வங்கதேசத்துக்கு எதிராக இந்தியா தங்களுடைய சொந்த மண்ணில் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு தகுதி பெற அத்தொடரில் வெல்லும் முனைப்புடன் இந்தியா தயாராகியுள்ளது. அந்தத் தொடரில் ரோஹித் சர்மா தலைமையில் விராட் கோலி, ஜஸ்ப்ரித் பும்ரா உள்ளிட்ட சீனியர் வீரர்கள் மீண்டும் இந்திய அணிக்காக விளையாட தேர்வாகியுள்ளனர்.
அதனால் கடந்த இங்கிலாந்து தொடரில் அசத்திய இளம் வீரர்களுக்கு வங்கதேச தொடரில் வாய்ப்பு கிடைக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக இங்கிலாந்து தொடரில் காயமடைந்த கேஎல் ராகுலுக்கு பதிலாக சர்பராஸ் கான் அறிமுகமானார். அந்த வாய்ப்பில் அடுத்தடுத்த அரை சதங்கள் அடித்த அவர் தனது திறமையை நிரூபித்து இந்தியாவின் வெற்றிகளில் பங்காற்றினார்.
வருங்கால பேட்ஸ்மேன்கள்:
அதே போல விக்கெட் கீப்பராக வாய்ப்பு பெற்ற துருவ் ஜுரேல் தனது 2வது போட்டியிலேயே அழுத்தமான சூழ்நிலையில் அரை சதமடித்து இந்தியாவை வெற்றி பெற வைத்து ஆட்டநாயகன் விருது வென்றார். மறுபுறம் ரோஹித் சர்மாவையே மிஞ்சும் அளவுக்கு துவக்க வீரராக விளையாடிய ஜெய்ஸ்வால் 712 ரன்கள் குவித்தார். அதனால் தொடர்நாயகன் விருது வென்ற அவர் 4 – 1 (5) என்ற கணக்கில் இந்தியா கோப்பையை வெல்ல உதவினார்.
இந்நிலையில் அந்த 3 வீரர்களும் இந்திய அணியின் வருங்காலமாக இருப்பதற்கான அறிகுறிகளை காட்டுவதாக கேப்டன் ரோஹித் சர்மா பாராட்டியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “உண்மையில் அவர்களிடம் நீங்கள் அதிகமாக பேச வேண்டியதில்லை. ஜெய்ஸ்வால், சர்பராஸ், ஜுரேல் ஆகியோர் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு புதியவர்கள்”
ரோஹித் சர்மா நம்பிக்கை:
“அவர்களால் பேட்டிங்கில் என்ன செய்ய முடியும் என்பதை நாம் பார்த்துள்ளோம். குறிப்பாக ஜுரேல் விக்கெட் கீப்பராக அசத்தியதை பார்த்தோம். கடந்த முறை ஜெய்ஸ்வால் நல்ல தொடரைக் கொண்டிருந்தார். ஜுரேல் அழுத்தமான சூழ்நிலைகளில் ரன்கள் அடித்தார். வெளியே என்ன நடக்கிறது என்பதைப் பற்றி கவலைப்படாமல் சர்பராஸ் விளையாடினார். இது போன்ற பயமின்றி ஜாக்கிரதையுடன் பொறுப்பாக விளையாடும் வீரர்கள் தான் உங்களுக்கு தேவை”
இதையும் படிங்க: சவாலா விடுறீங்க.. அந்த பாகிஸ்தான் பவுலர் மாதிரி விராட் கோலி வங்கதேசத்தையும் செய்வாரு.. ரெய்னா பேட்டி
“அந்த அனைத்தையும் நாங்கள் கலவையாக கொண்டுள்ளது நல்ல அறிகுறியாகும். இந்தியாவுக்காக 3 விதமான கிரிக்கெட்டிலும் விளையாடுவதற்கான அனைத்தையும் அவர்கள் கொண்டுள்ளனர். எனவே அவர்களிடம் தொடர்ந்து பேசும் நாங்கள் அவர்களை வளர்ப்போம். ஆனால் நாளின் இறுதியில் விளையாட்டில் நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பது முக்கியம். எனவே என்ன செய்ய வேண்டும் என்ற தெளிவு அவர்களுக்கு இருக்கும் என்று நினைக்கிறேன். இந்தியாவுக்காக வெற்றிகரமாக விளையாடுவதற்கு தேவையான பசி அவர்களிடம் இருக்கிறது” என்று கூறினார்.



