ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது கடந்த மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் தொடரில் பங்கேற்று விளையாடியது. இந்த தொடரின் முதலாவது போட்டியை தனது இரண்டாவது குழந்தை பிறப்பின் காரணமாக தவறவிட்ட இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா அதன் பின்னர் மீண்டும் இந்திய அணியில் இணைந்து விளையாடினார்.
ரோஹித் எடுத்த முடிவால் கம்பீர் அதிருப்தி :
இருப்பினும் அந்த தொடரில் தனது மோசமான பேட்டிங் பார்மினை வெளிப்படுத்திய அவர் ஐந்தாவது போட்டிக்கு முன்னதாக தானாகவே இந்திய அணியில் இருந்து விலகி பும்ராவை கேப்டனாக செயல்பட வைத்தார். இதன் காரணமாக அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் முடிவை எடுத்து விட்டார் என்றும் பலரும் பேசினர்.
ஆனால் சிட்னியில் நடைபெற்று முடிந்த ஐந்தாவது டெஸ்ட் போட்டிக்கு பிறகு பேசிய ரோஹித் சர்மா : தான் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறப்போவதில்லை என்றும் வெளியில் உள்ளவர்கள் என்னுடைய ஓய்வு முடிவை எடுக்கக் கூடாது என்றும் தெளிவுபடுத்தி இருந்தார். ஆனால் தற்போது வெளியான ஒரு தகவலின் படி :
நான்காவது டெஸ்ட் போட்டிக்கு பின்னர் இந்திய டிரெஸ்ஸிங் ரூமில் என்ன நடந்தது? என்பது குறித்த சில சுவாரஸ்யமான தகவல்கள் வெளியாகி உள்ளன. அந்த வகையில் ஆஸ்திரேலியா அணிக்கெதிரான நான்காவது டெஸ்ட் போட்டி முடிந்த பிறகு ரோகித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற முடிவெடுத்ததாகவும் ஆனால் அவருடைய நலம் விரும்பிகள் கேட்டுக்கொண்டதால் ஓய்வு முடிவை ரோகித் சர்மா திரும்பப் பெற்றதாகவும் கூறப்படுகிறது.
அந்த வகையில் வெளியான தகவலின் படி : நான்காவது டெஸ்ட் போட்டி முடிந்த உடனே ரோகித் சர்மா ஓய்வு முடிவை அறிவிக்க தயாராகினார் என்றும் ஆனால் அவரது நலம் விரும்பிகள் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்கள் இன்னும் சில காலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடலாம் என்று அவரை சமாதானப்படுத்தியதாலே ரோகித் சர்மா தனது ஓய்வு முடிவிலிருந்து யு டர்ன் அடித்துள்ளார்.
இதையும் படிங்க : சாம்பியன்ஸ் டிராபி தொடரை கருத்தில் கொண்டு 2 முக்கிய இந்திய வீரர்களுக்கு ஓய்வளிக்க திட்டம் – விவரம் இதோ
இந்த முடிவு இந்திய அணியின் பயிற்சியாளரான கௌதம் கம்பீருக்கு பிடிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. ஏனெனில் தற்போது இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு செல்லும் வாய்ப்பை தவற விட்டதால் இந்திய அணி அடுத்த கட்டத்தை நோக்கி தயாராக உள்ளது. எனவே கௌதம் கம்பீர் இளம் வீரர்களை இந்திய அணியில் இணைக்க நினைத்ததாகவும் ஆனால் ரோகித் சர்மா தனது முடிவை திரும்ப பெற்றதால் கம்பீர் அதிருப்தி அடைந்ததாகவும் அந்த தகவல்கள் கூறுகின்றன.