இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரை 4 – 1 (5) என்ற கணக்கில் கைப்பற்றியது. அடுத்ததாக இங்கிலாந்துக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் களமிறங்க உள்ளது. அந்தத் தொடருக்காக அறிவிக்கப்பட்ட இந்திய அணியில் கடைசி நேரத்தில் தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்தது.
ஏனெனில் கம்பேக் கொடுத்தது முதல் கடந்த வங்கதேசம், தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து டி20 தொடர்களில் அபாரமாக பவுலிங் செய்த அவர் இந்தியாவின் வெற்றிகளில் பங்காற்றினார். குறிப்பாக இங்கிலாந்து தொடரில் 14 விக்கெட்டுகள் எடுத்த அவர் தொடர்நாயகன் விருது வென்று அசத்தினார். அப்படி நல்ல ஃபார்மில் இருக்கும் அவரை இந்திய அணி அடுத்ததாக நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபியில் தேர்ந்தெடுக்காமல் தவறு செய்ததாக தினேஷ் கார்த்திக் விமர்சித்தார்.
வருணுக்கு வரும் வாய்ப்பு:
ஏனெனில் டி20 மட்டுமின்றி 2025 விஜய் ஹசாரே உள்ளூர் ஒருநாள் தொடரில் தமிழ்நாடு அணிக்காக 18 விக்கெட்டுகள் எடுத்த வருண் சக்கரவர்த்தி தற்போது சூப்பரான ஃபார்மில் இருக்கிறார். இந்நிலையில் வருண் சக்கரவர்த்தி வித்தியாசமான திறமையைக் கொண்டுள்ளதாக கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார். அதனாலேயே அவரை இங்கிலாந்து தொடரில் தேர்ந்தெடுத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஒருவேளை இந்தத் தொடரில் அசத்தும் பட்சத்தில் அவரைத் தேர்ந்தெடுப்பது பற்றி சிந்திப்போம் என்று ரோஹித் சர்மா கூறியுள்ளார். இதுப் பற்றி முதல் போட்டிக்கு முன் ரோகித் பேசியது பின்வருமாறு. “வருண் சக்கரவர்த்தி ஏதோ ஒரு வித்தியாசமான விஷயத்தை அவருக்குள் கொண்டிருக்கிறார் என்பது தெளிவாகத் தெரிகிறது. எனவே நாங்கள் எங்களால் என்ன செய்ய முடியும் என்று நான் பார்க்கிறோம்”
ரோஹித் உறுதி:
“அதே சமயம் டி20யை விட இது வித்தியாசமான ஃபார்மட் என்பதை நான் புரிந்துக் கொள்கிறேன். தற்போது நாங்கள் சாம்பியன்ஸ் டிராபியை பற்றி சிந்திக்கவில்லை. ஒருவேளை வருண் இங்கு நன்றாக விளையாடினால் பின்னர் நாங்கள் அதைப் பற்றி சிந்திக்க வேண்டும்” என்று கூறினார். இதிலிருந்து இங்கிலாந்து தொடரில் வருண் சக்கரவர்த்தி ஒருநாள் கிரிக்கெட்டில் 33 வயதில் அறிமுகமாக களமிறங்க உள்ளது தெரிய வருகிறது.
இதையும் படிங்க: விராட் கோலி இதை மட்டும் செய்ஞ்சா போதும்.. பேட்டிங் பார்ம் தானா வந்துடும் – ரவிச்சந்திரன் அஷ்வின்
அந்த வாய்ப்பில் அசத்தும் பட்சத்தில் சாம்பியன்ஸ் ட்ராபி தொடருக்கும் கடைசி நேரத்தில் வருண் தேர்வு செய்யப்படுவதற்கு பிரகாசமான வாய்ப்புள்ளது. எனவே இங்கிலாந்து தொடரில் வாய்ப்பு கிடைக்கும் போது வருண் நன்றாக செயல்பட வேண்டியது அவசியமாகிறது. அது நிஜத்தில் நிகழ வேண்டும் என்பதே தமிழக ரசிகர்களின் விருப்பமாகும்.