சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி அவ்வப்போது நடைபெற்று முடியும் தொடர்களின் அடிப்படையில் தரவரிசை பட்டியலை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் தற்போது இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் முடிந்த பின்னர் டெஸ்ட் கிரிக்கெட்டில் பேட்ஸ்மேன்களின் தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன்படி ஐசிசி வெளியிட்டுள்ள இந்தப் பட்டியலில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி கடந்த பல ஆண்டுகளுக்குப் பின்னர் ஆறாவது இடத்திற்கு சென்றுள்ளார்.

766 புள்ளிகளுடன் ஆறாவது இடத்தில் விராட் கோலியும், அவரை தாண்டி ரோகித் சர்மா 773 புள்ளிகளுடன் 5-வது இடத்தையும் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்திய அணிக்கு எதிரான இந்தத் தொடரில் முதல் மூன்று போட்டிகளிலும் சதம் விளாசிய ஜோ ரூட் ஆறு ஆண்டுகளுக்கு பிறகு தற்போது டெஸ்ட் கிரிக்கெட் முதல் இடத்தை பிடித்துள்ளார்.
916 புள்ளிகளுடன் முதலிடத்திலும் அவரை தொடர்ந்து வில்லியம்சன், ஸ்டீவ் ஸ்மித், லாபுஷேன் ஆகியோர் 2, 3, 4 ஆகிய இடத்தில் உள்ளனர். டெஸ்ட் கிரிக்கெட்டில் எப்போதும் சரிவை கண்டிராத விராட் கோலி இந்த இங்கிலாந்து தொடரில் தனது மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் அவர் தரவரிசைப் பட்டியலில் பின்தங்கியுள்ளார்.

அதே வேளையில் ரோகித் சர்மா சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதால் அவர் ஐந்தாவது இடத்தில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. பந்துவீச்சாளர்கள் வரிசையில் கம்மின்ஸ் முதலிடத்திலும், ரவி அஷ்வின் இரண்டாவது இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
அதுமட்டுமின்றி பந்துவீச்சாளர்கள் பட்டியலில் முதல் 10 இடங்களில் இருக்கும் ஒரே ஒரு ஸ்பின்னரும் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.



