ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலக கோப்பை தொடரில் இந்திய அணி ஏற்கனவே பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இந்த தொடரில் ஒரு வெற்றியை பதிவு செய்திருந்த வேளையில் இன்று இந்தியா மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது போட்டி சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியானது முதலில் பேட்டிங்கை தீர்மானம் செய்தது. அதன்படி முதலில் விளையாடிய இந்திய அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 179 ரன்களை குவித்தது.

இந்திய அணி சார்பாக அதிகபட்சமாக விராட் கோலி 62 ரன்களும், சூரியகுமார் யாதவ் 51 ரன்களும், கேப்டன் ரோஹித் சர்மா 53 ரன்களையும் குவித்து அசத்தினர். பின்னர் 180 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய நெதர்லாந்து அணியானது 20 ஓவர்களின் முடிவில் ஒன்பது விக்கெட்டுகளை இழந்து 123 ரன்களை மட்டுமே குவித்ததன் காரணமாக 56 ரன்கள் வித்தியாசத்தில் இந்த போட்டியில் தோல்வியை சந்தித்தது.
இந்திய அணி சார்பாக புவனேஸ்வர் குமார், அர்ஷ்தீப் சிங், அக்சர் பட்டேல் மற்றும் அஷ்வின் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர். இந்நிலையில் இந்த போட்டி முடிந்து வெற்றி குறித்து பேசிய இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா கூறுகையில் : நாங்கள் மிகவும் அதிர்ஷ்டக்காரர்கள் என்று நினைக்கிறேன். ஏனெனில் அண்மையில் பாகிஸ்தான் அணிக்கு எதிராகப் பெற்ற ஸ்பெஷல் வெற்றிக்கு பிறகு தற்போது மீண்டும் ஒரு வெற்றி கிடைத்துள்ளது.

இந்த வெற்றி எங்களுக்கு முக்கியமான ஒன்று. நாங்கள் சிட்னிக்கு வந்து ஒரு ஆட்டத்தில் முழு கவனத்தை செலுத்தி இந்த இரண்டு புள்ளிகளை பெற்றதில் மிகவும் மகிழ்ச்சி. இந்த வெற்றி எங்களுக்கு பூரணமான வெற்றியாக நினைக்கிறேன். ஏனெனில் சூப்பர் 12 சுற்றுக்கு அவர்கள் வந்துள்ளது மிகப்பெரிய விடயம். அவர்களுக்கும் பாராட்டுகளை தெரிவித்தாக வேண்டும். எந்த ஒரு எதிரணியையும் நாங்கள் எளிதாக எடுத்துக் கொள்ளப்போவதில்லை.
உண்மையை சொல்ல வேண்டும் என்றால் இந்த போட்டியில் மைதானம் ஆரம்பத்தில் கொஞ்சம் ஸ்லோவாக இருந்தது. அதன் பின்னர் நானும் விராட் கோலியையும் களத்தில் சற்று நேரம் நின்று மைதானத்தை கணித்து பெரிய ஷாட்டுகளை விளையாடிக் கொள்ளலாம் என்று பேசிக் கொண்டோம். அதன் காரணமாகவே விராட் கோலியும், நானும் சற்று வெயிட் பண்ணினோம்.
இதையும் படிங்க : இம்முறை வருண பகவானை விமர்சிக்கலயா – ரசிகர்களுடன் சேர்ந்து இங்கிலாந்தை கலாய்க்கும் இந்திய வீரர்கள்
இந்த அரை சதம் எனக்கு மகிழ்ச்சி அளிக்கவில்லை. இருந்தாலும் இது அணியின் வெற்றிக்கு முக்கியமாக அமைந்ததால் அதனை நான் எடுத்துக் கொள்கிறேன். இறுதியில் இந்த போட்டியில் வெற்றி பெற்றது எங்களுக்கு இன்னும் நம்பிக்கை அளிக்கிறது என்று ரோஹித் சர்மா பேசியது குறிப்பிடத்தக்கது.



