இந்தியா மற்றும் வங்கதேச கிரிக்கெட் அணிகள் மோதும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் சென்னையில் துவங்குகிறது. 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு தகுதி பெறுவதற்காக அத்தொடரில் வெல்லும் முனைப்புடன் இந்தியா தயாராகியுள்ளது. ஆனால் சமீபத்தில் பாகிஸ்தானை முதல் முறையாக தோற்கடித்து வங்கதேசம் சாதனை படைத்தது.
அதே போல இந்தியாவையும் வீழ்த்துவோம் என்று வங்கதேச அணியினர் தொடர்ச்சியாக சவால் விடுத்து வருகின்றனர். இருப்பினும் சொந்த மண்ணில் கடந்த ஒரு தசாப்தத்திற்கு மேல் இந்தியா டெஸ்ட் தொடரில் தோற்காமல் வெற்றி நடை போட்டு வருகிறது. அதனால் வங்கதேசத்தையும் வீழ்த்தி இந்தியா இத்தொடரை வெல்லும் என்று இங்குள்ள ரசிகர்கள் நம்புகின்றனர்.
விராட் கோலி அடிப்பாரு:
இந்நிலையில் சவால் விடுக்கும் வங்கதேச அணிக்கு விராட் கோலி பதிலடி கொடுத்து பெரிய ரன்கள் குவித்து இந்தியாவை வெற்றி பெற வைப்பார் என்று சுரேஷ் ரெய்னா நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஏனெனில் சவால் விடுக்கப்படும் அழுத்தமான சூழ்நிலைகளில் தான் விராட் கோலி அபாரமாக செயல்படுவார் என்று சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார். குறிப்பாக 2022 டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தானின் ஹரிஷ் ஃரவூபை அடித்து நொறுக்கிய விராட் கோலி இந்தியாவை வெற்றி பெற வைத்ததாக ரெய்னா தெரிவித்துள்ளார்.
அதே போல வங்கதேச பவுலர்களை பந்தாடி இந்தியாவை 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு விராட் கோலி அழைத்துச் செல்வார் என்று ரெய்னா கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “ரோஹித் சர்மா சிறப்பான கேப்டன் என்பதை இந்தியாவுக்காக டி20 உலகக் கோப்பையை வென்று நிரூபித்தார். ஆனால் கவனம் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு மீண்டும் திரும்பும் விராட் கோலி மீது இருக்கும்”
ஹரிஷ் ரவூப் நிலைமை:
“டெஸ்ட் கிரிக்கெட்டை விரும்பும் அவர் அதற்கு நிறைய மதிப்பளிக்கிறார். டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பைகாக இந்தியா 10 போட்டிகளில் விளையாட உள்ளது. அந்த டெஸ்ட் வட்டத்தில் விராட் கோலி நிறைய ரன்கள் அடிப்பார் என்று நான் நம்புகிறேன். விராட் கோலி எப்போதும் அழுத்தத்தில் அசத்தியுள்ளார். வங்கதேசம் வலுவான வேகப்பந்து வீச்சாளர்களைக் கொண்டுள்ளது”
இதையும் படிங்க: இந்த ஸ்ட்ரென்த் போதும்.. இந்திய அணிக்கு எதிரா எங்க வித்தையை காட்டுவோம் – வங்கதேச கோச் பேட்டி
“ஆனால் ஹரிஷ் ரவூப் போன்ற பவுலர்களுக்கு எதிராக விராட் கோலி தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார். சவால்கள் தான் அவரை உயர்த்துகின்றன. எனவே அந்த சவாலில் விராட் கோலி பிரகாசிப்பார் என்று நான் எதிர்பார்க்கிறேன்” எனக் கூறினார். இதைத் தொடர்ந்து முதல் டெஸ்ட் போட்டி செப்டம்பர் 19ஆம் தேதி துவங்குவது குறிப்பிடத்தக்கது.



