மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் டிசம்பர் 26ஆம் தேதி இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 4வது டெஸ்ட் போட்டி துவங்கியது. அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்யும் ஆஸ்திரேலியா முதல் நாள் முடிவில் 311-7 ரன்கள் குவித்து வலுவான துவக்கத்தை பெற்றுள்ளது. சாம் கோன்ஸ்டஸ் 60, உஸ்மான் கவாஜா 52, லபுஸ்ஷேன் 72 ரன்கள் எடுத்த அந்த அணிக்கு களத்தில் ஸ்டீவ் ஸ்மித் 68*, கமின்ஸ் 8* ரன்களுடன் உள்ளனர்.
இந்திய அணிக்கு இதுவரை அதிகபட்சமாக ஜஸ்ப்ரித் பும்ரா 3* விக்கெட்எடுத்து அசத்தி வருகிறார். குறிப்பாக இந்திய அணிக்கு டிராவிஸ் ஹெட் மிகப்பெரிய தொல்லையை கொடுத்து வருகிறார் என்பதை அனைவரும் அறிவோம். அப்படிப்பட்ட அவரை இந்தப் போட்டியில் ஜஸ்ப்ரித் பும்ரா கிளீன் போல்ட்டாக்கி டக் அவுட் செய்து அனுப்பி வைத்தார்.
ரோல் மாடல் பும்ரா:
அதன் வாயிலாக வாயிலாக சர்வதேச கிரிக்கெட்டில் டிராவிஸ் ஹெட்டை டக் அவுட் செய்த முதல் இந்திய பவுலர் என்ற சாதனையையும் அவர் படைத்தார். ஆனால் அப்படி முக்கியமான விக்கெட்டை எடுத்த பும்ரா எவ்விதமான ஆர்ப்பாட்டமும் இல்லாமல் அமைதியாக பெரிய புன்னகையை கூட வெளிப்படுத்தாமல் கொண்டாடினார். இந்நிலையில் இப்படிப்பட்டவரை தான் ரோல் மாடலாக குழந்தைகள் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று பும்ராவை முன்னாள் வீரர் முகமது கைஃப் பாராட்டியுள்ளார்.
மறுபுறம் முகமது சிராஜை அவர் மறைமுகமாக விமர்சித்துள்ளார். ஏனெனில் இந்தத் தொடரின் 2வது போட்டியில் சதமடித்த ஹெட் 140 ரன்கள் எடுத்த பின் சிராஜ் அவரை அவுட்டாக்கினார். அப்போது வெளியே செல்லுங்கள் என்று கோபமாக அவர் அனுப்பியது சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும் 140 ரன்கள் அடித்து வெற்றியை பறித்த ஒருவரை பாராட்டாமல் அப்படி அனுப்பியது தேவையற்ற செயல் என்று சிராஜை நிறைய முன்னாள் இந்திய வீரர்களே விமர்சித்தார்கள்.
பொறுமையான பும்ரா:
அப்படிப்பட்ட சூழ்நிலையில் ஹெட்டை 0 ரன்களில் அவுட்டாக்கி விட்டு ஆர்ப்பாட்டம் இல்லாமல் சென்ற பும்ரா ரோல் மாடலாக இருக்க தகுதியானவர் என்று கைஃப் பாராட்டியுள்ளார். இது பற்றி ட்விட்டரில் அவர் பதிவிட்டுள்ளது பின்வருமாறு. “ஆஸ்திரேலியாவின் முதன்மை வீரர் டிராவிஸ் ஹெட் விக்கெட்டை பும்ரா எப்படி கொண்டாடினார்?”
இதையும் படிங்க: ஜாம்பவான் அனில் கும்ப்ளேவை முந்திய ஜஸ்ப்ரித் பும்ரா.. மெல்போர்ன் மைதானத்தில் மாபெரும் சாதனை
“பெரிய ஆர்ப்பாட்டமான கொண்டாட்டம் இல்லை, கோபமான வழி அனுப்பும் நிகழ்வு இல்லை, வெறும் புன்னகை மட்டுமே இருந்தது. இங்கே குழந்தைகள் உங்களுடைய ரோல் மாடலை எப்படி ஞானத்துடன் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதை கற்றுக் கொள்ளலாம்” எனக் கூறினார். மொத்தத்தில் ஜஸ்ப்ரித் பும்ரா இத்தொடர் முழுவதுமே இந்திய அணிக்காக முழு மூச்சுடன் போராடுவது குறிப்பிடத்தக்கது.



