ஷமிக்கு பதிலாக 3வது ஃபாஸ்ட் பவுலராக விளையாடப் போவது யார்? கேப்டன் ரோஹித் பதில்

Rohit Sharma 2
- Advertisement -

தென் ஆப்பிரிக்கா மற்றும் இந்திய கிரிக்கெட் அணிகள் மோதும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் டிசம்பர் 26ஆம் தேதி சென்சூரியன் நகரில் துவங்குகிறது. இத்தொடரில் நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தி எப்படியாவது தென்னாப்பிரிக்காவை அதனுடைய சொந்த மண்ணில் முதல் முறையாக தோற்கடித்து புதிய சரித்திரம் படைக்கும் லட்சியத்துடன் ரோஹித் சர்மா தலைமையில் விராட் கோலி உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் அடங்கிய இந்தியா களமிறங்குகிறது.

இருப்பினும் இந்த அணியில் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி காயத்தால் விலகியுள்ளது மிகப்பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் நடைபெற்று முடிந்த 2023 உலகக் கோப்பையில் 24 விக்கெட்டுகள் எடுத்து எதிரணிகளை தெறிக்க விட்ட அவர் நல்ல ஃபார்மில் இருப்பதுடன் ஒருநாள் போட்டிகளை விட டெஸ்ட் கிரிக்கெட்டில் அபாரமாக செயல்படக்கூடியவர்.

- Advertisement -

3 ஃபாஸ்ட் பவுலர்:
எனவே சிராஜ், பும்ரா ஆகியோருடன் ஷமிக்கு பதிலாக 3வது வேகப்பந்து வீச்சாளராக விளையாடப் போவது யார் என்ற கேள்வி ரசிகர்களிடம் காணப்படுகிறது. அந்த இடத்திற்கு முகேஷ் குமார் மற்றும் பிரசித் கிருஷ்ணா ஆகிய 2 இளம் வீரர்களிடம் போட்டி நிலவுகிறது. இதில் பிரசித் கிருஷ்ணா கடந்த வாரம் தென்னாப்பிரிக்கா ஏ அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் ஹாட்ரிக் விக்கெட்டுகளை எடுத்து சிறப்பாக செயல்பட்டார்.

மறுபுறம் கடந்த வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தில் அறிமுகமாகி நன்றாக விளையாடிய முகேஷ் குமார் இந்த தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணத்திலும் வெள்ளைப் பந்து தொடர்களில் கிடைத்த வாய்ப்புகளில் அசத்தினார். இந்நிலையில் முதல் போட்டியில் பிரசித் கிருஷ்ணா அல்லது முகேஷ் குமார் ஆகியோரில் ஒருவர் விளையாடுவதற்கு அதிக வாய்ப்புள்ளதாக கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.

- Advertisement -

அந்த இருவருமே தரமானவர்களாக இருப்பதால் இறுதிக்கட்ட முடிவை பிட்ச் எப்படி இருக்கிறது என்பதை பார்த்து விட்டு போட்டி நாளன்று முடிவெடுக்க உள்ளதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியது பின்வருமாறு. “எங்களுடைய அணிக்காக பல வருடங்களாக சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்திய முகமது ஷமி இல்லாதது பெரிய பின்னடைவாகும். ஆனால் அந்த இடத்தை யாரேனும் ஒருவர் நிரப்பியாக வேண்டும்”

இதையும் படிங்க: முதல் டெஸ்ட்க்கு முன்னர் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான ஷ்ரேயாஸ் ஐயருக்கு பிரத்யேக பயிற்சி அளித்த டிராவிட் – எதற்கு தெரியுமா?

“அது கடினம் என்றாலும் எங்களால் முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது. அதில் பிரசித் கிருஷ்ணா சற்று உயரமாக இருப்பதால் நிறைய பவுன்ஸை உருவாக்குகிறார். மறுபுறம் முகேஷ் குமார் பந்தை ஸ்விங் செய்யும் திறமை கொண்டுள்ளார். இருப்பினும் பிட்ச்சை பார்த்து விட்டு அவர்களில் யார் விளையாட வேண்டும் என்பதை முடிவு செய்ய உள்ளோம். ஆனால் நாங்கள் இது பற்றி ஏற்கனவே 75% முடிவு செய்து விட்டோம். கடைசி 25% முடிவை நாளை மைதானத்தை பார்த்து விட்டு எடுக்க உள்ளோம்” என்று கூறினார்.

Advertisement