இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் மற்றும் நம்பிக்கை நட்சத்திரம் ரோகித் சர்மா தற்சமயத்தில் சுமாரான ஃபார்மில் இருக்கிறார். கேப்டனாகவும் பேட்ஸ்மேனாகவும் அவர் கடந்த நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா தொடர்களில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. அவருடைய சுமாரான ஆட்டத்தால் டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு முதல் முறையாக இந்தியா தகுதி பெறாமல் வெளியேறியது.
மேலும் பேட்டிங்கில் மோசமான ஃபார்மில் இருக்கும் ரோகித் சர்மா ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் தன்னைத்தானே நீக்கிக் கொண்ட முதல் இந்திய கேப்டன் என்ற மோசமான சாதனை படைத்தார். அதனால் விமர்சனங்களை சந்தித்த அவர் தனது ஃபார்மை மீட்டெடுப்பதற்காக ரஞ்சிக்கோப்பையில் விளையாடி வருகிறார். கடைசியாக 2015ஆம் ஆண்டு விளையாடிய அவர் 10 வருடங்கள் கழித்து களமிறங்கியது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
ஏமாற்றிய ரோஹித்:
அந்த நிலையில் ஜம்மு காஷ்மீர் அணிக்கு எதிராக மும்பையில் நேற்று துவங்கிய போட்டியில் ரோகித் களமிறங்கினார். ஆனால் அந்த வாய்ப்பில் 18 பந்துகள் எதிர்கொண்டு நங்கூரமாக விளையாடிய அவர் ஒரு ரன்னில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார். அவரைப் போலவே ஜெய்ஸ்வால் 4, கேப்டன் ரஹானே 12, ஸ்ரேயாஸ் ஐயர் 11, சிவம் துபே 0 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார்கள்.
இறுதியில் சர்துள் தாகூர் 51, டானுஷ் கோட்டியான் 26 ரன்கள் எடுத்தும் மும்பையை 120 ரன்களுக்கு சுருட்டி வீசிய ஜம்மு காஷ்மீருக்கு அதிகபட்சமாக உமர் நசீர், யுவ்திர் சிங் தலா 4 விக்கெட்டுகள் எடுத்தார்கள். அடுத்ததாக விளையாடிய ஜம்மு காஷ்மீர் தங்களது முதல் இன்னிங்சில் 206 ரன்கள் குவித்து முன்னிலை பெற்றது. அதிகபட்சமாக சுபம் கஜ்ரியா 53, அபித் முஸ்தக் 44 ரன்கள் எடுத்தார்கள்.
சொதப்பல் கம்பேக்:
அடுத்ததாக களமிறங்கிய மும்பைக்கு ரோகித் சர்மா ஜெய்ஸ்வால் ஆகியோர் 54 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல துவக்கத்தை கொடுத்தார்கள். அதில் 2 பவுண்டரி 3 சிக்சரை பறக்க விட்ட ரோஹித் சர்மா குறைந்தது அரை சதத்தை அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 28 (35) ரன்களில் அவுட்டாகி மீண்டும் ஏமாற்றத்தையே கொடுத்தார். அவருடன் விளையாடிய ஜெய்ஸ்வால் 26 (51) ரன்களில் அவுட்டாகி சென்றார்.
இதையும் படிங்க: விராட் கோலி அதுக்கு சரியான வீரர்.. அவரையே மறுபடியும் செலக்ட் பண்ணுங்க – ஏ.பி.டி ஆதரவு
அப்படியே ஸ்ரேயாஸ் 17, சிவம் துபே 0 ரன்களில் அவுட்டானதால் 2வது நாள் உணவு இடைவெளியில் 86-5 என மும்பை தோல்வியை தவிர்க்க திணறி வருகிறது. மொத்தத்தில் 10 வருடங்கள் கழித்து ரஞ்சிக்கோப்பையில் ரோஹித் மாஸ் கம்பேக் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மொத்தமாக 30 ரன்கள் கூட அடிக்காத அவர் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தையே கொடுத்துள்ளார்.



