இலங்கை அணிக்கு எதிராக தனது சொந்த மண்ணில் இந்தியா பங்கேற்று வரும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. உத்திரபிரதேச மாநிலத்திலுள்ள லக்னோ நகரில் பிப்ரவரி 24ஆம் தேதியன்று துவங்கிய இந்த தொடரின் முதல் டி20 போட்டியில் பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் அசத்திய இந்தியா 62 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி தற்போது இந்த தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் இஷான் கிசான் 89 ரன்கள், ஷ்ரேயஸ் ஐயர் 57* ரன்கள் குவித்ததால் 199/3 ரன்கள் எடுத்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய இலங்கை இந்தியாவின் துல்லியமான பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து இறுதியில் பரிதாப தோல்வி அடைந்தது. அதன் காரணமாக 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் 1 – 0* என்ற கணக்கில் இந்தியா ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்று அசதியுள்ளது.
தரம்சாலாவில் 2வது போட்டி:
இதை தொடர்ந்து இந்த தொடரின் 2வது போட்டி பிப்ரவரி 26ஆம் தேதியன்று இரவு 7 மணிக்கு இமாச்சலப் பிரதேசம் மாநிலத்திலுள்ள தரம்சாலா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்தப் போட்டியில் வெற்றி பெற்று தொடரை 2 – 0 என்ற கணக்கில் முன்கூட்டியே கைப்பற்றுவதற்கு இந்தியாவும் – முதல் போட்டியில் பெற்ற தோல்விக்கு பதிலடி கொடுக்கும் வண்ணம் இந்த போட்டியில் எப்படியாவது வெற்றி பெற்று 1 – 1 என தொடரை சமன் செய்ய இலங்கையும் போராட உள்ளது.

வரும் அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் டி20 உலக கோப்பை 2022 கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளதால் அதற்கு முன்பாக தரமான வீரர்களை கண்டறியும் முக்கிய பொறுப்பில் கேப்டன் ரோகித் சர்மா ஈடுபட்டு வருகிறார். எனவே இலங்கைக்கு எதிரான இந்த எஞ்சிய 2 போட்டிகளுக்கான இந்திய அணியில் இளம் வீரர்களுக்கு அதிகப்படியான வாய்ப்பு அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உலகசாதனை படைப்பாரா ஹிட்மேன்:
இந்நிலையில் தரம்சாலாவில் நடைபெற உள்ள 2-வது டி20 போட்டியில் இந்தியாவின் கேப்டன் ரோகித் சர்மா மிகப்பெரிய உலக சாதனை படைக்க உள்ளார். அதாவது இலங்கைக்கு எதிரான 2வது டி20 போட்டியில் அவர் இந்தியாவிற்கு வெற்றியை பெற்று தரும் பட்சத்தில் “சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் சொந்த மண்ணில் அதிக வெற்றிகளை பெற்ற கேப்டன்” என்ற புதிய உலக சாதனை படைப்பார்.

இந்தியாவுக்காக இதுவரை 22 டி20 போட்டிகளில் கேப்டன்ஷிப் செய்துள்ள ரோகித் சர்மா அதிலிருந்து 21 போட்டிகளில் வெற்றி பெற்று ஒரு வெற்றிகரமான கேப்டனாக இருந்து வருகிறார். குறிப்பாக இந்திய மண்ணில் இதுவரை அவர் கேப்டன்ஷிப் செய்த 16 போட்டிகளில் இந்தியா 15 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. அதன் வாயிலாக தற்போது சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் சொந்த மண்ணில் அதிக வெற்றிகளை குவித்த கேப்டன் என்ற உலக சாதனையை இங்கிலாந்தின் இயான் மோர்கன், நியூசிலாந்தின் கேன் வில்லியம்சன் ஆகியோருடன் ரோகித் சர்மா பகிர்ந்து கொண்டுள்ளார்.
இந்த மூவருமே தலா 15 வெற்றிகளைப் பெற்று இந்த சாதனையை பகிர்ந்து கொண்டுள்ளார்கள். எனவே தரம்சாலாவில் நடைபெறும் 2வது டி20 போட்டி அல்லது 3வது போட்டியில் வெற்றி பெற்றால் 16 வெற்றிகளுடன் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் சொந்த மண்ணில் அதிக வெற்றிகளைப் பதிவு செய்த கேப்டன் என்ற புதிய உலக சாதனையை ரோகித் சர்மா படைப்பார்.

கலக்கல் ரோஹித்:
கடந்த நவம்பர் மாதம் இந்திய டி20 அணியின் முழுநேர கேப்டனாக பொறுப்பேற்ற ரோகித் சர்மா அதன்பின் நியூசிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆகிய அணிகளுக்கு எதிராக சொந்த மண்ணில் நடந்த அடுத்தடுத்த டி20 தொடர்களில் 3 – 0 என்ற கணக்கில் அடுத்தடுத்த 2 வைட்வாஷ் வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்தார். இதன் வாயிலாக ஐசிசி டி20 தரவரிசையில் உலகின் புதிய நம்பர் ஒன் டி20 அணியாக முதலிடம் படைத்துள்ள அவர் தலைமையிலான இந்தியா சாதனை படைத்துள்ளது.
எனவே இலங்கைக்கு எதிராக நடைபெறும் எஞ்சிய போட்டிகளிலும் வெற்றி பெற்று மேற்கூறிய உலக சாதனையை அவர் கண்டிப்பாக படைப்பார் என நம்பலாம். இது மட்டுமல்லாமல் தரம்சாலாவில் நடைபெறும் 2வது டி20 போட்டியில் இன்னும் 19 ரன்களை அடிக்கும் பட்சத்தில் “சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் அதிவேகமாக 1000 ரன்களை குவித்த இந்திய கேப்டன் என்ற விராட் கோலியின் சாதனையை உடைத்து புதிய சாதனையையும்” ரோகித் சர்மா படைப்பார். தற்போது வரை அதிவேகமாக 1000 ரன்களை குவித்த இந்திய கேப்டனாக முன்னாள் கேப்டன் விராட் கோலி 30 இன்னிங்ஸ்சில் 1000 ரன்களை அடித்து முதலிடம் பிடித்துள்ளார்.
இதையும் படிங்க : காயம் காரணமாக வெளியேறிய ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு பதிலாக மாற்று வீரர் இவர்தான் – அதிகாரபூர்வ அறிவிப்பு
அவருக்கு அடுத்த இடத்தில் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி 57 இன்னிங்சில் 1000 ரன்களை அடித்து 3வது இடத்தில் உள்ளார். மறுபுறம் ரோகித் சர்மா இதுவரை டி20 போட்டிகளில் கேப்டனாக வெறும் 26 இன்னிங்சிலேயே 981 ரன்களை எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.



