2.5 நாட்கள் வேஸ்ட்டா போச்சு.. அதனால் தான் தைரியமா முடிவு எடுத்தேன்.. வெற்றிக்கு பிறகு – ரோஹித் ஹேப்பி

Rohit
- Advertisement -

கான்பூர் நகரில் விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியானது இன்று நடைபெற்ற ஐந்தாம் நாள் ஆட்டத்துடன் முடிவுக்கு வந்தது. இந்த போட்டியின் கிட்டத்தட்ட இரண்டரை நாட்கள் மழை காரணமாக பாதிக்கப்பட்டதால் நிச்சயம் இந்த போட்டி டிராவில் முடிவடையும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவின் தைரியமான முடிவால் இந்த போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது.

வெற்றிக்கு காரணம் இதுதான் :

நேற்றைய நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் வங்கதேச அணி 2 விக்கெட்டுகளை இழந்து 26 ரன்கள் குவித்திருந்த வேளையில் இன்று தொடர்ந்து தங்கள் இரண்டாவது இன்னிங்சை விளையாடிய வங்கதேச அணி 146 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன் காரணமாக 94 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணி மூன்று விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 98 ரன்கள் குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் பெற்ற வெற்றி குறித்து பேசிய இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா கூறுகையில் : ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு பயிற்சியாளரின் கீழ் விளையாடி வருகிறோம். ராகுல் டிராவிட் எங்களது அணியின் பயிற்சியாளராக இருந்து சிறப்பான நேரத்தை வழங்கி இருந்தார். தற்போது அவரை கடந்து கௌதம் கம்பீருடன் பயணித்து வருகிறோம். ஏற்கனவே நான் அவருடன் விளையாடி இருப்பதால் அவர் என்ன மனநிலையோடு இருப்பார் என்பதை எனக்கு தெரியும்.

அதோடு வீரர்கள் எவ்வாறு விளையாட விரும்புகிறார்களோ அதன்படியே அவர்களுக்கு சுதந்திரத்தையும் அவர் வழங்குவார் என்றும் தெரியும். இந்த போட்டியில் நாங்கள் கிட்டத்தட்ட இரண்டரை நாட்களை மழையால் தவற விட்டதால் நான்காவது நாளில் எவ்வளவு விரைவாக ரன்களை குவிக்க முடியுமோ அவ்வளவு விரைவாக ரன்களை குவித்தோம். நிச்சயம் வேகமாக ரன்களை குவித்துவிட்டு மீண்டும் வங்கதேச அணியை பந்துவீச்சில் வீழ்த்த வேண்டும் என்று நினைத்தோம்.

- Advertisement -

இந்த போட்டியின் போது நாங்கள் பேட்டிங் செய்கையில் மைதானம் பேட்டிங்கிற்கு சாதகமாக இல்லை. இருந்தாலும் 100-150 ரன்களுக்கு ஆல் அவுட்டானாலும் பரவாயில்லை. இந்த போட்டியின் முடிவினை பெற வேண்டும் என்பதற்காகவே அதிரடியாக விளையாடினோம். இறுதியில் இந்த போட்டியில் வெற்றி பெற்றதில் மகிழ்ச்சி.

இதையும் படிங்க : என் ரூட்ல விளையாட அந்த 2 பேரும் சுதந்திரம் கொடுத்தாங்க.. வங்கதேசத்தை வெளுத்த ஆட்டநாயகன் ஜெய்ஸ்வால்

இந்த போட்டியில் எங்களது அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஆகாஷ் தீப் சிறப்பாக விளையாடினார். உள்ளூர் கிரிக்கெட்டில் அவர் நிறைய விளையாடியுள்ளதால் இதேபோன்ற தரமான செயல்பாடு வெளிவரும். அவர் நீண்ட ஸ்பெல்களை ஓய்வின்றி வீசுகிறார். நல்ல திறன்களையும் வைத்திருக்கிறார் என ரோகித் சர்மா கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement