- Advertisement -
இந்திய கிரிக்கெட்

2006இல் டிராவிட் தான் இருந்தாரு.. கஷ்டமா இருக்கு.. போகாதீங்கன்னு சொன்னேன் ஆனா.. ரோஹித் உருக்கம்

ஐசிசி டி20 உலகக் கோப்பையில் 17 வருடங்கள் கழித்து சாம்பியன் பட்டம் வெல்லும் முனைப்புடன் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி களமிறங்கியுள்ளது. இந்தத் தொடருடன் இந்திய அணியின் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து ஜாம்பவான் ராகுல் டிராவிட் ஓய்வு பெறுகிறார். சச்சினுக்கு நிகராக இந்தியாவுக்கு நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்த அவர் 2021 இறுதியில் ரோஹித் சர்மா புதிய கேப்டனாக பொறுப்பேற்ற போது பயிற்சியாளராக பொறுப்பேற்றார்.

அவருடைய தலைமையில் இருதரப்பு தொடர்களில் எதிரணிகளை சொல்லி அடித்த இந்தியா ஐசிசி தரவரிசையில் உலகின் நம்பர் ஒன் அணியாக முன்னேறியது. ஆனால் முக்கியமான ஐசிசி தொடர்களில் நாக் அவுட் சுற்றில் தோல்வியை மட்டுமே சந்தித்த இந்தியா ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்தது. அந்த நிலையில் 2023 உலகக் கோப்பையின் முடிவில் தற்காலிகமாக நீட்டிக்கப்பட்ட டிராவிட் பதவி காலம் மீண்டும் முடிந்துள்ளது.

- Advertisement -

ரோஹித் உருக்கம்:
அதைத் தொடர்ந்து பயிற்சியாளர் பதவியிலிருந்து விலக உள்ளதாக ராகுல் டிராவிட் சமீபத்தில் அறிவித்தார். இந்நிலையில் 2006இல் இந்தியாவுக்காக தாம் அறிமுகமான முதல் போட்டியில் ராகுல் டிராவிட் கேப்டனாக இருந்ததாக ரோகித் சர்மா தெரிவித்துள்ளார். மேலும் இந்திய அணியின் பயிற்சியாளராக தமக்கு அவர் நிறைய உதவிகளை செய்ததாகவும் ரோஹித் பாராட்டியுள்ளார்.

அதனால் டிராவிட் விடை பெறுவது தமக்கு கடினமான உணர்வைக் கொடுப்பதாக தெரிவிக்கும் ரோகித் சர்மா தொடர்ந்து பயிற்சியாளராக இருக்குமாறு கேட்டுக் கொண்டதாகவும் கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “அயர்லாந்துக்கு எதிராக நான் அறிமுகமான முதல் சர்வதேச போட்டியில் அவர் தான் கேப்டனாக இருந்தார். அதே போல டெஸ்ட் அணிக்கு நான் முதல் முறையாக தேர்வான போது அவரே கேப்டனாக இருந்தார்”

- Advertisement -

“அவர் எங்களுக்கு மிகப்பெரிய ரோல் மாடல். நாங்கள் அவரைப் பார்த்து வளர்ந்தோம். அவர் என்ன சாதித்துள்ளார் எப்படிப்பட்ட வீரர் அணிக்காக என்ன செய்தார் என்பதை நாங்கள் அறிவோம். அவர் கடினமான நேரங்களில் அணிக்காக கடுமையாக போராடியவராக அறியப்படுகிறார். எனவே தொடர்ந்து அணியுடன் இருக்குமாறு அவரிடம் நான் பேசி சம்மதிக்க வைக்க முயற்சித்தேன்”

இதையும் படிங்க: ஸ்டார்க் மாதிரி பும்ரா இருக்காரு.. ஆனா இந்தியா ஜெய்க்க அவருக்கு ஜோடி வேணுமே.. மெக்ராத் கருத்து

“இருப்பினும் அவரும் தன்னுடைய சொந்த வாழ்வில் பல்வேறு விஷயங்களை பார்க்க வேண்டியுள்ளது. அவருடன் தனிப்பட்ட முறையில் நான் மகிழ்ச்சியுடன் வேலை செய்தேன். எங்களுடைய மற்ற வீரர்களும் இதையே சொல்வார்கள் என்று நம்புகிறேன். இதைத் தவிர்த்து நான் வேறு எதுவும் சொல்லப் போவதில்லை” என்று கூறினார். அதனால் பயிற்சியாளராக இந்த உலகக் கோப்பையை வென்று ராகுல் டிராவிட் விடை பெறுவாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

- Advertisement -