இந்திய கிரிக்கெட் அணி சமீபத்திய நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர்களில் அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்தது. அதனால் முதல் முறையாக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு தகுதி பெறாமல் இந்தியா வெளியேறியது. இந்த தோல்விகளுக்கு கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் சுமாராக விளையாடியது முக்கிய காரணமாக அமைந்தது. அதனால் அவர்களை ஓய்வு பெறுமாறு ஒரு தரப்பு ரசிகர்கள் விமர்சித்து வருகிறார்கள்.
அந்த விமர்சனத்துக்கு மத்தியில் ரோஹித் சர்மா ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி போட்டியில் தம்மைத்தாமே அணியிலிருந்து நீக்கிக்கொண்டார். அதனால் அவருடைய டெஸ்ட் கேரியர் முடிவுக்கு வந்ததாகவும் பார்க்கப்படுகிறது. ஏனெனில் விரைவில் 38 வயதை தொடும் அவர் 2027 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் வரை விளையாடுவாரா என்பது சந்தேகமாகும்.
முக்கிய முடிவு:
அதே சமயம் 2025 ஜூன் மாதம் இங்கிலாந்து மண்ணில் இந்தியா 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. அதில் வாய்ப்பை பெற வேண்டுமெனில் ரோஹித் ஃபார்முக்கு திரும்ப வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். இந்நிலையில் தம்முடைய டெஸ்ட் கேரியரை காப்பாற்றிக் கொள்வதற்காக ரோகித் சர்மா ரஞ்சிக் கோப்பையில் விளையாட முடிவு எடுத்துள்ளார்.
அதற்காக வான்கடே மைதானத்தில் மும்பை அணியின் கேப்டன் அஜிங்கிய ரகானேவுடன் சேர்ந்து ரோஹித் சர்மா தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டார். விரைவில் ஜம்மு காஷ்மீர் அணிக்கு எதிராக மும்பை விளையாடும் ரஞ்சிக் கோப்பை போட்டி துவங்க உள்ளது. மறுபுறம் அடுத்து நடைபெறும் இங்கிலாந்து டி20 தொடரில் ஓய்வு காரணமாக ரோகித் சர்மா இந்தியாவுக்காக விளையாடப் போவதில்லை.
கோலி திருந்துவரா:
எனவே அந்தப் போட்டியில் மும்பை அணிக்காக ரோகித் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனாலேயே அவர் தற்போது பயிற்சிகளை எடுத்து வருகிறார் என்றே சொல்லலாம். அப்படி நடைபெற்றால் 2015க்குப்பின் 10 வருடங்கள் கழித்து ரோகித் சர்மா ரஞ்சிக் கோப்பையில் களமிறங்குவார். மொத்தத்தில் ரோஹித் சர்மா பயிற்சி எடுப்பதை பார்க்கும் ரசிகர்கள் இதை முன்பே செய்திருக்கலாமே என்று அதிருப்தியை வெளிப்படுத்துகிறார்கள்.
இதையும் படிங்க: இன்னும் அதை நெனச்சா எனக்கு கஷ்டமா தான் இருக்கு.. 9 வருட வலியை பகிர்ந்த – கருண் நாயர்
அதே சமயம் ரோகித்தை பார்த்து விராட் கோலி திருந்துவரா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஏனெனில் 2012க்குப்பின் அவரும் ரஞ்சிக் கோப்பையில் விளையாடாமல் இந்தியாவுக்காக விளையாடிய நேரம் தவிர்த்து எஞ்சிய நேரங்களில் லண்டனில் சுற்றி வருகிறார். அடுத்த இங்கிலாந்து தொடரில் வாய்ப்பு பெற வேண்டுமெனில் அவரும் ஃபார்முக்கு திரும்புவது கட்டாயம் ஆகிறது.



