இலங்கையை மொத்தமாக சாய்த்த பாகிஸ்தான் – தென்னாப்பிரிக்காவின் 30 வருட சாதனையை தகர்த்து புதிய சரித்திரம்

SL vs PAK
- Advertisement -

இலங்கைக்கு சுற்றுப்பயணம் பாகிஸ்தான் அங்கு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடியது. கடந்த வருடம் இங்கிலாந்து போன்ற அணிகளுக்கு எதிராக சொந்த மண்ணில் தொடர் தோல்விகளை சந்தித்து விமர்சனத்திற்குள்ளான பாகிஸ்தான் இந்த தொடரின் முதல் போட்டியில் வென்று ஒரு வழியாக 365 நாட்கள் கழித்து டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு வெற்றியை பதிவு செய்து நிம்மதி பெருமூச்சு விட்டு ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது. மறுபுறம் சொந்த மண்ணில் ஆரம்பத்திலேயே பின்தங்கிய இலங்கை ஒய்ட்வாஷ் தோல்வியை தவிர்க்க நிச்சயம் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் ஜூலை 24ஆம் தேதி கொழும்புவில் துவங்கிய 2வது போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

இருப்பினும் பாகிஸ்தானின் தரமான பந்து வீச்சுக்கு பதில் சொல்ல முடியாத அந்த அணி வெறும் 166 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக தனஞ்செயா டீ சில்வா 57 ரன்கள் எடுக்க பாகிஸ்தான் சார்பில் அதிகபட்சமாக அப்ரார் அகமது 4 விக்கெட்டுகளையும் நசீம் ஷா 3 விக்கெட்டுகளையும் எடுத்தனர். அதைத் தொடர்ந்து களமிறங்கிய பாகிஸ்தான் ஆரம்பம் முதலே நிதானமான பேட்டிங்கை வெளிப்படுத்தி 2 நாட்கள் இலங்கை பவுலர்கள் போதும் போதும் என்று சொல்லும் அளவுக்கு அபாரமாக செயல்பட்டு 576/5 ரன்கள் குவித்து தங்களுடைய முதல் இன்னிங்ஸை டிக்ளேர் செய்வதாக அறிவித்தது.

- Advertisement -

சரித்திர வெற்றி:
அந்த அணிக்கு தொடக்க வீரர் அப்துல்லா ஷபிக் இலங்கை பவுலர்களுக்கு சிம்ம சொப்பனமாக நின்று இரட்டை சதமடித்து 19 பவுண்டரி 4 சிக்சருடன் அதிகபட்சமாக 201 ரன்கள் எடுத்தார். அவருடன் மிடில் ஆர்டரில் சல்மான் ஆகா சதமடித்து 132 ரன்களும் சௌத் ஷாக்கீல் 57 ரன்களும் முகமது ரிஸ்வான் 50* ரன்களும் ஷான் மசூத் 51 ரன்களும் எடுத்து பாகிஸ்தானை வலுப்படுத்தினர். மறுபுறம் சுமாராக செயல்பட்ட இலங்கை சார்பில் பந்து வீச்சில் அதிகபட்சமாக அசிதா பெர்னாண்டோ 3 விக்கெட்டுகளையும் பிரபத் ஜெயசூர்யா 2 விக்கெட்டுகளையும் எடுத்தனர்.

அதை தொடர்ந்து 410 ரன்கள் பின்தங்கிய நிலமையில் 2வது இன்னிங்ஸில் களமிறங்கிய இலங்கை சொந்த மண்ணில் வெற்றிக்கு போராடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இடையே மழை பெய்ததால் முழுவதுமாக பவுலிங்க்கு சாதகமாக மாறிய மைதானத்தில் பாகிஸ்தானின் தரமான பந்து வீச்சுக்கு தாக்குப்பிடிக்க முடியாத அந்த அணி சீரான இடைவெளிகளில் விக்கெட்டுக்களை இழந்து வெறும் 182 ரன்களுக்கு சுருண்டது.

- Advertisement -

அந்த அணிக்கு மதுசங்கா 33, கேப்டன் கருணரத்னே 41, குசால் மெண்டிஸ் 14 என டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் நல்ல துவக்கத்தை பெற்றும் பெரிய ரன்களை எடுக்காமல் ஆட்டமிழந்தனர். அதனால் ஒருபுறம் அனுபவ வீரர் ஏஞ்சலோ மேத்தியூஸ் 63* ரன்கள் எடுத்து நங்கூரமாக நின்ற போதிலும் எதிர்ப்புறம் தனஞ்செயா டீ சில்வா 10, சமரசவிக்கிரமா 5, தினேஷ் சந்திமால் 1 என முக்கிய பேட்ஸ்மேன்கள் கை கொடுக்காமல் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர்.

அந்தளவுக்கு பந்து வீச்சில் அசத்திய பாகிஸ்தான் சார்பில் அதிகபட்சமாக சுழல் பந்து வீச்சாளர் நௌமன் அலி 7 விக்கெட்டுகளையும் நசீம் ஷா 3 விக்கெட்டுகளையும் சாய்த்தனர். அதன் காரணமாக இன்னிங்ஸ் மற்றும் 222 ரன்கள் வித்தியாசத்தில் மெகா வெற்றி பெற்ற பாகிஸ்தான் 2 – 0 (2) என்ற கணக்கில் இலங்கையை அதன் சொந்த மண்ணில் மண்ணை கவ்வ வைத்து ஒய்ட் வாஷ் செய்து இத்தொடரின் கோப்பையை வென்றது. அதன் வாயிலாக 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலிலும் பாகிஸ்தான் முதலிடத்தை வலுவாக பிடித்துள்ளது.

இதையும் படிங்க:2023 உலக கோப்பையில் அஸ்வின் தேர்வு செய்யப்படுகிறாரா? தமிழக ரசிகர்களை மகிழ்விக்கும் ரிப்போர்ட் இதோ

அதை விட இதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இலங்கைக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்த அணி என்ற தென்னாப்பிரிக்காவின் 30 வருட சாதனையை தகர்த்த பாகிஸ்தான் புதிய சரித்திரமும் படைத்துள்ளது. அந்த பட்டியல்:
1. பாகிஸ்தான் : இன்னிங்ஸ் மற்றும் 222 ரன்கள், 2023*
2. தென்னாப்பிரிக்கா : இன்னிங்ஸ் மற்றும் 208 ரன்கள், 1993
3. இந்தியா : இன்னிங்ஸ் மற்றும் 171 ரன்கள், 2017
4. பாகிஸ்தான் : இன்னிங்ஸ் மற்றும் 163 ரன்கள், 2000

Advertisement