இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரானது தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் தோல்வியை சந்தித்த இந்திய அணி அதன்பிறகு விசாகப்பட்டினம் மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது போட்டியின் மூலம் வெற்றி பெற்று மிகச் சிறப்பான சம்பேக்கை கொடுத்திருந்தது.
அதனை தொடர்ந்து ராஜ்கோட் நகரில் நடைபெற்று முடிந்த மூன்றாவது டெஸ்ட் போட்டியில் 434 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றியை பெற்று சாதனை நிகழ்த்திய இந்திய அணி இந்த தொடரிலும் இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் முன்னிலை வகித்துள்ளது. இந்த மூன்றாவது டெஸ்ட் போட்டியின் போது மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியின் துவக்க வீரரான யாஷஸ்வி ஜெய்ஸ்வால் இரண்டாவது இன்னிங்ஸில் 236 பந்துகளை சந்தித்து 14 பவுண்டரி மற்றும் 12 சிக்ஸர்கள் என 214 ரன்கள் குவித்து அசத்தினார்.
இந்த தொடர் முழுவதுமே மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் அவர் ஒரே தொடரில் இரண்டு இரட்டை சதங்கள், ஒரு டெஸ்ட் தொடரில் அதிகபட்ச சிக்சர் (22), ஒரு இன்னிங்ஸில் அதிக சிக்சர் (12) மற்றும் முதல் மூன்று டெஸ்ட் சதங்களையுமே 150+ ரன்கள் குவித்த முதல் இந்திய வீரர் என பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியுள்ளார்.
அவரது இந்த அற்புதமான ஆட்டத்தை அனைவரும் கொண்டாடி பாராட்டுகளை தெரிவித்து வரும் வேளையில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஜெய்ஸ்வால் குறித்து சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் : நான் முன்பே ஜெய்ஸ்வால் பற்றி நிறைய பேசியிருக்கிறேன்.
எனக்குத் தெரியும் எங்கள் ட்ரெஸ்ஸிங் ரூமிற்கு வெளியே உள்ள அனைவரும் அவரைப் பற்றி நிச்சயம் பேசுவார்கள் என்று. ஏனெனில் ஜெய்ஸ்வால் அவ்வளவு திறமை வாய்ந்த வீரர். ஆனால் நான் அவரைப் பற்றி எதுவும் பேசாமல் அமைதியாகவே இருக்க விரும்புகிறேன். அவரைப் பற்றி அதிகம் பேச தேவையில்லை. அவர் தன்னுடைய கரியரை இப்பொழுது உயர் ரகமாக துவங்கி உள்ளார் என ரோகித் சர்மா கூறியது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : அந்த எண்ணத்துடன் இந்தியாவிடம் மோதாதீங்க.. எல்லாரும் நீங்களாக முடியாது.. மெக்கல்லம் – ஸ்டோக்ஸை விமர்சித்த ஸ்ரீகாந்த்
கடந்த சில ஆண்டுகளாகவே நல்ல இடதுகை துவக்க வீரர் இந்திய அணிக்கு கிடைக்காமல் இருந்து வரும் வேளையில் ஷிகர் தவானுக்கு அடுத்து மிகச்சிறந்த இடதுகை துவக்க வீரராக மாற ஜெய்ஸ்வாலுக்கு அதிகளவில் வாய்ப்பு இருப்பதும், நிச்சயம் அவர் மிகப்பெரிய ஸ்டாராக மாறுவார் என்பதிலும் சந்தேகம் கிடையாது.