ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையை வென்றதை இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் எப்போதும் நினைவில் வைத்திருப்பார்கள். ஏனெனில் 2013க்குப்பின் ஐசிசி தொடர்களில் தொடர்ச்சியாக சந்தித்து வந்த தோல்விகளை அத்தொடரில் நிறுத்திய இந்தியா 17 வருடங்கள் கழித்து டி20 உலகக் கோப்பையை வென்றது. அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் நடைபெற்ற அத்தொடரில் ரோஹித் தலைமையில் மிரட்டிய இந்தியா தோல்வியே சந்திக்காமல் கோப்பையை வென்றது.
குறிப்பாக அமெரிக்காவில் நடைபெற்ற பரம எதிரி பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் முதலில் விளையாடிய இந்தியா 119 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக ரிஷப் பண்ட் போராடி 42 (31) ரன்கள் எடுத்தார். அதன் காரணமாக 2021 டி20 உலகக் கோப்பை போல பரம எதிரி பாகிஸ்தானிடம் மீண்டும் இந்தியா தோற்கப் போகிறதோ? என்று ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்தனர்.
ரிஷப் பண்ட் அபாரம்:
ஆனால் பவுலிங் துறையில் தராசு முள் போல கச்சிதமாக செயல்பட்ட இந்தியா 20 ஓவரில் பாகிஸ்தானை 113 ரன்களுக்கு சுருட்டி வீசியது. அதனால் வெறும் 6 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்தியாவுக்கு பும்ரா 3, பாண்டியா 2 விக்கெட்டுகளை எடுத்து வெற்றியில் கருப்பு குதிரையாக செயல்பட்டனர். இந்நிலையில் அந்தப் போட்டியில் ரிஷப் பண்ட் அடித்தது 70 ரன்களுக்கு சமம் என்று கேப்டன் ரோஹித் சர்மா பாராட்டியுள்ளார்.
மேலும் பாகிஸ்தானிடம் தோற்று உலகக் கோப்பையை வெல்லாவிட்டால் அதில் எந்த பயனுமில்லை என்றும் அவர் கூறியுள்ளார். இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் ரோஹித் பேசியது பின்வருமாறு. “ரிஷப் பண்ட்க்கு எந்த ஆலோசனையும் கொடுக்கவில்லை. அவர் அவராகவே விளையாட விரும்பினோம்”
பாகிஸ்தானை வீழ்த்தி என்ன யூஸ்:
“உங்களால் முடிந்தவற்றை முயற்சித்து எதிரணி பவுலர்களை அழுத்தத்தில் தள்ள வேண்டும். கடினமான சூழ்நிலைகளில் அதைக் கச்சிதமாக செய்த அவர் அடித்த 42 ரன்கள் 70 ரன்களைப் போன்றதாகும். பவுலிங் துறையில் எனக்கு பும்ராவுடன் அர்ஷ்தீப் சிங் இருந்தார். பாகிஸ்தானுக்கு எதிராக வென்றது கோப்பையை வெல்வதற்கு முன்பாக நிரப்ப வேண்டிய ஒரு கட்டம் மட்டுமே”
இதையும் படிங்க: பும்ரா அவங்க எல்லாரையும் விட பெஸ்ட்.. சச்சினுக்கு கொடுக்கும் மரியாதை கொடுங்க.. அஸ்வின் கோரிக்கை
“பாகிஸ்தானை நீங்கள் தோற்கடிக்க விரும்புவீர்கள் என்பது எனக்குத் தெரியும். அது பற்றி நிறைய பேச்சுக்கள் இருந்தன. ஆனால் எங்களைப் பொறுத்த வரை அவர்கள் நாங்கள் எதிர்கொண்டு வெல்ல வேண்டிய ஒரு எதிரணி மட்டுமே. பாகிஸ்தானை தோற்கடித்தால் உலகக் கோப்பையை வென்று விடலாம் என்று நாங்கள் எப்போதும் அதிகமாக நினைத்ததில்லை. அது வேலையும் செய்யாது. ஒருவேளை பாகிஸ்தானை தோற்கடித்து உலகக் கோப்பையை வெல்லா விட்டால் நன்றாக இருக்குமா? இருக்காது” என்று கூறினார்.



