இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே நேற்று நடைபெற்ற சூப்பர் 4 சுற்றின் மூன்றாவது ஆட்டத்தில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 173 ரன்கள் எடுத்தது. இந்திய அணி சார்பாக அதிகபட்சமாக ரோகித் சர்மா 72 ரன்களையும், சூரியகுமார் யாதவ் 34 ரன்களையும் குவித்தனர். பின்னர் 174 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இலங்கை அணி கடைசி ஓவரில் ஒரு பந்து மீதம் இருக்கையில் 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 174 ரன்கள் எடுத்து ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் இலங்கை அணி சார்பாக துவக்க வீரர்கள் பதும் நிசங்கா மற்றும் குஷால் மெண்டிஸ் ஆகிய இருவரும் அரைசதம் அடித்து நல்ல துவக்கத்தை தந்தனர். அதேபோன்று இறுதியில் கேப்டன் ஷனகா 18 பந்துகளில் 33 ரன்களையும், பனுகா ராஜபக்சே 17 பந்துகளில் 25 ரன்களையும் குவித்து ஆட்டம் இழக்காமல் அந்த அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர்.
இதன் மூலம் ஆப்கானிஸ்தான் மற்றும் இந்தியா என அடுத்தடுத்து இரண்டு வெற்றிகளை பெற்ற இலங்கை அணி தற்போதே இறுதி போட்டிக்குள் ஒரு காலை வைத்துவிட்டது என்று கூறலாம். இந்த போட்டியில் அடைந்த தோல்வி மூலம் இந்திய அணியின் இறுதி போட்டிக்கான வாய்ப்பு கனவாகியுள்ளது என்றே கூறவேண்டும்.
இந்நிலையில் இலங்கை அணிக்கு எதிரான இந்த தோல்வி குறித்து பேசிய கேப்டன் ரோகித் சர்மா கூறுகையில் : இந்த போட்டியின் முதல் 10 ஓவர்களில் நாங்கள் சிறப்பாக பேட்டிங் செய்தோம். ஆனால் இரண்டாவது பாதியில் பெரிய அளவில் ரன்களை குவிக்க தவறிவிட்டோம். இந்த மைதானத்தில் 10 முதல் 15 ரன்கள் வரை நாங்கள் குறைவாக எடுத்ததாக நினைக்கிறோம். அதுவே எங்களின் தோல்விக்கு காரணமாகவும் அமைந்தது. இரண்டாவது பாதியில் எதுவும் எங்களுக்கு சாதகமாக அமையவில்லை.
மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் எப்படி ஷாட்களை விளையாட வேண்டும் என்பதில் இன்னும் நிறைய விடயங்களை கற்றுக் கொள்ள வேண்டும். இது போன்ற விஷயங்கள் நடக்கத்தான் செய்யும். இதிலிருந்து பாடங்களை கற்றுக் கொண்டு ஒரு அணியாக நாம் மீண்டு வர வேண்டியது அவசியம். பந்து வீச்சிலும் இன்று நாங்கள் சிறப்பாக செயல்பட்டோம். ஆனாலும் இலங்கை அணியின் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாடியதால் எங்களது திட்டம் எடுபடாமல் போனது.
இதையும் படிங்க : அசால்ட்டா சதம் அடிப்பாரு, டி20 உ.கோ அணியில் யோசிக்காம அவரை தேர்வு செய்யுங்க – கிரண் மோரே ஆதரவு
4 வேகப்பந்து வீச்சாளர்டன் களமிறங்குவது தான் எங்களது திட்டம். ஆனால் உலக கோப்பைக்கு முன்னதாக மூன்று வேகப்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்கி சோதிக்க நினைத்தோம். ஆனால் அதற்கு சரியான பலன் கிடைக்கவில்லை. விரைவில் இதற்கு தீர்வு காண வேண்டும். அர்ஷ்தீப் சிங் டெத் ஓவர்களில் பிரமாதமாக பந்து வீசுகிறார் என்றும் ரோஹித் சர்மா கூறியது குறிப்பிடத்தக்கது.