
ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் மூன்று போட்டிகள் முடிவடைந்துள்ள வேளையில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியினை பெற்று இந்த தொடரில் சமநிலையில் இருக்கின்றன. அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டியானது வருகிற டிசம்பர் 26-ஆம் தேதி மெல்போர்ன் நகரில் பாக்சிங் டே போட்டியாக நடைபெற உள்ளது.
கிறிஸ்துமஸ் தினத்திற்கு அடுத்த நாள் நடைபெறும் இந்த “பாக்சிங் டே” டெஸ்ட் போட்டி ரசிகர்கள் மத்தியில் சுவாரசியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த தொடரின் முதல் போட்டியில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆட்டமிழக்காமல் சதம் அடித்து அசித்திருந்த விராட் கோலி எஞ்சிய தொடரிலும் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இவ்வேளையில் நடைபெற்று முடிந்த இரண்டாவது மற்றும் மூன்றாவது டெஸ்ட் போட்டிகளில் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். மேலும் ஆஸ்திரேலியா வீரர்கள் தொடர்ச்சியாக ஆப் சைடில் பந்து வீசி விராட் கோலியின் விக்கட்டுகளை எளிதாக கைப்பற்றி வருகின்றனர்.
இந்நிலையில் விராட் கோலி சமீப காலமாக இப்படி ஆப் சைடில் வரும் பந்துகளில் ஆட்டமிழப்பது குறித்து இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவிடம் பத்திரிகையாளர் சந்திப்பின்போது கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த ரோஹித் சர்மா கூறுகையில் :
நவீன கிரிக்கெட்டில் விராட் கோலி மிகச் சிறப்பான ஒரு வீரர். அவர் எப்படி ரன்களை சேர்க்க வேண்டும் என்ற வழியை நிச்சயம் கண்டு பிடிப்பார். யார் எங்கு பேட் செய்கிறார்கள்? எப்படி விளையாடுகிறார்? என்கிற கவலை உங்களுக்கு வேண்டாம். நிச்சயம் எங்கள் வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள் என ரோகித் சர்மா சிறப்பான பதிலை வெளிப்படுத்தினார்.
இதையும் படிங்க : ஆஸ்திரேலிய தொடரில் முகமது ஷமி இடம்பெற வாய்ப்பே இல்ல.. பி.சி.சி.ஐ கூறுவது என்ன? – விவரம் இதோ
மேலும் தனக்கு ஏற்பட்ட காயம் குறித்து பேசிய ரோஹித் சர்மா கூறுகையில் : வலைப்பயிற்சியின் போது எனக்கு காயம் ஏற்பட்டது உண்மைதான். ஆனால் தற்போது நான் நலமுடன் உள்ளேன் என்றும் அந்த கேள்விக்கும் ரோஹித் சர்மா முற்றுப்புள்ளி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.