இந்திய கிரிக்கெட் அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான கருண் நாயர் கடந்த 2016-ஆம் ஆண்டு இந்திய அணிக்காக அறிமுகமாகி 2 ஒருநாள் போட்டிகள் மற்றும் 6 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். ஒருநாள் போட்டிகளை பொறுத்தவரை அவரது சொதப்பலான ஆட்டம் காரணமாக இரண்டே போட்டியில் அவர் வெளியேற்றப்பட்டாலும் டெஸ்ட் போட்டிகளைப் பொருத்தவரை சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி உள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டை பொருத்தவரை 6 போட்டியில் விளையாடியுள்ள அவர் 7 இன்னிங்ஸ்களில் 62 ரன்கள் சராசரியுடன் 374 ரன்கள் குவித்துள்ளார்.
இந்திய அணிக்கு திரும்பாதது வருத்தமா இருக்கு :
அதிலும் குறிப்பாக இங்கிலாந்து அணிக்கு எதிராக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற போட்டியின் போது ஆட்டமிழக்காமல் 303* ரன்கள் குவித்து சேவாக்கிற்கு அடுத்து டெஸ்ட் கிரிக்கெட்டில் முச்சதம் அடித்த இரண்டாவது வீரர் என்ற சாதனையையும் நிகழ்த்தி இருந்தார். இதன் காரணமாக அவருக்கு தொடர்ந்து இந்திய டெஸ்ட் அணியில் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் முன்னணி வீரர்களின் இருப்பு காரணமாக அவருக்கு அந்த வாய்ப்பு மறுக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து 9 ஆண்டுகளாக டெஸ்ட் அடியில் மீண்டும் இடம் கிடைக்காமல் தனது வாய்ப்புக்காக காத்திருக்கிறார். இந்நிலையில் தற்போது நடைபெற்று வரும் விஜய் ஹசாரே தொடரில் தனது சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி வரும் அவர் இதுவரை நடைபெற்று முடிந்துள்ள 6 போட்டிகளில் 5 சதங்களுடன் 664 ரன்கள் குவித்து அசத்தியுள்ளார். அவரது இந்த சிறப்பான செயல்பாடு காரணமாக விதர்பா அணி மகாராஷ்டிரா அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியிலும் விளையாட இருக்கிறது.
இந்நிலையில் வாய்ப்புக்காக நீண்ட ஆண்டு காலமாக காத்திருப்பது குறித்து வருத்தம் தெரிவித்துள்ள கருண் நாயர் கூறுகையில் : ஒரே தொடரில் நான் ஐந்து சதங்களை இதற்கு முன்னர் அடித்ததில்லை. ஆனால் தற்போது எனது மிகச் சிறந்த பேட்டிங்கை வெளிப்படுத்தி உள்ளதாக நினைக்கிறேன். எனது பேட்டிங் செயல்பாடும் இந்த தொடரில் மிகச் சிறப்பாக இருந்து அணியின் வெற்றிக்கு உதவுவதில் மகிழ்ச்சி.
நான் கடைசியாக இந்திய அணிக்காக விளையாடியிருந்த போதும் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தேன். ஆனாலும் அதன்பிறகு எனக்கான வாய்ப்பு கிடைக்காததில் மிகவும் வருத்தமாக உள்ளது. குறிப்பாக நான் ஓவல் மைதானத்தில் இந்திய ஏ அணிக்கு எதிராக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் சதம் அடித்திருந்தேன். அந்த சதத்திற்கு பிறகு பால்கனியில் நின்று யோசிக்கும் போது நான் ஏன் மீண்டும் இந்திய அணியில் வாய்ப்பு பெறவில்லை? என்ற கேள்வியும் எனக்குள் எழுந்தது.
இதையும் படிங்க : முகமது சிராஜ் இங்கிலாந்து அணிக்கெதிரான டி20 தொடரில் தேர்வு செய்யப்படாததற்கு – இதுதான் காரணம்
இந்நிலையில் தற்போது மீண்டும் இந்திய அணிக்கு கம்பேக் கொடுக்கும் வகையில் தொடர்ந்து உழைத்து வருகிறேன். எனக்கான வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில் நிச்சயம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவேன் என்று கருண் நாயர் தெரிவித்திருந்தார். நடைபெற்று வரும் விஜய் ஹசாரே தொடரில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் மூலம் தேர்வுக்குழுவினரின் கவனத்தை அவர் ஈர்த்துள்ளதால் நிச்சயம் அவருக்கு எதிர்வரும் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



