இந்திய கிரிக்கெட் அணி ரோஹித் சர்மா தலைமையில் 2024 டி20 உலகக் கோப்பையை வென்றது. அந்த வெற்றியுடன் 37 வயதாகும் ரோஹித் சர்மா சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஓய்வு பெற்றார். முன்னதாக ஓப்பனிங் பேட்ஸ்மேனாக எதிரணிகளை வெளுத்து வாங்கும் ரோஹித் சர்மா ஃபிட்னஸ் என்று வரும் போது விராட் கோலிக்கு நிகராக இருப்பதில்லை என்பது பலரது கருத்தாகும்.
சொல்லப்போனால் கடந்த இலங்கை தொடரின் போது ரோஹித் சர்மா இன்ஸ்டாகிராமில் ஒரு புகைப்படத்தில் தம்முடைய வயிற்றை குறைத்து எடிட்டிங் செய்து பதிவிட்டிருந்தார். அதை கண்டுபிடித்த ரசிகர்கள் எடிட்டிங் செய்வதில் கவனம் செலுத்தாமல் ஃபிட்னெஸில் கவனம் செலுத்துங்கள் என்று கிண்டலடித்தனர். அதனால் அந்த புகைப்படத்தை ரோகித் சர்மா பின்னர் டெலிட் செய்திருந்தார்.
ரோஹித் சர்மா ஃபிட்னெஸ்:
இந்நிலையில் இதுவரை 485 போட்டிகளில் விளையாடியுள்ள தாம் ஃபிட்டாக இல்லாமல் போனால் விரைவில் 500 சர்வதேச போட்டிகளில் விளையாடி சாதனை படைக்க முடியாது என்று ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். அத்துடன் கிரிக்கெட்டில் பார்ப்பதற்கு ஃபிட்டாக இருக்கிறோமா என்பதை விட திறமையுடன் விளையாடி அணியின் வெற்றியில் பங்காற்றுகிறோமா என்பது தான் முக்கியம் என்றும் அவர் தன்னுடைய கிண்டல்களுக்கு மறைமுக பதிலடி கொடுத்துள்ளார்.
இது பற்றி சமீபத்திய பேட்டியில் ரோஹித் பேசியது பின்வருமாறு. “இந்தியாவுக்காக 17 வருடங்களில் கிட்டத்தட்ட 500 போட்டிகளில் விளையாடியுள்ளேன். உலகளவில் நிறைய வீரர்கள் இதை சாதித்ததில்லை. அப்படி நீண்ட காலம் விளையாடுவதற்கு உங்களுடைய ஃபிட்னஸ் மற்றும் மனநிலையை எப்படி வகித்து பயிற்சி எடுக்கிறீர்கள் என்பது முக்கியம். போட்டிகளுக்கு நீங்கள் எப்போதும் தயாராக இருக்க வேண்டும்”
திறமை முக்கியம்:
“போட்டிகளில் 100% சிறப்பாக செயல்பட தயாராக இருக்க வேண்டும் என்பதே எங்களது வேலையாகும். அதற்கான தயாரிப்புகளை திரும்பிப் பார்க்கும் போது ஃபிட்னஸ், மீட்பு, என்ன சாப்பிடுகிறீர்கள் ஆகியவை அடங்கும். என்னைப் பொறுத்த வரை எப்போதும் 100% போட்டிக்கு தயாராக இருந்து என்னுடைய சிறந்துவற்றை கொடுப்பேன். ஒவ்வொரு தனி நபர்களும் வித்தியாசமானவர்கள். என்னைப் பொறுத்த வரை கிரிக்கெட்டில் ஃபிட்னஸ் என்பது உடல் வடிவில் நீங்கள் எப்படி தெரிகிறீர்கள் என்பதை பொறுத்தது மட்டுமல்ல”
இதையும் படிங்க: ஐபிஎல் 2025 : இனிமேல் 20.50, 24.75 கோடி கிடைக்காது.. வெளிநாட்டு வீரர்களுக்கு ஆப்பு வைத்த பிசிசிஐ விதிமுறை
“அது அணியின் வெற்றியில் நீங்கள் என்ன பங்காற்றுகிறீர்கள் என்பதைப் பொறுத்தது. அது 4 – 5 நாட்கள் அல்லது 100 ஓவர்கள் அல்லது 20 ஓவர்கள் உங்களால் முழு ஆர்வத்துடன் ஃபீல்டிங் செய்ய முடிகிறதா என்பதைப் பொறுத்தது. கடந்த 8 – 9 வருடங்களாக அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் விளையாடுவது எனது உடலில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அதற்காக இடையே ஓய்வெடுத்து வேலை செய்து மீண்டும் தயாராக வேண்டும்” என்று கூறினார்.



