சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது சொந்த மண்ணில் நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதலாவது ஒருநாள் போட்டி ஏற்கனவே வடோதரா நகரில் நடைபெற்று முடிந்த வேளையில் அந்த போட்டியில் அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தியிருந்தது.
அப்ரிடியின் சாதனையை தகர்க்கவுள்ள ரோஹித் சர்மா :
அந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட இந்த ஒருநாள் தொடரின் தற்போதைய நிலையில் இந்திய அணியானது ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டியானது ஜனவரி 14-ம் தேதி ராஜ்கோட் நகரில் நடைபெற இருக்கிறது.
இந்நிலையில் இந்த இரண்டாவது ஒருநாள் போட்டியில் விளையாட இருக்கும் இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், நட்சத்திர துவக்க வீரருமான ரோஹித் சர்மா மாபெரும் சாதனை ஒன்றினை சர்வதேச ஒருநாள் போட்டிகளில் நிகழ்த்த காத்திருக்கிறார்.
ஏற்கனவே நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று முடிந்த முதலாவது போட்டியில் 301 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கினை துரத்துகையில் துவக்க வீரராக விளையாடிய ரோகித் சர்மா 29 பந்துகளில் 26 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அதில் 3 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும்.
இந்நிலையில் இரண்டாவது ஒருநாள் போட்டியின் போது அவர் நிகழ்த்த காத்திருக்கும் சாதனை யாதெனில் : இதுவரை நியூசிலாந்து அணிக்கு எதிராக மட்டும் 32 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள ரோஹித் சர்மா 49 சிக்ஸர்களை அடித்துள்ளார். மேலும் அவர் 1 சிக்ஸர் அடிக்கும் பட்சத்தில் நியூசிலாந்து அணிக்கு எதிராக மட்டும் 50 சிக்ஸர்களை அடித்த வீரராக மாறுவார்.
இதையும் படிங்க : ஆயுஷ் பதோனியை இந்திய அணிக்கு தேர்வு செய்தது ஏன்? பேட்டிங் கோச் அளித்த பேட்டி – விவரம் இதோ
பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரான ஷாஹித் அப்ரிடி நியூசிலாந்து அணிக்கெதிராக மட்டும் 38 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 50 சிக்ஸர்களை அடித்துள்ளார். அந்த சாதனையை முறியடிக்க இன்னும் ரோகித் சர்மாவுக்கு 2 சிக்ஸர்கள் மட்டுமே தேவை. அடுத்த போட்டியில் ரோஹித் 2 சிக்ஸர்களை அடிக்கும் பட்சத்தில் ஷாஹித் அப்ரிடியின் சாதனையை முறியடிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.



