ஹிட்மேனுக்கு மறுவாழ்வு கொடுத்த விசாகப்பட்டினம்.. கோட்டையில் இந்தியாவை மீட்பாரா ரோஹித் சர்மா

Rohit Sharma Vizag
- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிராக தங்களுடைய சொந்த மண்ணில் நடைபெறும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் இந்தியா பரிதாபமாக தோற்றது. குறிப்பாக ஹைதராபாத் நகரில் நடைபெற்ற அப்போட்டியில் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்தை விட சிறப்பாக விளையாடிய இந்தியா 190 ரன்கள் முன்னிலை பெற்றது. இருப்பினும் 2வது இன்னிங்சில் வெறும் 231 ரன்களை செய்ய முடியாமல் சொதப்பிய இந்தியா கையில் வைத்திருந்த வெற்றியை எதிரணிக்கு தாரை பார்த்தது.

எனவே அதில் பாடத்தை கற்றுள்ள இந்தியா அடுத்ததாக விசாகப்பட்டினத்தில் பிப்ரவரி 2ஆம் தேதி துவங்கும் 2வது போட்டியில் வென்று இங்கிலாந்துக்கு பதிலடி கொடுக்க போராட உள்ளது. இருப்பினும் அப்போட்டியில் விராட் கோலி விலகியுள்ள நிலையில் ராகுல் மற்றும் ஜடேஜாவும் காயத்தால் வெளியேறியுள்ளனர். அதனால் பேட்டிங் துறையில் ரோகித் சர்மா மட்டுமே அனுபவம் மிகுந்தவராக இருப்பதால் கேப்டனாக முன்னின்று சிறப்பாக செயல்படுவது அவசியமாகிறது.

- Advertisement -

வாழ்வு கொடுத்த விசாகப்பட்டினம்:
முன்னதாக 2007ஆம் ஆண்டு சர்வதேச அரங்கில் அறிமுகமான ரோகித் சர்மா 2013 வரை தடுமாற்றமாகவே செயல்பட்டு வந்தார். இருப்பினும் 2013 சாம்பியன்ஸ் ட்ராபியில் அப்போதைய கேப்டன் தோனி துவக்க வீரராக களமிறங்குவதற்கு கொடுத்த வாய்ப்பை பொன்னாக மாற்றிய ரோகித் சர்மா ஒருநாள் கிரிக்கெட்டில் 3 இரட்டை சதங்கள் அடித்து இந்தியாவுக்கு நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்து நிரந்தர இடத்தையும் பிடித்தார்.

ஆனாலும் 2013இல் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான அவர் 2019 வரை திண்டாட்டமாகவே செயல்பட்டு வந்தார். அப்போது டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு சரிப்பட்டு வர மாட்டார் என்று விமர்சனங்களை எதிர்கொண்ட ரோஹித் 2019 உலகக் கோப்பையில் தனி ஒருவனாக 5 சதங்கள் அடித்து உலக சாதனை படைத்தார். அதன் காரணமாக 2019 அக்டோபர் மாதம் சொந்த மண்ணில் நடந்த தென்னாபிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தேர்வான அவர் துவக்க வீரராக களமிறங்கும் வாய்ப்பை பெற்றார்.

- Advertisement -

அதில் இதே விசாகப்பட்டினம் மைதானத்தில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் போட்டியில் பட்டைய கிளப்பிய அவர் முதல் இன்னிங்ஸில் 176 ரன்களும் 2வது இன்னிங்ஸில் 127 ரன்களும் விளாசி இந்தியா 203 ரன்கள் வித்தியாசத்தில் வெல்வதற்கு முக்கிய பங்காற்றி ஆட்டநாயகன் விருதை வென்றார். அதன் காரணமாக டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு சரிப்பட்டு வர மாட்டார் என்று விமர்சித்தவர்களின் கருத்தை பொய்யாக்கி பாராட்டுகளை அள்ளிய ரோகித் தற்போது வரை நிரந்தர துவக்க வீரராக விளையாடி வருகிறார்.

இதையும் படிங்க: காயத்தால் விலகிய முக்கிய வீரர்.. இந்தியாவை வீழ்த்த புது வீரரை இறக்கும் இங்கிலாந்து.. ஸ்டோக்ஸ் சூசகம்

மேலும் அம்மைதானத்தில் மொத்தம் 2 சதங்கள் உட்பட 303 ரன்களை 151.301 என்ற மிரட்டலான சராசரியில் எடுத்துள்ள அவர் விசாகப்பட்டினத்தில் தற்போது 2வது முறையாக அதுவும் கேப்டனாக களமிறங்க உள்ளார். எனவே டெஸ்ட் கிரிக்கெட்டில் தமக்கு மறுவாழ்வை கொடுத்த கோட்டையான விசாகப்பட்டினத்தில் விராட் கோலி போன்ற முதன்மை வீரர்கள் இல்லாமல் 1 – 0* என்ற கணக்கில் தடுமாறும் இந்தியாவை அபாரமாக விளையாடி இம்முறையும் ரோகித் சர்மா மீட்டெடுப்பார் என்று உறுதியாக நம்பலாம்.

Advertisement