
விறுவிறுப்பாக நடைபெற்று வரும் 2022 ஆசிய கோப்பையில் செப்டம்பர் 4ஆம் தேதியான நேற்று நடைபெற்ற சூப்பர் 4 போட்டியில் பரம எதிரியான இந்தியாவை தோற்கடித்த பாகிஸ்தான் 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்று இதே தொடரில் லீக் சுற்றில் பெற்ற தோல்விக்கு தக்க பதிலடி கொடுத்தது. துபாயில் நடைபெற்ற அந்தப் போட்டியில் டாஸ் வென்று முதலில் பந்து வீசிய பாகிஸ்தானுக்கு எதிராக போராடிய இந்தியா 20 ஓவர்களில் 181/7 ரன்கள் சேர்த்தது. தொடக்க வீரர்கள் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் ராகுல் ஆகியோர் தலா 28 ரன்கள் எடுத்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல தொடக்கம் கொடுத்து அவுட்டானார்கள்.
ஆனால் மிடில் ஆர்டரில் சூரியகுமார் யாதவ் 13, ரிஷப் பண்ட் 14, ஹர்திக் பாண்டியா 0, தீபக் ஹூடா 16 என முக்கிய வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் அவுட்டாகி பின்னடைவை ஏற்படுத்தினர். ஆனால் 3வது இடத்தில் களமிறங்கி நங்கூரமாகவும் தூணாகவும் தாங்கிப் பிடித்த நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி 4 பவுண்டரி 1 சிக்சருடன் 60 (44) ரன்கள் விளாசி தன்னை உலகத்தரம் வாய்ந்த வீரர் என மீண்டும் ஒருமுறை நிரூபித்து கடைசி ஓவரில் போராடி ஆட்டமிழந்தார். அதை துரத்திய பாகிஸ்தானுக்கு கேப்டன் பாபர் அசாம் 14, பக்கார் ஜமான் 15 என முக்கிய பேட்ஸ்மேன்கள் ஆரம்பத்திலேயே அவுட்டாகி பின்னடைவை கொடுத்தனர்.
சொதப்பிய இந்தியா:
ஆனால் 3வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்து இந்திய பவுலர்கள் வெளுத்து வாங்கி 73 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து வெற்றியை உறுதிசெய்த முகமது நவாஸ் அதிரடியாக 6 பவுண்டரி 2 சிக்சருடன் 42 (20) ரன்களும் மறுபுறம் நங்கூரமாக நின்ற முஹம்மது ரிஸ்வான் 6 பவுண்டரி 2 சிக்சருடன் 71 (51) ரன்களும் எடுத்து அடுத்தடுத்த ஓவர்களில் ஆட்டமிழந்தனர். அந்த அற்புதமான திருப்புமுனையை பயன்படுத்த தவறிய இந்திய பவுலர்கள் ஆசிப் அலி 16 (8) குஷ்தில் ஷா 14* (11) என அடுத்து வந்த வீரர்கள் பினிஷிங் செய்யும் அளவுக்கு சுமாராக பந்து வீசி வெற்றியை தாரை வார்த்தனர்.
இந்த தோல்வியால் அடுத்ததாக இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகளுக்கு எதிராக நடைபெறும் எஞ்சிய 2 சூப்பர் 4 போட்டிகளில் வென்றால் மட்டுமே பைனலுக்கு செல்ல முடியும் என்ற நிலைமை இந்தியாவுக்கு ஏற்பட்டுள்ளது. இப்போட்டியில் வெற்றியை தீர்மானித்த 10 – 15 ரன்களை அடிக்கக்கூடிய தமிழகத்தின் தினேஷ் கார்த்திக்கை கழற்றிவிட்ட ரோகித் சர்மாவின் முடிவு தோல்விக்கு ஒரு காரணமாக பார்க்கப்படுகிறது.
தோனியை முந்தி:
அந்த வகையில் நேற்றைய போட்டியில் ரோகித் சர்மாவின் கேப்டன்ஷிப் சுமாராக இருந்ததாக நிறைய ரசிகர்கள் அதிருப்தி தெரிவிக்கின்றனர். முன்னதாக கடந்த 2018 ஆசிய கோப்பையில் கேப்டனாக செயல்பட்டு தோல்வியே அடையாமல் கோப்பையை வென்ற ரோகித் சர்மா தலைமையில் 7 தொடர் வெற்றிகளுடன் வெற்றி நடை போட்டு வந்த இந்தியா நேற்று முதல் முறையாக தோல்வியடைந்தது.
மேலும் நேற்றைய போட்டியில் 3 பவுண்டரி 2 சிக்சருடன் 28 (16) ரன்களை 175.00 என்ற மிரட்டலான ஸ்டிரைக் ரேட்டில் விளாசி அதிரடியான தொடக்கத்தை பெற்ற ரோகித் சர்மா அதை பெரிய ரன்களாக மாற்றாமல் வழக்கம்போல அவுட்டாதும் தோல்விக்கு காரணமானது. இருப்பினும் இப்போட்டியில் 2 சிக்சர்களை அடித்த அவர் ஆசிய கோப்பையில் அதிக சிக்சர்களை அடித்த கேப்டன் என்ற எம்எஸ் தோனியின் ஆல் டைம் சாதனையை தகர்த்து புதிய சாதனை படைத்தார். அந்த பட்டியல்:
1. ரோகித் சர்மா : 17*
2. எம்எஸ் தோனி : 16
3. சாஹித் அப்ரிடி : 12
4. சௌரவ் கங்குலி : 11
ஆனாலும் என்ன பயன் என்பது போல் இந்தியா தோல்வியடைந்தது. அதைவிட தோனியின் இது போன்ற சாதனைகளை ரோகித் சர்மா, விராட் கோலி, ரிஷப் பண்ட் என அடுத்த தலைமுறை வீரர்கள் உடைத்தாலும் அவர்களால் தோனியாக முடியாது என்பதற்கு சான்றாக மற்றொரு சாதனையும் நேற்று நிகழ்ந்துள்ளது. ஏனெனில் 2007 – 2016 வரை கேப்டனாக செயல்பட்ட தோனி தலைமையில் 6 டி20 போட்டிகளில் பாகிஸ்தானை சந்தித்த இந்தியா அதில் தோல்வியே அடையாமல் அடுத்தடுத்த 6 வெற்றிகளை சுவைத்தது. அதில் 2007 டி20 உலக்கோப்பையும் அடங்கும்.
ஆனால் அவருக்குப்பின் 2017 முதல் இப்போது வரை விராட் கோலி தலைமையில் களமிறங்கிய 1 போட்டியில் தோல்வியையும் (2021இல்) தற்போது ரோகித் சர்மா தலைமையில் களமிறங்கிய 2 போட்டிகளில் 1 தோல்வியும் இந்தியா சந்தித்துள்ளது. அந்த வகையில் டி20 கிரிக்கெட்டில் பாகிஸ்தானுக்கு எதிராக தோல்வியை சந்திக்காத ஒரே இந்திய கேப்டனாக திகழ்வதே தோனியின் தரத்திற்கு சான்றாகும்.