ஜாம்பவான் சச்சினின் 2 ஆல்-டைம் ஆசிய கோப்பை சாதனைகளை தகர்க்க போகும் ரோஹித் சர்மா – முழுவிவரம் இதோ

Sachin Tendulkar Rohit Sharma
- Advertisement -

ஆசிய கண்டத்து கிரிக்கெட் ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள ஆசிய கோப்பை 2022 தொடர் ஆகஸ்ட் 27 முதல் ஐக்கிய அரபு நாடுகளில் துவங்குகிறது. வரலாற்றில் 15வது முறையாக நடைபெறும் இந்த கோப்பையை வெல்வதற்கு இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஹாங்காங் ஆகிய 6 அணிகள் போட்டி போட உள்ளன. விரைவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் 20 ஓவர் தொடராக நடைபெறும் இந்த தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகள் மோதும் போட்டிக்கு மட்டும் உலக அளவில் எதிர்பார்ப்புகள் நிலவுகிறது.

- Advertisement -

ஏனெனில் அண்டை நாடுகளான இவ்விரு அணிகளும் தங்களை பரம எதிரிகளாக பாவித்து கொள்ளும் நிலையில் கடைசியாக இதே துபாய் மைதானத்தில் மோதிய போது விராட் கோலி தலைமையிலான இந்தியாவை 10 விக்கெட் வித்தியாசத்தில் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் தோற்கடித்தது. அதனால் உலக கோப்பையில் முதல் முறையாக பாகிஸ்தானிடம் தோற்ற இந்தியா இம்முறை 5 ஐபிஎல் கோப்பைகளை வென்ற கேப்டன்ஷிப் அனுபவம் நிறைந்த ரோகித் சர்மா தலைமையில் தக்க பதிலடி கொடுக்க தயாராகியுள்ளது.

அசத்துவாரா ரோஹித்:
அதற்கேற்றார்போல் அந்த தோல்விக்கு பின்பு முழு நேர கேப்டனாக பொறுப்பேற்ற ரோகித் சர்மா தலைமையில் இதுவரை பங்கேற்ற அத்தனை டி20 தொடர்களிலும் இந்தியா தோல்வியடையாமல் வெற்றிநடை போட்டு வருகிறது. அவர் இல்லாமலும் ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்டியா ஆகியோரது தலைமையில் பங்கேற்ற டி20 தொடர்களிலும் இளம் வீரர்களுடன் இந்தியா தோல்வி அடையாமல் அசத்தியது. மேலும் வரலாற்றில் இதுவரை நடைபெற்றுள்ள 14 ஆசிய கோப்பைகளில் 7 கோப்பைகளை வென்ற இந்தியா வெற்றிகரமான அணியாக திகழ்கிறது. அத்துடன் கடைசியாக இதே துபாயில் கடந்த 2018இல் நடைபெற்ற 50 ஓவர் ஆசிய கோப்பையில் ரோகித் சர்மா தலைமையில் அசத்திய இந்தியா வங்கதேசத்தை இறுதிப்போட்டியில் தோற்கடித்து கோப்பையை வென்றது.

Rohithஎனவே வெற்றிகரமான அணியாகவும் நடப்புச் சாம்பியனகவும் களமிறங்கும் இந்தியா சாம்பியன் பட்டத்தை தக்க வைத்துக்கொள்ளுமா என்று இந்திய ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். அதற்கு ரோகித் சர்மா சிறந்த கேப்டனாக மட்டுமல்லாமல் சிறந்த பேட்ஸ்மேனாகவும் பெரிய அளவில் ரன்கள் குவிப்பது அவசியமாகிறது. அந்த வகையில் கடந்த 2018இல் நடைபெற்ற 50 ஓவர் ஆசிய கோப்பையில் 5 போட்டிகளில் களமிறங்கிய அவர் 317 ரன்களை 105.66 என்ற அபாரமான சராசரியில் குவித்து கேப்டனாக ஆசிய கோப்பையை வென்றார். அதே போல் கடந்த 2016இல் நடைபெற்ற 20 ஓவர் ஆசிய கோப்பையிலும் 5 போட்டியில் களமிறங்கிய அவர் 138 ரன்களை குவித்தார்.

சச்சினின் சாதனை:
எனவே ஆசிய கோப்பைகளில் மிகச்சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்தி வரும் அவர் இம்முறையும் அசத்தி கோப்பையை தக்க வைப்பார் என்று உறுதியாக நம்பலாம். முன்னதாக கடந்த 2008 முதல் 2010, 2012, 2014, 2016, 2018 ஆகிய வருடங்களில் நடைபெற்ற 6 ஆசிய கோப்பைகளில் தொடர்ச்சியாக பங்கேற்று வரும் ரோகித் சர்மா இம்முறை தன்னுடைய 7-வது ஆசிய கோப்பையில் பங்கேற்கிறார்.

- Advertisement -

Rohith

1. இதன் வாயிலாக ஆசிய கோப்பை வரலாற்றில் அதிக தொடர்களில் விளையாடிய இந்திய வீரர் என்ற ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் ஆல் டைம் சாதனையை தகர்க்கும் அவர் புதிய சாதனை படைக்க உள்ளார். 1990 – 2012 வரை நடைபெற்ற 6 ஆசிய கோப்பையில் பங்கேற்ற சச்சின் டெண்டுல்கருடன் அந்த சாதனையை பகிர்ந்து கொண்டிருந்த ரோகித் சர்மா தற்போது முழுமையாக அந்த சாதனையை தன்வசப்படுத்த உள்ளார். இவர்களுக்கு அடுத்தபடியாக முன்னாள் கேப்டன்கள் முகமது அசாருதீன், எம்எஸ் தோனி மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் அதிகபட்சமாக 5 ஆசிய கோப்பையில் விளையாடியுள்ளனர்.

2. இதுபோக இந்த தொடரில் வெறும் 89 ரன்களை எடுக்கும் பட்சத்தில் ஆசிய கோப்பை வரலாற்றில் அதிக ரன்கள் எடுத்த இந்திய பேட்ஸ்மேன் என்ற சச்சினின் சாதனையையும் முறியடித்து ரோகித் சர்மா புதிய சாதனை படைக்க உள்ளார். மேலும் 118 ரன்களை எடுக்கும் பட்சத்தில் ஆசிய கோப்பை வரலாற்றில் 1000 ரன்களை எடுக்கும் எடுத்த முதல் இந்திய பேட்ஸ்மேன் என்ற வரலாற்றையும் அவர் படைக்க உள்ளார். அந்த பட்டியல்:
1. சச்சின் டெண்டுல்கர் : 971 (21 இன்னிங்ஸ்)
2. ரோகித் சர்மா : 883 (26 இன்னிங்ஸ்)
3. விராட் கோலி : 766 (14 இன்னிங்ஸ்)
4. எம்எஸ் தோனி : 690 (20 இன்னிங்ஸ்)

இதையும் படிங்க: ஆசியக்கோப்பை : போட்டிகளை எந்த சேனலில் பார்க்கலாம்? எத்தனை மணிக்கு துவங்கும் – விவரம் இதோ

3. மேலும் 21 சிக்ஸர்களுடன் ஆல்-டைம் பட்டியலில் 3வது இடத்தில் இருக்கும் அவர் இன்னும் 6 சிக்சர்களை அடிக்கும் பட்சத்தில் ஆசிய கோப்பையில் அதிக சிக்ஸர்கள் அடித்த பேட்ஸ்மேன் என்ற பாகிஸ்தானின் சாகித் அப்ரிடியின் (26) சாதனையையும் முறியடித்து புதிய சாதனை படைப்பார்.

Advertisement