இம்முறை வருண பகவானை விமர்சிக்கலயா – ரசிகர்களுடன் சேர்ந்து இங்கிலாந்தை கலாய்க்கும் இந்திய வீரர்கள்

- Advertisement -

ஆஸ்திரேலியாவில் எதிர்பாராத திருப்பங்களுடன் நடைபெற்று வரும் 2022 ஐசிசி டி20 உலக கோப்பையில் அக்டோபர் 26ஆம் தேதியன்று நடைபெற்ற முதல் போட்டியில் வலுவான இங்கிலாந்தை எதிர்கொண்ட அயர்லாந்து வெறும் 5 ரன்கள் வித்தியாசத்தில் அற்புதமான வெற்றியை பதிவு செய்த அசத்தியது. மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து கேப்டன் ஆண்டி பால்பிரிண் 62 (47) ரன்களை அதிரடியாக குவித்ததால் ஒரு கட்டத்தில் 103/1 என்ற வலுவான நிலையில் இருந்தது. ஆனால் அதன்பின் அபாரமாக பந்து வீசிய இங்கிலாந்து 19.2 ஓவர்களில் அயர்லாந்தை வெறும் 157 ரன்களுக்குள் சுருட்டி மிரட்டியது.

அந்தளவுக்கு கடைசி நேரங்களில் அற்புதமாக பந்து வீசிய இங்கிலாந்தின் சார்பில் அதிகபட்சமாக மார்க் வுட் மற்றும் லியம் லிவிங்ஸ்டன் தலா 3 விக்கெட்டுகளை எடுத்தனர். அதைத்தொடர்ந்து 158 ரன்களை துரத்திய இங்கிலாந்தை அதிரடியாக ரன்களை குவிக்க விடாமல் ஆரம்பம் முதலே அற்புதமாகப் பந்து வீசிய அயர்லாந்து முக்கிய விக்கெட்டுகளை எடுத்து மடக்கி பிடித்தது. குறிப்பாக கேப்டன் ஜோஸ் பட்லர் 0 (2) அலெஸ் ஹேல்ஸ் 7 (5) பென் ஸ்டோக்ஸ் 6 (8) என 3 முக்கிய பேட்ஸ்மேன்களை ஆரம்பத்திலேயே ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாக்கியது. அதனால் 29/3 என்ற மோசமான தொடக்கத்தை பெற்று திணறிய அந்த அணியை காப்பாற்ற முயன்ற ஹரி ப்ரூக் 18 (21) ரன்களும் டேவிட் மாலன் 35 (37) ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தார்.

- Advertisement -

அசத்திய வருண பகவான்:
அதனால் 86/5 என மேலும் தடுமாறிய அந்த அணியை அடுத்ததாக களமிறங்கிய மொயீன் அலி 3 பவுண்டரி 1 சிக்சருடன் அதிரடியாக 24* (12) ரன்கள் குவித்து வெற்றிக்காக போராடிய போது ஜோராக வந்த மழை போட்டியை மொத்தமாக நிறுத்தியது. அப்போது நிர்ணயிக்கப்பட்ட நேரம் முடிந்ததால் இங்கிலாந்து 10 ஓவர்களை விளையாடி விட்டதால் டக்வொர்த் லீவிஸ் முறை கடைபிடிக்கப்பட்டது. அதில் 14.3 ஓவரில் 105/5 என்ற நிலையிலிருந்து இங்கிலாந்து அயர்லாந்தை விட 5 ரன்கள் குறைவாக இருந்ததால் தோல்வியை தழுவியது.

இருப்பினும் மொயின் அலி, லிவிங்ஸ்டன் என்று 2 முரட்டு அடி வீரர்கள் களத்தில் இருந்ததால் மேற்கொண்டு தேவைப்பட்ட 33 பந்துகளில் 53 ரன்களை எடுத்து தங்களது அணி வென்றிருக்கும் என முன்னாள் இங்கிலாந்து வீரர்களும் ரசிகர்களும் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்கள். மறுபுறம் நேர்மையாக விளையாடி வெற்றி பெற காத்திருந்த உங்களது வெற்றியை மழை வந்ததால் தடுத்து நிறுத்திய டக்வொர்த் லீவிஸ் விதிமுறை நேர்மைக்கு எதிரானதென்று விமர்சிக்க மாட்டீர்கள் என நம்புவதாக முன்னாள் இந்திய வீரர் அமித் மிஸ்ரா தனது டுவிட்டரில் கடுமையாக கலாய்த்தார்.

- Advertisement -

ஏனெனில் கடந்த மாதம் வெள்ளைக்கோட்டை விட்டு வெளியே வந்ததற்காக இங்கிலாந்து வீராங்கனை சார்லி டீனை இந்திய வீராங்கனை தீப்தி சர்மா ரன் அவுட் செய்து நேர்மைக்குப் புறம்பாக நடந்து கொண்டதாக அந்நாட்டைச் சேர்ந்த மொத்த முன்னாள் வீரர்களும் ரசிகர்களும் கடுமையாக திட்டி தீர்த்தார்கள். ஆனால் மன்கட் என்றழைக்கப்பட்ட அந்த வகையான அவுட் ஐசிசி மற்றும் எம்சிசி அமைப்புகளால் சமீபத்தில் அங்கீகரிக்கப்பட்டு அதிகாரப்பூர்வ ரன் அவுட்டாக மாற்றப்பட்டுள்ளது. ஆனாலும் அதை ஏற்றுக்கொள்ளாத இங்கிலாந்தினர் தீப்தி சர்மா நேர்மைக்கு புறம்பாக நடந்து கொண்டதாக கடுமையாக விமர்சித்தனர்.

தற்போது அதே போல் தற்போது டக்வொர்த் லீவிஸ் எனும் விதிமுறை ஐசிசி மற்றும் எம்சிசி அமைப்புகளால் ஏற்றுக்கொள்ளப்பட்டது என்றாலும் இங்கிலாந்தின் கண்ணோட்டத்தில் போராடியிருந்தால் கிடைத்திருக்கக் கூடிய வெற்றியை பறித்து நேர்மைக்குப் புறம்பாக நடந்து கொண்டது. எனவே அதற்கு காரணமாக இருந்த வருண பகவான் மீது விமர்சனத்தை எழுப்பி புகார் செய்யுங்கள் என்ற வகையில் சமூக வலைதளங்களில் அமித் மிஸ்ராவுடன் இணைந்து ஏராளமான இந்திய ரசிகர்கள் இங்கிலாந்தினரை சரமாரியாக விமர்சிக்கிறார்கள்.

இதையும் படிங்க : ஒருவேளை தோனி சொன்ன மாதிரி கப் நமக்கு தானோ – இந்திய ரசிகர்கள் உற்சாகம், காரணம் இதோ

அத்துடன் அயர்லாந்தை மொட்டை அடிக்க காத்திருந்த இங்கிலாந்தை கடைசியில் மழை மொட்டை அடித்தது போன்ற வீடியோவை உருவாக்கி முன்னாள் இந்திய வீரர் வாசிம் ஜாபர் தனது ட்விட்டர் பக்கத்தில் முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வாகனை வழக்கம் போல கலாய்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அவருடன் சேர்ந்து மற்றொரு முன்னாள் இந்திய வீரர் வீரேந்திர சேவாக் தனது பங்கிற்கு மழையால் வரலாற்றில் முதல் முறையாக கத்துக்குட்டி அயர்லாந்திடம் தோல்வியடைந்த இங்கிலாந்தைக் கலாய்த்துள்ளார்.

Advertisement