நட்சத்திர கிரிக்கெட் வீரர் ஜஸ்பிரித் பும்ரா ஐபிஎல் தொடரில் மும்பை அணியில் சிறப்பாக செயல்பட்டு கடந்த 2016இல் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகி 2018 முதல் 3 வகையான இந்திய அணியிலும் நிலையான இடத்தை பிடித்தார். குறிப்பாக தன்னுடைய வித்தியாசமான பவுலிங் ஆக்சனால் எதிரணி பேட்ஸ்மேன்களை திணறடிக்கும் அவர் குறுகிய காலத்திலேயே முதன்மை வேகப்பந்து வீச்சாளராக உருவெடுத்து இந்தியாவுக்கு நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்தார். அதிலும் 2018/19 பார்டர் – கவாஸ்கர் கோப்பையை ஆஸ்திரேலிய மண்ணில் முதல் முறையாக வென்று சரித்திரம் படைப்பதற்கு முக்கிய பங்காற்றிய அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஹாட்ரிக் விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார்.

அந்த வகையில் போட்டியின் எந்த நேரத்திலும் துல்லியமான யார்க்கர் பந்துகளை வீசி வெற்றியை இந்தியாவின் பக்கம் திருப்பக்கூடிய கருப்பு குதிரையாக கருதப்படும் அவர் 2022 இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் காயமடைந்து 2022 ஆசிய கோப்பையில் பங்கேற்கவில்லை. அது அந்த தொடரில் இந்தியாவுக்கு தோல்வியை கொடுத்ததால் மீண்டும் அவசரமாக பயிற்சிகளை எடுத்து முழுமையாக குணமடையாமல் களமிறங்கிய அவர் 2022 அக்டோபரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 2 போட்டிகளில் மட்டும் விளையாடி மீண்டும் காயமடைந்து 2022 டி20 உலகக் கோப்பையில் வெளியேறினார்.
ரோஹித் சர்மாவின் பதில்:
அதனால் பெரிய பின்னடைவை சந்தித்த இந்தியா எதிர்பார்க்கப்பட்டது போலவே 2022 டி20 உலகக் கோப்பையில் தோற்றத்துடன் 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலிலும் படுதோல்வியை சந்தித்தது. மொத்தத்தில் அடுத்தடுத்த 3 முக்கிய தொடர்களில் தோற்ற இந்தியா சொந்த மண்ணில் நடைபெறும் 2023 உலகக்கோப்பை வெல்வதற்கு பும்ரா விளையாடுவது மிகவும் இன்றியமையாததாக பார்க்கப்படுகிறது. அந்த நிலையில் காயத்திலிருந்து குணமடைந்து என்சிஏவில் பயிற்சிகளை துவங்கியுள்ள பும்ரா அடுத்த மாதம் அயர்லாந்துக்கு எதிராக நடைபெறும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுவார் என்று செய்திகள் வெளியானது.

இந்நிலையில் உலகக் கோப்பைக்கு முன்பாக பும்ரா நிறைய போட்டிகளில் விளையாடி தயாராக இருந்தால் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைவோம் என்று கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார். இருப்பினும் தற்போது எந்தளவுக்கு குணமடைந்துள்ளார் என்று முழுமையாக தெரியாததால் அயர்லாந்து தொடரில் அவர் விளையாடுவதற்கான முடிவு இன்னும் எடுக்கப்படவில்லை என்றும் ரோகித் சர்மா கூறியுள்ளார். இது பற்றி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டிக்கு முன் நிகழ்ந்த செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் பேசியது பின்வருமாறு.
“பும்ராவிடம் இருக்கும் அனுபவம் இந்திய அணியில் பெரிய முக்கியத்துவத்தை கொண்டு வருவதாக அமைகிறது. தற்போது அவர் பெரிய காயத்திலிருந்து குணமடைந்து வருகிறார். இருப்பினும் அயர்லாந்து தொடருக்கான அணியில் அவர் விளையாடுவாரா என்ற ஐடியா எனக்கு இல்லை. ஏனெனில் அதற்கான அணி இன்னும் அறிவிக்கப்படவில்லை. ஆனால் உலகக் கோப்பைக்கு முன்பாக அவர் விளையாடி தயாராக இருந்தால் அது எங்களுக்கு நல்ல பலமாக அமையும்”

“பொதுவாக ஒரு வீரர் காயத்திலிருந்து குணமடைந்து வரும் போது ஃபிட்னஸ் மற்றும் அந்த சமயத்தில் விளையாடிய போட்டிகளின் எண்ணிக்கை ஆகியவை இருக்காது. எனவே அவர் எவ்வாறு குணமடைகிறார் என்பதை பொறுத்து நாங்கள் அனைத்தையும் திட்டமிட தயாராக இருக்கிறோம். அதற்காக என்சிஏவுடன் நாங்கள் தொடர்ந்து தொடர்பிலிருந்து வருகிறோம். தற்சமயத்தில் அங்கிருந்து எங்களுக்கு நல்ல நேர்மறையான செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன” என்று கூறினார்.
இதையும் படிங்க:இலங்கையை மொத்தமாக சாய்த்த பாகிஸ்தான் – தென்னாப்பிரிக்காவின் 30 வருட சாதனையை தகர்த்து புதிய சரித்திரம்
முன்னதாக என்சிஏவில் பயிற்சிகளை எடுத்து வரும் பும்ரா அங்கு நடைபெறும் சில பயிற்சி போட்டிகளில் விளையாட உள்ளதாகவும் அதை பார்த்த பின்பே இறுதி முடிவு எடுக்கப்படும் என்று பிசிசிஐ கடந்த சில தினங்களுக்கு முன் செய்தி வெளியிட்டிருந்தது. அதே போலவே கேஎல் ராகுல், ரிஷப் பண்ட் ஆகியோரும் காயத்திலிருந்து குணமடைந்து வருவதாக பிசிசிஐ தெரிவித்திருந்தது. எனவே இந்த வீரர்கள் முழுமையாக குணமடைந்து விரைவில் விளையாடி 2023 உலக கோப்பையிலும் இந்தியாவின் வெற்றிகளில் பங்காற்ற வேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பமாகவும் இருக்கிறது.



