இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரானது தற்போது இலங்கை நாட்டில் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே நடைபெற்று முடிந்த டி20 தொடரை மூன்றுக்கு பூஜ்யம் (3-0) என்ற கணக்கில் கைப்பற்றிய இந்திய அணியானது அடுத்ததாக ஒருநாள் தொடரை கைப்பற்றும் முனைப்போடு நேற்றைய முதல் ஆட்டத்தில் பங்கேற்று விளையாடியது. இந்த போட்டியில் டாசில் வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 230 ரன்களை எடுத்தது.
பின்னர் 231 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கினை துரத்திய இந்திய அணியானது ஒரு கட்டத்தில் வெற்றியை நோக்கி சிறப்பாக சென்று கொண்டிருந்த வேளையில் இறுதி நேரத்தில் ஏற்பட்ட சொதப்பல் காரணமாக 47.5 ஓவர்களில் இந்திய அணியும் சரியாக 230 ரன்களுக்கு ஆல்அவுட்டானது.
இதன் காரணமாக இந்த போட்டியானது இரு அணிகளுக்கும் வெற்றி தோல்வியின்றி சமனில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக அடுத்து வரும் இரண்டு போட்டிகளில் வெற்றி பெறும் அணி இந்த தொடரை கைப்பற்றும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த போட்டியின் போது விளையாடிய இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவின் ஆட்டத்தை ரசிகர்கள் பலரும் வெகுவாக பாராட்டிய தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
ஏனெனில் இந்த போட்டியில் 47 பந்துகளை சந்தித்த ரோகித் சர்மா 7 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர்கள் என 58 ரன்கள் குவித்து அற்புதமான துவக்கத்தை வழங்கியிருந்தார். ரோகித் சர்மா கடந்த சில ஆண்டுகளாகவே தனிப்பட்ட சாதனையை கருத்தில் கொள்ளாமல் அணிக்காக விளையாடி வருகிறார் என்பது நாம் அறிந்ததே.
ஏற்கனவே ரோகித் சர்மா அளித்திருந்த சில பேட்டிகளில் தனிப்பட்ட சாதனையை விட இந்திய அணியின் வெற்றி தான் முக்கியம் என்று கூறியிருந்தார். அந்த வகையில் நேற்றைய போட்டியின் போது கூட இந்திய அணியின் வெற்றிக்கு நல்ல அடித்தளத்தை அமைக்க வேண்டும் என்று ஆரம்ப கட்டத்தில் இருந்தே மிகச் சிறப்பான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார்.
இதையும் படிங்க : உங்களுக்கு என்ன தோனினு நினைப்பா? அர்ஷ்தீப் சிங் செய்த தவறால் பறிபோன வெற்றி – ரசிகர்கள் கொந்தளிப்பு
குறிப்பாக நேற்றைய போட்டியில் அரைசதம் கடந்த அவர் நினைத்திருந்தால் சதத்தினை நோக்கி எளிதாக சென்று இருக்கலாம். ஆனால் அதைவிட அணியின் ரன் குவிப்பு தான் முக்கியம் என்று அவர் தொடர்ச்சியாக அதிரடியாக விளையாடியிருந்தார். இப்படி சுயநலமற்ற ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோஹித் சர்மாவுக்கு தற்போது ரசிகர்கள் மத்தியில் இருந்து வாழ்த்துக்கள் குவிந்து வருவது குறிப்பிடத்தக்கது.



