இலங்கை அணிக்கு எதிராக நேற்று கொழும்பு நகரில் நடைபெற்று முடிந்த முதலாவது ஒருநாள் போட்டியில் கையில் இருந்த வெற்றி வாய்ப்பை இழந்த இந்திய அணியானது போட்டியை சமனில் முடித்தது ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை அளித்தது. அந்த வகையில் நேற்று நடைபெற்ற இந்த முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் முதலில் விளையாடிய இலங்கை அணியானது நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 230 ரன்களை குவித்தது.
பின்னர் 231 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணியானது ரோகித் சர்மாவின் அசத்தலான ஆட்டம் காரணமாக அதிரடியாக தங்களது சேஸிங்கை துவங்கியது. ரோகித் சர்மா 47 பந்துகளில் 58 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்த பின்னர் எந்த ஒரு வீரரும் நிலைத்து நின்று விளையாடவில்லை. ஆனால் ஆறாவது மற்றும் ஏழாவது வரிசையில் விளையாடிய கே.எல் ராகுல் 31 ரன்கள் மற்றும் அக்ஸர் பட்டேல் 33 ரன்கள் ஆகியோரது சிறப்பான ஆட்டம் காரணமாக இந்திய அணி வெற்றியை நோக்கி நகர்ந்தது.
குறிப்பாக வெற்றிக்கு 33 ரன்கள் தேவை என்ற நிலையில் ஷிவம் துபே பின்வரிசை வீரர்களுடன் இணைந்து மிகச் சிறப்பாக விளையாடி விரைவாக ரன்களை சேர்த்தார். அப்போது ஒரு கட்டத்தில் 24 பந்துகளை சந்தித்து இருந்த ஷிவம் துபே 25 ரன்கள் எடுத்திருந்தபோது இந்திய அணியின் வெற்றிக்கு ஒரு ரன் மட்டுமே தேவைப்பட்டது. அந்த நேரத்தில் ஷிவம் துபே அசலங்கா வீசிய பந்தில் எல்.பி.டபிள்யூ ஆனார்.
இதன் காரணமாக இந்திய அணி ஒன்பது விக்கெட்டுகளை இழந்து ஒரு விக்கெட் மட்டுமே கையில் வைத்திருந்தது. அந்தவேளையில் இந்திய அணியின் வெற்றிக்கு 15 பந்துகளில் 1 ரன் தேவை என்ற நிலை இருந்தது. இதன் காரணமாக நிச்சயம் இந்திய அணி எப்படியாவது வெற்றி கோட்டை கடந்து விடும் என்று எதிர்பார்த்தனர். மீதமுள்ள 15 பந்துகளில் ஏதாவது ஒரு பந்தை தட்டிவிட்டால் கூட இந்திய அணியின் வெற்றி உறுதி என்ற நிலை இருந்தது.
ஆனால் அந்த நேரத்தில் கடைசி பேட்ஸ்மேனாக களத்திற்குள் வந்த அர்ஷ்தீப் சிங் தான் சந்தித்த முதல் பந்திலேயே அசலங்கா பந்தை சிக்ஸருக்கு அடிக்க ஆசைப்பட்டு எல்.பி.டபிள்யூ ஆகி இந்திய அணியின் வெற்றி வாய்ப்பை கோட்டை விட்டார். தோற்க வேண்டிய போட்டியை டை செய்ததால் இலங்கை அணி உற்சாகத்தில் இருந்தது. அதே வேளையில் கையில் இருந்த வெற்றியை கோட்டை விட்டதால் இந்திய வீரர்கள் சோகத்தில் ஆழ்ந்தனர்.
இதையும் படிங்க : எங்களால் அது முடியும்னு நெனச்சோம்.. போட்டி சமனில் முடிந்த பிறகு பேசிய – இலங்கை அணியின் கேப்டன்
குறிப்பாக அர்ஷ்தீப் சிங் செய்த தவறை சுட்டிக்காட்டிய ரசிகர்கள் : தோனி ஒரு மாபெரும் பினிஷர். அவர் 1 ரன் தேவை என்ற பட்சத்தில் போட்டியை சிக்ஸ் அடித்து முடித்து கொடுக்கக்கூடிய திறமை கொண்டவர். அதே திறமையுடன் உள்ளவரா நீங்கள்? எதற்காக அந்த பந்தை சிக்ஸ் அடிக்க ஆசைப்பட வேண்டும். 15 பந்துகளில் எப்படியாவது ஒரு பந்தை தட்டி விட்டிருந்தால் கூட ஒரு ரன் வந்து இருக்கும் என்று அவர் செய்த அந்த தவறை சுட்டிக்காட்டி ரசிகர்கள் கொந்தளித்து வருவது குறிப்பிடத்தக்கது.



