இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், நட்சத்திர வீரருமான ரோகித் சர்மா ஏற்கனவே டி20 மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்ற வேளையில் தொடர்ச்சியாக ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடி வருகிறார். அதிலும் குறிப்பாக தற்போது 38 வயதாகும் ரோகித் சர்மா அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் 2027 ஒருநாள் உலக கோப்பை தொடரில் விளையாடி விட்டு ஓய்வை அறிவிக்கலாம் என்ற முடிவில் இருக்கிறார்.
ஜாக் காலிஸை பின்னுக்கு தள்ள காத்திருக்கும் ரோஹித் சர்மா :
இதன் காரணமாக தற்போது ஒருநாள் போட்டிகளில் மிகுந்த கவனத்துடன் தொடர்ந்து சிறப்பாகவும் விளையாடி வருகிறார். அதோடு அடுத்த ஆண்டு வரை முழு உடற்தகுதியுடன் இருக்க வேண்டும் என தனது உடல் எடையையும் குறைத்து பிட்னஸிலும் கவனம் செலுத்தி வருகிறார்.
நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று முடிந்த முதலாவது போட்டியில் 29 பந்துகளை சந்தித்த அவர் 3 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர் என 26 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தாலும் அவரது பேட்டிங் மிகச்சிறப்பாக இருந்தது. இந்நிலையில் நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் விளையாட இருக்கும் அவர் மாபெரும் சாதனை ஒன்றினை நிகழ்த்த காத்திருக்கிறார்.
அதிலும் குறிப்பாக தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் ஜாம்பவானான ஜாக் காலிஸை கடந்து அவர் இந்த சாதனையை நிகழ்த்த இருக்கிறார். அந்த வகையில் ரோஹித் சர்மா நிகழ்த்தப்போகும் சாதனை யாதெனில் : இந்திய அணிக்காக சர்வதேச ஒருநாள் போட்டிகளில் கடந்த 2007-ஆம் ஆண்டு அறிமுகமான அவர் இதுவரை 280 போட்டிகளில் விளையாடி 33 சதம் மற்றும் 61 அரைசதம் என 11,542 ரன்களை குவித்துள்ளார்.
இதன் மூலம் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த வீரர்களின் பட்டியலில் அவர் தற்போது ஒன்பதாவது இடத்தில் இருக்கிறார். அவருக்கு முன்னதாக எட்டாவது இடத்தில் ஜேக் காலிஸ் இருக்கிறார். காலிஸ் 328 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 11,579 ரன்களை குவித்துள்ளார். அவரது இந்த ரன்களை கடக்க இன்னும் ரோகித் சர்மாவிற்கு 38 ரன்கள் மட்டுமே தேவை.
இதையும் படிங்க : 2 சிக்ஸ் தான் தேவை.. ஷாஹித் அப்ரிடியை பின்னுக்கு தள்ள காத்திருக்கும் ஹிட்மேன் ரோஹித் சர்மா – விவரம் இதோ
அப்படி நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் அவர் இந்த 38 ரன்களை அடிக்கும் பட்சத்தில் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்களை குவித்த வீரர்களின் பட்டியலில் எட்டாவது இடத்தில் இருக்கும் ஜாக் காலிசை பின்னுக்கு தள்ளி அவர் அந்த எட்டாவது இடத்தை பிடிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது .



