இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா படிப்படியாக ஓய்வு பெற்று வருகிறார். 2007ஆம் ஆண்டு அறிமுகமாகி டி20 உலகக் கோப்பையை இந்தியா வெல்வதற்கு உதவிய அவர் ஆரம்பக் காலங்களில் மிடில் ஆர்டரில் தடுமாறிக் கொண்டிருந்தார். அவருடைய திறமையை அறிந்த அப்போதைய கேப்டன் எம்எஸ் தோனி 2013 சாம்பியன்ஸ் டிராபியில் துவக்க வீரராக விளையாடும் வாய்ப்பை கொடுத்தார்.
அந்த வாய்ப்பில் அபாரமாக விளையாடிய ரோஹித் சர்மா ஒருநாள் கிரிக்கெட்டில் 3 இரட்டை சதங்கள் அடித்து 264 ரன்கள் குவித்து உலக சாதனை படைத்தார். 2019 உலகக் கோப்பையில் மட்டும் 5 சதங்கள் வெளுத்து வாங்கிய அவருக்கு டெஸ்ட் கிரிக்கெட்டிலும் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக விளையாடும் வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பில் சிறப்பாக விளையாடிய அவர் டெஸ்ட் கிரிக்கெட்டிலும் தன்னை தரமான பேட்ஸ்மேன் என்பதை நிரூபித்தார்.
264 உலக சாதனை விட:
2024 டி20 உலகக் கோப்பை, 2025 சாம்பியன்ஸ் ட்ராபியை கேப்டனாக வெல்ல உதவிய அவர் இனிமேல் ஒருநாள் கிரிக்கெட்டில் மட்டுமே இந்தியாவுக்காக விளையாட உள்ளார். இந்நிலையில் தம்முடைய அப்பாவுக்கு ஒருநாள் கிரிக்கெட்டில் அதிகபட்ச ஸ்கோர் (264) பதிவு செய்து உலக சாதனை படைத்ததை விட டெஸ்ட் போட்டிகளில் 30, 40 ரன்கள் அடிப்பதே மிகவும் பிடிக்கும் என்று ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.
இது பற்றி புஜாரா புத்தக வெளியீட்டு விழாவில் அவர் பேசியது பின்வருவாரு. “என்னுடைய அப்பா போக்குவரத்து நிறுவனத்தில் வேலை செய்தார். எங்கள் வாழ்க்கைக்காக அம்மா மற்றும் அப்பா நிறைய விஷயங்களை தியாகம் செய்தனர். என்னுடைய அப்பா முதல் நாளிலிருந்தே டெஸ்ட் கிரிக்கெட்டின் ரசிகன். அவருக்கு டி20 போன்ற நவீன போட்டிகள் பிடிக்காது”
டெஸ்ட் போட்டிகளே பிடிக்கும்:
“ஒருநாள் கிரிக்கெட்டில் நான் 264 ரன்கள் அடித்த போது “பரவாயில்லை. நன்றாக விளையாடினாய்” என்று மட்டுமே அவர் சொன்னது எனக்கு நினைவிருக்கிறது. அந்த உலக சாதனை படைத்ததற்காக அவரிடம் எந்த ஆர்வமும் இல்லை. ஆனால் டெஸ்ட் கிரிக்கட்டில் சாதாரணமாக நான் 30, 40, 50 அல்லது 60 ரன்களை எடுத்தால் கூட அவர் அது பற்றி மிகவும் விவரமாக பேசுவார்”
இதையும் படிங்க: விராட் கோலி – சாஸ்திரி மாதிரி கருண் நாயரை நடத்த மாட்டோம்.. இந்த வாய்ப்பு வழங்கப்படும்.. கம்பீர் உறுதி
“என்னுடைய அப்பா பள்ளியில் தொடங்கியது முதல் இந்தியாவுக்காக விளையாடியது வரை என்னுடையப் பயணத்தை பார்த்துள்ளார். அவர் நான் டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதை அதிகம் பார்த்து ரசிப்பார். அதனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் நான் ஓய்வு பெற்றதால் அவர் கொஞ்சம் ஏமாற்றத்தைச் சந்தித்தார். அதே சமயம் மகிழ்ச்சியுடன் பாராட்டிய அவர் தான் என்னுடைய அப்பா. அவருடைய உதவி இல்லாமல் இன்று நான் இருக்க முடியாது” என்று கூறினார்.



