வங்கதேசத்துக்கு எதிராக கான்பூரில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் அட்டகாசமான வெற்றி பெற்றது. அதனால் சென்னை வெற்றியும் சேர்த்து 2 – 0 (2) என்ற கணக்கில் இந்தியா கோப்பையை வென்றது. அதன் காரணமாக பாகிஸ்தானை போல வீழ்த்துவோம் என்று சவால் விடுத்த வங்கதேசத்தை வீழ்த்திய இந்தியா தங்களை சொந்த மண்ணில் கில்லி என்பதை நிரூபித்தது.
முன்னதாக கான்பூரில் நடைபெற்ற இரண்டாவது போட்டியின் 2, 3வது நாட்கள் மழையால் ரத்து செய்யப்பட்டது. அதனால் டிராவில் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்பட்ட அப்போட்டியில் கடைசி 2 நாட்களில் சரவெடியாக விளையாடிய இந்திய அணி வங்கதேசத்தை அடித்து நொறுக்கி வெற்றி பெற்றது. இந்நிலையில் அப்போட்டியில் தோல்வியை சந்தித்தாலும் பரவாயில்லை என்று தைரியமாக ரிஸ்க் எடுத்து வெற்றிக்காக விளையாடியதாக ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.
எல்லாரும் திட்டிருப்பாங்க:
அதனால் ஒருவேளை தோல்வியை சந்தித்திருந்தால் அனைவரும் தங்களை விமர்சித்து திட்டித் தீர்த்திருப்பார்கள் என்றும் ரோகித் கூறியுள்ளார். இது பற்றி பிசிசிஐ வெளியிட்டுள்ள வீடியோவில் அவர் பேசியது பின்வருமாறு. “மற்ற 10 வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் குழுவின் உதவியின்றி இந்த வெற்றி சாத்தியமாகி இருக்காது. இரண்டரை நாட்கள் ஆட்டம் இழந்த போது வெற்றி பெற வேண்டும் என்ற இலக்கிலிருந்து நகர்ந்து செல்வது எளிது”
“இருப்பினும் 4வது நாளில் வந்த எங்களுக்கு வங்கதேசத்தை சுருட்ட 7 விக்கெட் தேவைப்பட்டது. அனைத்தும் அங்கே தான் துவங்கியது. அப்போது பவுலர்கள் பார்ட்டிக்கு வந்தனர். அவர்கள் எங்களுக்கு தேவையான விக்கெட்டுகளை எடுத்துக் கொடுத்தனர். நாங்கள் ரிஸ்க் எடுக்க வேண்டியிருந்தது. அது எப்படி வேண்டுமானாலும் செல்லலாம் என்பதை எனக்குத் தெரியும். ஆனால் அதற்கு நானும் வீரர்களும் பயிற்சியாளர்களும் தயாராக இருந்தோம்”
அதிரடியின் அர்த்தம்:
“இது போன்ற முடிவுகளை எடுக்க நீங்கள் தைரியமாக இருக்க வேண்டும். அதைப் பின்பற்றி விளையாடும் போது உங்கள் வழியில் அனைத்தும் வந்தால் நன்றாக இருக்கும். ஆனால் விஷயங்கள் உங்களுக்கு சாதகமாக நடக்கவில்லையெனில் அனைவரும் நாங்கள் எடுத்த முடிவை விமர்சித்திருப்பார்கள். இருப்பினும் அணிக்குள் நாங்கள் என்ன நினைக்கிறோம் என்பது முக்கியம்”
இதையும் படிங்க: பாகிஸ்தான்னு நினைச்சீங்களா.. அவங்க தான் இந்தியாவுக்கு சரியான எதிரி.. வங்கதேசத்தை சாடிய பசித் அலி
“நமக்கு வெற்றி வேண்டும் என்ற தெளிவான திட்டம் எங்களிடம் இருந்தது. அதற்காக அனைத்து வீரர்களும் பதிலை கண்டுபிடிக்க துவங்கினர். அதிரடி மற்றும் ஆக்ரோஷம் என்பது உங்களுடைய ஆக்சனைப் பொறுத்தது. ரியாக்சனை பற்றியதல்ல. நாங்கள் பேட்டிங் செய்த விதம், ஃபீல்டர்களை நிறுத்திய விதம், பந்து வீசிய விதம் தான் என்னைப் பொறுத்த வரை உண்மையான அதிரடியான ஆக்ரோஷமாகும்” என்று கூறினார்.