
இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதி போட்டியுடன் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவிப்பார் என்று கடந்த சில நாட்களாகவே அதிகளவு பேசப்பட்டு வந்தது. ஆனால் நேற்று நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற முடிந்த இறுதிப்போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி மகிழ்ச்சியுடன் வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்டது.
பின்னர் பரிசளிப்பு விழாவின் போது ரோகித் சர்மா ஓய்வு அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ரோஹித் சர்மா ஓய்வு குறித்து எந்தவொரு அறிவிப்பையும் வெளியிடாமல் கோப்பையுடன் கொண்டாட்டத்திற்கு சென்று விட்டார். இந்நிலையில் ரோகித் சர்மா தற்போதைக்கு ஓய்வு பெறவில்லை என்ற செய்தி உறுதியாகி ரசிகர்களுக்கு மகிழ்ச்சி ஏற்படுத்தியது.
நேற்றைய போட்டிக்கு பின்னர் தனது ஓய்வு முடிவு குறித்து பேசிய ரோகித் சர்மா கூறுகையில் : எதிர்கால திட்டங்கள் குறித்து எந்த எண்ணமும் என்னிடம் இல்லை. எது நடந்தாலும் அது நன்றாகவே தொடரும். தற்போதைக்கு நான் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வுபெற போவதில்லை என்பதை தெளிவுபடுத்திக் கொள்கிறேன். இனிமேல் என் ஓய்வு குறித்த வதந்திகளை யாரும் பரப்ப வேண்டாம் என ரோகித் சர்மா கேட்டுக்கொண்டார்.
இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப்போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோகித் சர்மா 83 பந்துகளை சந்தித்து 7 பவுண்டரி மற்றும் 3 சிக்சர் என 76 ரன்கள் குவித்து அசத்தினார். தற்போது 37 வயதை எட்டியுள்ள ரோஹித் சர்மா விரைவில் ஓய்வை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் தற்போதைக்கு ஓய்வு குறித்த எந்த எண்ணமும் தனக்கு இல்லை என்பதை வெளிப்படுத்தி அந்த செய்திகளுக்கெல்லாம் அவர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
கடந்த ஆண்டு டி20 உலககோப்பையை கேப்டனாக கைப்பற்றிய ரோஹித் சர்மா அடுத்த சில மாதங்களிலேயே சாம்பியன்ஸ் டிராபி கோப்பையையும் வென்று அசத்தியுள்ளார். கடந்த 2007 ஆம் ஆண்டு இந்திய அணிக்காக ஒருநாள் போட்டிகளில் அறிமுகமாகிய ரோஹித் சர்மா இதுவரை 273 போட்டிகளில் விளையாடி 11168 ரன்களை குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : அந்த 4 பேருமே உலகத்தரம்.. ரோஹித் பின்னங்காலை வைக்க வெச்சுட்டாரு.. இந்திய அணியிடம் தோற்றது பற்றி சான்ட்னர்
சாம்பியன்ஸ் டிராபி தொடரை கேப்டனாக கைப்பற்றியுள்ள ரோஹித் சர்மா தற்போது துபாயில் கொண்டாட்டத்தில் இருக்கும் வேளையில் இன்னும் சில தினங்களில் நாடு திரும்பி எதிர்வரும் ஐ.பி.எல் தொடருக்கான பயிற்சியில் பங்கேற்க இருக்கிறார். இந்த ஆண்டும் அவர் ஹார்டிக் பாண்டியாவின் தலைமையின் கீழ் மும்பை இந்தியன்ஸ் அணியின் துவக்க வீரராக விளையாட இருக்கிறார்.