ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபி 2025 கிரிக்கெட் தொடரின் சாம்பியன் பட்டத்தை வென்ற இந்தியா சாதனை படைத்துள்ளது. குறிப்பாக துபாயில் நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் நியூசிலாந்தை 4 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா தோற்கடித்தது. அதனால் 2002, 2013க்குப்பின் 3வது முறையாக சாம்பியன்ஸ் கோப்பை வென்று இந்தியா மாபெரும் சாதனை படைத்துள்ளது.
இந்நிலையில் இந்த வெற்றிக்கு தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி உட்பட அனைத்து வீரர்களும் சரியான நேரத்தில் சிறப்பாக விளையாடியது முக்கிய காரணமானதாக இந்திய கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார். மேலும் துபாயில் ஆதரவு கொடுத்த இந்திய ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “எங்களுக்காக வந்து ஆதரவு கொடுத்த ஒவ்வொருவரையும் பாராட்ட விரும்புகிறேன். எங்களுடைய சொந்த ஊர் கிடையாது”
ரசிகர்களுக்கு நன்றி:
“ஆனாலும் அவர்கள் இதை சொந்த ஊர் போல் மாற்றினார்கள். அவர்களுக்கு மத்தியில் வெற்றி பெற்றது நல்ல திருப்தியை கொடுக்கிறது. ஃபைனல் மட்டுமின்றி ஆரம்பம் முதலே எங்களுடைய ஸ்பின்னர்கள் வெற்றியில் பங்காற்றினர். இது போன்ற பிட்ச்சில் எதிர்பார்ப்பு இல்லையென்றாலும் அவர்கள் எங்களை ஏமாற்றவில்லை. அதில் எங்களது பலவீனத்தை கணக்கிட்டு அதற்கு தகுந்தார் போல் விளையாடி நாங்கள் சாதகத்தை உருவாக்கிக் கொண்டோம்”
“திடமான மனநிலை கொண்ட ராகுல் எப்போதும் அழுத்தம் தன்னை தாண்டி செல்வதற்கு விட மாட்டார். அதனாலேயே நாங்கள் அவரை மிடில் ஆர்டரில் விளையாட வைத்து ஃபினிஷிங் செய்ய முயற்சித்தோம். அவரைப் போன்று அனுபவம் கொண்டவர் சரியான நேரத்தில் தகுந்த ஷாட்டை அடிக்கக் கூடியவர். அது அவரைச் சுற்றியுள்ள ஹர்திக் பாண்டியா போன்றவர்களை சுதந்திரமாக விளையாட உதவுகிறது”
வருண் அசத்தல்:
“தொடர் முழுவதும் எங்களுடைய பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாடினர். வருண் சக்கரவர்த்தியிடம் ஏதோ வித்தியாசமாக இருக்கிறது என்பதை பலமுறை தெரிவித்துள்ளேன். இது போன்ற பிட்ச்சில் பேட்ஸ்மேன் அவரை வலுக்கட்டாயமாக அடிக்க முயற்சிப்பார்கள். அப்போது தான் அவர் மிகவும் ஆபத்தானவராக இருப்பார். அவரை விளையாட வைக்கும் நோக்கத்திலேயே நாங்கள் அணிக்குள் தேர்ந்தெடுத்தோம்”
இதையும் படிங்க: இந்திய அணியின் எதிர்காலம் அவங்க கைல நல்லாருக்கு.. ஆஸியில் இருந்து கம்பேக் கொடுத்துட்டோம்.. கோலி பேட்டி
“தொடரை சரியாக துவங்காத அவர் நியூசிலாந்துக்கு எதிராக 5 விக்கெட் எடுத்து தனது வாய்ப்பை முழுமையாக பயன்படுத்தினார். அவரும் எங்களை ஏமாற்றவில்லை. ஏராளமான ரசிகர்கள் வந்து எங்களுக்கு பின்புலமாக நின்று ஆதரவளித்ததற்கு நன்றி உடையவனாக இருக்கிறேன். அவர்கள் எங்களுக்கு ஆதரவு கொடுப்பது வெற்றியில் நிறைய வித்தியாசத்தை ஏற்படுத்துகிறது. ஏற்கனவே சொன்னது போல அவர்கள் துபாயை எங்களுடைய சொந்த ஊர் போல மாற்றினார்கள்” என்று கூறினார்.



