டிசம்பர் 26ஆம் தேதி இந்தியா – ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகள் மோதும் நான்காவது டெஸ்ட் போட்டி மேல்போர்ன் மைதானத்தில் துவங்கியது. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்து முதல் நாளில் 311-6 ரன்கள் குவித்துள்ளது. சாம் கோன்ஸ்டஸ் 60, உஸ்மான் கவாஜா 52, லபுஸ்ஷேன் 72 ரன்கள் எடுத்த அந்த அணிக்கு களத்தில் ஸ்டீவ் ஸ்மித் 68*, கமின்ஸ் 8* ரன்களுடன் உள்ளனர்.
இந்திய அணிக்கு முதல் நாளில் அதிகபட்சமாக ஜஸ்ப்ரித் பும்ரா 3 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார். முன்னதாக இந்தத் தொடரில் இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் முதல் முறையாக ஆஸ்திரேலியாவில் விளையாடி வருகிறார். அந்த சூழ்நிலையில் இப்போட்டியில் அவரை கேப்டன் ரோஹித் சர்மா ஷார்ட் லெக் பகுதியில் ஃபீல்டிங் செய்ய நிற்க வைத்தார்.
பயத்தில் ஜெய்ஸ்வால்:
அப்போது ரவீந்திர ஜடேஜா வீசிய பந்துகளை ஸ்டீவ் ஸ்மித் கொஞ்சம் அதிரடியாக இழுத்து அடித்தார். அந்த பந்து தன் மீது படுவதை தவிர்ப்பதற்காக ஜெய்ஸ்வால் காற்றில் தாவி குதித்தார். மற்றொரு பந்தை ஸ்டீவ் ஸ்மித் மிகவும் அருகிலேயே அடித்தார். ஆனால் அந்தப் பந்தும் தம் மேல் பட்டு விடுமோ என்று பயந்த ஜெய்ஸ்வால் மீண்டும் காற்றில் லேசாக தாவிக் குதித்தார்.
கடைசியில் பார்த்தால் பந்து அவருக்கு காலுக்கு 3 – 4 அடிகள் முன்பாகவே தரையில் பட்டு மெதுவாக உருண்டு வந்தது. அதைப் பார்த்து விக்கெட் கீப்பர் ரிசப் பண்ட் புன்னகைத்தார். மறுபுறம் முதல் ஸ்லிப் பகுதியில் நின்று கொண்டிருந்த ரோகித் சர்மா அதைப் பார்த்து கடுப்பாகி ஜெய்ஸ்வாலிடம் பேசியது பின்வருமாறு.
சொல்லிக்கொடுத்த ரோஹித்:
“அரே ஜஸ்ஸு (ஜெய்ஸ்வால்). நீங்கள் தெருவோர கிரிக்கெட்டில் விளையாடுகிறீர்களா? தாவாமல் களத்திலேயே நில்லுங்கள். அவர் (ஸ்மித்) பந்தை அடிக்கும் வரை களத்திலேயே நில்லுங்கள். இப்படி தாவாதீர்கள்” என்று ஹிந்தியில் சொன்னது ஸ்டம்ப் மைக்கில் பதிவானது. அதைக் கேட்டு வர்ணனையாளர்கள் சிரித்து மகிழ்ந்தனர். அந்த வகையில் புதிய வீரரான ஜெய்ஸ்வாலுக்கு கேப்டனாக ரோகித் ஃபீல்டிங் சொல்லிக் கொடுத்த தருணத்தை பார்த்து ரசிகர்களும் மகிழ்ந்தனர்.
இதையும் படிங்க: உங்களோட ரோல் மாடலை இதை வெச்சு செலக்ட் பண்ணுங்க.. சிராஜை சாடிய ஃகைப்.. பும்ராவுக்கு பாராட்டு
இந்த நிலையில் இப்போட்டியில் வெற்றி பெறுவதற்கு விரைவில் ஆஸ்திரேலிய அணியை இந்தியா சுருட்ட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. அதே போல பேட்ஸ்மேன்களும் இம்முறையாவது பெரிய ரன்கள் குவிப்பது அவசியமாகிறது. ஏனெனில் 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை ஃபைனலுக்கு இப்போட்டியில் இந்தியா வெல்வது கட்டாயமாக பார்க்கப்படுகிறது.



