இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரானது தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகள் முடிவடைந்த வேளையில் முதல் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்த இந்திய அணியானது இரண்டாவது போட்டியில் 113 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்த இரண்டு தோல்விகளின் மூலம் 12 ஆண்டுகளுக்கு பிறகு சொந்த மண்ணில் இந்திய அணி டெஸ்ட் தொடரை இழந்து தங்களது அசாத்தியமான வெற்றி பயணத்தை முடித்துக் கொண்டது.
அவர்கள் 2 பேரும் மட்டுமே தோல்விக்கு காரணம் கிடையாது :
இந்நிலையில் இந்த தொடரில் இந்திய அணியின் தோல்விக்கு இந்திய அணியின் அனுபவ வீரர்களான அஸ்வின் மற்றும் ஜடேஜா ஆகியோரது சுமாரான செயல்பாடு தான் காரணம் என்று அவர்கள் மீது விமர்சனம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணியின் சுழற்பந்து வீச்சாளர்கள் விக்கெட்டுகளை வீழ்த்திய வேளையில் அனுபவ சுழற்பந்து வீச்சாளர்களான அவர்கள் இருவரும் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்று அனைவரும் அவர்களது மீது விமர்சனம் வைத்து வருகின்றனர்.
அவர்கள் இருவரையும் ஆதரித்து பேசிய ரோஹித் சர்மா கூறுகையில் : அஸ்வின் மற்றும் ஜடேஜா ஆகிய இருவரின் மீதும் அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது. எல்லா போட்டியிலும் அவர்கள் இருவரும் விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டும் என்று நினைக்கிறார்கள். அனைத்து போட்டியிலுமே அவர்கள் இருவரால் வெற்றி பெற்று கொடுக்க முடியாது. அணி ஒட்டுமொத்தமாக சிறப்பாக செயல்பட்டால் மட்டுமே வெற்றி பெற முடியும்.
அதை தவிர்த்து இரண்டு வீரர்களை மட்டுமே நம்பி வெற்றியை யோசிப்பது என்பது சரியானது கிடையாது. அவர்கள் இருவருமே திறமையும், அனுபவமும் நிறைந்தவர்கள். இந்திய அணிக்காக பல்வேறு விடயங்களை அவர்கள் செய்திருக்கிறார்கள். அளப்பரிய பங்கை அளித்திருக்கும் அவர்களால் தான் 18 டெஸ்ட் தொடர்களை இந்திய அணி சொந்த மண்ணில் வெல்ல முடிந்தது.
எனவே அவர்கள் இருவரது திறமையையும் அனுபவத்தையும் பற்றி நான் சிந்திக்கப்போவதில்லை. அவர்கள் இருவருக்குமே இந்த தொடரில் என்ன நடந்திருக்கிறது என்று நன்றாக தெரியும். அனைத்து வீரர்களுக்குமே மோசமான நாட்கள், மோசமான போட்டிகள் மற்றும் மோசமான தொடர் என அனைத்துமே அமையும். அந்த வகையில் இந்த தொடரில் எங்களால் வெற்றி பெற முடியவில்லை என்றாலும் அதற்கு அனைவருமே பொறுப்பு தான் என்று கூறுவேன்.
இதையும் படிங்க : அதை செய்யாத நீங்க சச்சினை விட பெருசா? தோல்விக்கு காரணமான விராட், ரோஹித்தை விளாசிய சுனில் ஜோசி
அனுபவ வீரர்களான அவர்கள் இருவரும் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்த முடியாத போது இளம் வீரர்கள் பங்களிப்பை வழங்க வேண்டும். அந்த வகையில் வாஷிங்டன் சுந்தர் இந்த தொடரில் இரண்டாவது போட்டியில் மிகச்சிறப்பாக செயல்பட்டார் என இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கூறியது குறிப்பிடத்தக்கது.



