ஐசிசி 2025 சாம்பியன்ஸ் டிராபியில் மார்ச் இரண்டாம் தேதி நடைபெற்ற கடைசி லீக் போட்டியில் நியூசிலாந்தை 44 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வீழ்த்தியது. துபாயில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய இந்தியா போராடி 250 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது. அதிகபட்சமாக ஸ்ரேயாஸ் ஐயர் 79, ஹர்திக் பாண்டியா 45, அக்சர் பட்டேல் 42 ரன்கள் எடுத்தார்கள்.
நியூசிலாந்துக்கு அதிகபட்சமாக மாட் ஹென்றி 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பின்னர் விளையாடிய நியூசிலாந்து ஆரம்பம் முதலே இந்தியாவின் நேர்த்தியான பந்து வீச்சில் தடுமாற்றமாக விளையாடி 45.3 ஓவரில் 205 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது. அதிகபட்சமாக கேன் வில்லியம்சன் 81 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியாவுக்கு அதிகபட்சமாக வருண் சக்கரவர்த்தி 5 விக்கெட்டுகளை சாய்த்தார்.
ஆஸி சவாலுக்கு தயார்:
அதனால் 3 போட்டிகளில் 3 வெற்றிகளைப் பெற்ற இந்தியா குரூப் பி புள்ளிப் பட்டியலில் முதலிடம் பிடித்தது. அதன் காரணமாக மார்ச் 4ஆம் தேதி நடைபெறும் செமி ஃபைனலில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியை இந்தியா எதிர்கொள்கிறது. இந்நிலையில் அந்த போட்டிக்காக காத்திருப்பதாக கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். மேலும் வருண் சக்கரவர்த்தி சோதிப்பதற்காக இந்தப் போட்டியில் வாய்ப்பு கொடுத்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
இது பற்றி ரோஹித் பேசியது பின்வருமாறு. “குரூப் சுற்றை உயர்வாக முடித்தது முக்கியம். நியூசிலாந்து நல்ல கிரிக்கெட்டை விளையாடும் நல்ல அணி. அவர்களுக்கு எதிராக கச்சிதமாக விளையாடி நல்ல முடிவை பெற்றது முக்கியம். 30/3 என பேட்டிங்கில் ஆரம்பத்திலேயே சரிவை சந்தித்த போது பார்ட்னர்ஷிப் அமைப்பது முக்கியமாக இருந்தது. நாங்கள் எடுத்த ரன்கள் போதுமானதாகவே நான் நினைத்தேன்”
இந்தியா வெல்லும்:
“ஏனெனில் அந்த இலக்கை கட்டுப்படுத்தக்கூடிய தரமான பவுலிங் எங்களிடம் இருக்கிறது. வருண் சக்கரவர்த்தி தன்னிடம் ஏதோ வித்தியாசமான திறமையைக் கொண்டுள்ளார். எனவே அவரால் எங்களுக்கு கொடுக்க முடியும் என்பதைப் பார்க்க விரும்பினோம். அடுத்தப் போட்டியை பற்றி அதிகம் சிந்திக்கவில்லை என்றாலும் அது நல்ல போட்டி”
இதையும் படிங்க: நேத்து தான் சொன்னாங்க.. அந்த 4 சீனியர்கள் ஹெல்ப் பண்ணாங்க.. நியூஸிலாந்தை சாய்த்த ஆட்டநாயகன் வருண்
“இந்த சிறிய தொடரில் ஒவ்வொரு போட்டியையும் வெல்ல வேண்டும். எனவே உங்களது தவறுகளை விரைவாக திருத்துவது முக்கியம். ஒரு அணியாக அதை செய்வது எங்களுக்கு முக்கியம் என்பது தெரியும். செமி ஃபைனல் நல்ல போட்டியாக இருக்கும் ஐசிசி தொடர்களில் அபாரமாக விளையாடிய வரலாற்றை ஆஸ்திரேலியா கொண்டிருக்கிறது. எங்களைப் பொறுத்த வரை போட்டி நாளில் நாங்கள் எதை சிறப்பாக செய்ய வேண்டும் என்பது முக்கியம். அந்த மிகச்சிறந்த போட்டிக்காக காத்திருக்கிறோம். அதையும் தைத்து எடுத்துச் செல்வோம் என்று நம்புகிறேன்” எனக் கூறினார்.



