ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையில் இந்திய கிரிக்கெட் அணி தங்களுடைய முதல் போட்டியில் அயர்லாந்தை தோற்கடித்தது. அதைத் தொடர்ந்து இந்தியா தங்களுடைய அடுத்த போட்டியில் ஜூன் ஒன்பதாம் தேதி பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. இந்த உலகக் கோப்பையில் கத்துக்குட்டியான அமெரிக்காவிடம் முதல் போட்டியில் தோற்ற பாகிஸ்தான் தற்சமயத்தில் மிகப்பெரிய விமர்சனத்தையும் அழுத்தத்தையும் சந்தித்து வருகிறது.
அதை பயன்படுத்தி இம்முறையும் பாகிஸ்தானை தோற்கடித்து இந்தியா வெற்றி வாகை சூடும் என்று ரசிகர்கள் நம்புகின்றனர். ஆனால் அந்தப் போட்டி நடைபெறும் நியூயார்க் மைதானத்தை நினைக்கும் போது தான் ரசிகர்களுக்கு கவலையும் ஏமாற்றமும் ஏற்படுகிறது. ஏனெனில் இந்த உலகக் கோப்பைக்காக நியூயார்க் நகரில் பிரத்தியேகமாக 3 மாதத்தில் புதிய மைதானம் உருவாக்கப்பட்டது.
ரோஹித் அதிருப்தி:
அதில் தற்காலிகமாக செயற்கையான பிட்ச் பொருத்தப்பட்டுள்ளது. ஆனால் அது வழக்கத்திற்கு மாறாக பவுலர்களுக்கு அதிக சாதகமாக இருந்து வருகிறது. அதன் காரணமாக இலங்கையை 77 ரன்களுக்கு சுருட்டிய தென்னாப்பிரிக்கா அதை சேசிங் செய்ய 16 ஓவர்கள் எடுத்துக் கொண்டது. அதே போல அயர்லாந்தை 96 ரன்கள் சுருட்டிய இந்தியா ஒரு தலைப்பட்சமாக வென்றது.
அதனால் நியூயார்க் மைதானம் மோசமாக இருப்பதாக மைக்கேல் வாகன், வாஷிம் ஜாபர் போன்ற பல முன்னாள் வீரர்கள் விமர்சித்தனர். அதை ஏற்றுக்கொண்ட ஐசிசி இந்தியா – பாகிஸ்தான் போட்டிக்கு முன் பிட்ச் சீரமைக்கப்படும் என்று உறுதியளித்தது. ஆனால் ஜூன் 8ஆம் தேதி அதே மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் நெதர்லாந்தை 103 ரன்களுக்கு சுருட்டிய தென்னாப்பிரிக்கா அதை சேசிங் செய்வதற்கு 18.5 ஓவர்கள் எடுத்துக் கொண்டது.
இந்நிலையில் நியூயார்க் பிட்ச் எப்படி இருக்கும் என்பது அதை உருவாக்கிய மைதான பராமரிப்பாளர்களுக்கே தெரியவில்லை என ரோஹித் சர்மா ஐசிசி’யை கடுமையாக விமர்சித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “பாகிஸ்தான் போட்டியில் எந்த பிட்ச் இருக்கும் என்பது பற்றி எங்களுக்கு ஒன்றுமே தெரியவில்லை. நாங்கள் மைதானப் பராமரிப்பாளர்களிடம் அது பற்றி பேசினோம். ஆனால் ஒவ்வொரு அடியும் எப்படி பிரதிபலிக்கும் என்பது தெரியாமல் அவர்களே குழப்பமடைந்துள்ளனர்”
இதையும் படிங்க: ரோஹித் சர்மா அவரை தப்பா யூஸ் பண்றாரு.. வெ.இ போறதுகுள்ள இந்திய அணி மாறனும்.. சித்து கோரிக்கை
“அது போன்ற சூழ்நிலையில் செயற்கையான பிட்ச்களை பற்றி அதிகம் தெரியாத நாட்டில் இருந்து வந்த எங்களைப் போன்றவர்களின் நிலைமையை கற்பனை செய்து பாருங்கள். நியூயார்க் பிட்ச்சில் நேராகச் சென்று சுதந்திரமாக அல்லது பேட்டை சுழற்றி அடிக்கலாம் என்ற உணர்வு உங்களுக்கு வரவில்லை. எனவே நீங்கள் கவனத்துடன் இருக்க வேண்டியுள்ளது. அங்கே தான் நான் என்னுடைய அனுபவத்தை பயன்படுத்தி விளையாட விரும்புகிறேன்” என்று கூறினார்.



