுதி செய்தார். இறுதியில் கடைசி ஓவரில் வெற்றிக்கு 25 ரன்கள் தேவைப்பட்ட போது அந்த ஓவரை வீசிய ஹர்ஷல் படேல் அதில் 16 ரன்களை கொடுத்து இந்தியாவை 8 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெறச் செய்தார்.

இதையும் படிங்க : INDvsSL : புதிய டெஸ்ட் கேப்டன் அறிவிப்பு – 4 சீனியர் வீரர்கள் நீக்கம்! முழு இந்திய டெஸ்ட்,டி20 அணி அறிவிப்பு

மொத்தத்தில் என்னதான் கையில் கிடைத்த கேட்ச்சை புவனேஸ்வர் குமார் கோட்டை விட்டாலும் 19வது ஓவரில் மிகச் சிறப்பாக பந்துவீசி இந்தியாவின் வெற்றியில் மிக முக்கிய பங்காற்றினார். எனவே அவரிடம் இனிமேல் கேப்டனாக இருந்தாலும் கூட ரோகித் சர்மா அவ்வாறு நடந்து கொள்ளக்கூடாது என இந்திய ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கேட்டுக் கொள்கிறார்கள்.

Advertisement