இந்தியாவில் விஜய் ஹசாரே கோப்பை 2025 ஒருநாள் கிரிக்கெட் தொடர் டிசம்பர் 24ஆம் தேதி துவங்கியது. அத்தொடரில் எலைட் குரூப் சி பிரிவில் இடம் வகிக்கும் மும்பை மற்றும் சிக்கிம் அணிகள் மோதிய போட்டி ஜெய்ப்பூரில் நடைபெற்றது. காலை 9 மணிக்கு துவங்கிய அப்போட்டியில் டாஸ் வென்ற சிக்கிம் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அப்போட்டியில் பல வருடங்கள் கழித்து விஜய் ஹசாரே கோப்பையில் களமிறங்கிய நட்சத்திர வீரர் ரோஹித் சர்மாவை பார்க்க ஏராளமான ரசிகர்கள் திரண்டனர். அதனால் ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு மத்தியில் துவங்கிய போட்டியில் முதலில் விளையாடிய சிக்கிம் 50 ஓவரில் போராடி 236/7 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக ஆசிப் தாபா 79, ரோபின் லிம்போ 31, கிராந்தி குமார் 34, சாய் சாத்விக் 34 ரன்கள் எடுத்தனர்.
ஹிட்மேன் ரோஹித் அசத்தல்:
மும்பை அணிக்கு அதிகபட்சமாக கேப்டன் சர்துல் தாகூர் 2 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார். அடுத்ததாக 237 ரன்களை துரத்திய மும்பை அணிக்கு நம்பிக்கை நட்சத்திரம் ரோஹித் சர்மா அதிரடியாக விளையாடினார். சர்வதேச கிரிக்கெட்டில் ஏராளமான சாதனைகள் படைத்து இந்தியாவுக்கு நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்துள்ள அவர் தற்போது ஐசிசி ஒருநாள் போட்டிகளில் உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக ஜொலிக்கிறார்.
எனவே நல்ல ஃபார்மில் இருக்கும் அவர் இப்போட்டியில் அற்புதமாக விளையாடி 27 பந்துகளில் அரை சதம் அடித்தார். அவருடன் சேர்ந்து 140 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்த அங்ரிஸ் ரகுவரன்சி 38 ரன்களை குவித்து பெவிலியன் திரும்பினார். மறுபுறம் தொடர்ந்து அசத்திய ரோஹித் 62 பந்துகளில் சதமடித்து தம்மை சாம்பியன் பிளேயர் என்பதை நிரூபித்தார்.
38 வயதிலும் நம்பர் ஒன்னாக பதிலடி:
நேரம் செல்ல செல்ல நன்கு செட்டிலாகி அட்டகாசமாக விளையாடிய ரோஹித் 18 பவுண்டரி 9 சிக்ஸர்களை பறக்க விட்டு 155 (94) ரன்களை 164.89 ஸ்ட்ரைக் ரேட்டில் விளாசி அவுட்டானார். 2024 டி20 உலகக் கோப்பை, 2025 சாம்பியன்ஸ் ட்ராபியை இந்தியாவுக்கு கேப்டனாக வென்று கொடுத்த அவர் 2027 உலகக்கோப்பையில் விளையாடி வெற்றியுடன் விடை பெற திட்டமிட்டுள்ளார். ஆனால் அதற்கு முன் அவரை வயதைக் காரணமாக வைத்து கழற்றி விட தேர்வுக்குழு முயற்சித்து வருகிறது.
இதையும் படிங்க: டி20 உலககோப்பை தொடருக்காக நான் இப்படி தான் ரெடி ஆகுறேன்.. கப் முக்கியம் – வருண் சக்கரவர்த்தி பேட்டி
அதனால் கேப்டன்ஷிப் பதவியை இழந்த ரோஹித் கடந்த ஆஸ்திரேலியா தொடரில் தொடர்நாயகன் விருது வென்று பதிலடி கொடுத்தார். தற்போது விஜய் ஹசாரே கோப்பையிலும் சதமடித்துள்ள அவர் தன்னைக் கழற்றி விடத் துடிப்பவர்களுக்கு மீண்டும் பதிலடி கொடுத்து தம்மை நம்பர் ஒன் பேட்ஸ்மேன் என்பதை நிரூபித்துள்ளார். இறுதியில் முஷீர் கான் 27* (26), சர்பராஸ் கான் 8* (5) ரன்கள் எடுத்ததால் 30.3 ஓவரிலேயே 237/2 ரன்களை எடுத்த மும்பை 8 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வென்றது.



