இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக இங்கிலாந்து மண்ணில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. 2027 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெறும் அத்தொடரில் விளையாடுவதற்காக சுப்மன் கில் தலைமையிலான இளம் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த அணியில் கருண் நாயர் 8 வருடங்கள் கழித்துப் போராடி மீண்டும் தேர்வாகியுள்ளது பல ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்தது.
2016ஆம் ஆண்டு இதே இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அறிமுகமான அவர் சென்னையில் முச்சதம் அடித்து விரேந்திர சேவாக்கிற்கு நிகராக சாதனை படைத்தார். அதன் பின் அவருக்கு தொடர்ச்சியாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அதே சமயம் கொடுக்கப்பட்ட வாய்ப்பிலும் பெரிய ரன்கள் எடுக்கத் தவறியதால் அப்போதைய இந்திய கேப்டன் விராட் கோலி மற்றும் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கழற்றி விட்டார்கள்.
கருண் நாயர் கம்பேக்:
அப்போதிலிருந்து போராடிய கருண் நாயர் கடந்த ரஞ்சிக் கோப்பையில் விதர்பா அணிக்காக சிறப்பாக விளையாடி 863 ரன்கள் விளாசி சாம்பியன் பட்டத்தை வெல்ல உதவினார். மேலும் விஜய் ஹசாரே கோப்பையில் 779 ரன்களை குவித்து மிரட்டிய அவர் கடந்த ஐபிஎல் தொடரிலும் டெல்லி அணிக்காக ஓரளவு அசத்தினார். அதன் காரணமாக இந்தியா ஏ அணிக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட அவர் கடந்த வாரம் இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிராக இரட்டை சதத்தை அடித்து 204 ரன்கள் குவித்தார்.
இந்நிலையில் இப்படி தொடர்ச்சியாக அசத்தி வரும் கருண் நாயருக்கு முந்தைய இந்திய அணி நிர்வாகத்தை போல் அல்லாமல் தொடர்ச்சியான வாய்ப்புகள் வழங்கப்படும் என்று பயிற்சியாளர் கௌதம் கம்பீர் அறிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “கருண் நாயரின் கம்பேக் உள்ளூர் கிரிக்கெட்டின் வருங்காலத்திற்கு சிறந்தது”
கம்பீர் உறுதி:
“ஏனெனில் உள்ளூரில் விளையாடும் அனைத்து இளம் வீரர்களுக்கும் அதனுடைய முக்கியத்துவம் தெரியும். நீங்கள் உள்ளூரில் தொடர்ச்சியாக அசத்தும் போது இந்திய அணியில் விளையாடுவதற்கான கதவுகள் மூடப்படாது. கவுன்டி தொடரில் விளையாடிய அனுபவம் கொண்ட அவரை போன்ற வீரரை இந்திய அணியில் கொண்டிருப்பது நல்லது. தற்போது நல்ல ஃபார்மில் இருக்கும் அவர் இந்தியா ஏ அணிக்காக இரட்டை சதம் அடித்துள்ளார்”
இதையும் படிங்க: டிஎன்பிஎல் 2025: 17.2 ஓவரிலேயே 154.. ஓப்பனிங் போட்டியில் கோவையை சாய்த்த அஸ்வின் திண்டுக்கல் அணி
“நாங்கள் ஒருவரை ஓரிரு போட்டிகளை வைத்து மதிப்பிடுவதில்லை. உள்ளூரில் பெரிய ரன்கள் குவித்துள்ள அவருக்கு ஒழுக்கமான வாய்ப்புகள் கொடுக்கப்படும். அப்போது தான் அவரால் சர்வதேச அளவில் தம்முடைய திறன்மையைக் காண்பிக்க முடியும். அவரைப் போன்ற அனுபவமிக்கவர் இந்திய அணிக்குள் வந்துள்ளது நல்லது. அவர் சிறப்பாக விளையாடுவார் என்று நம்புகிறேன்” எனக் கூறினார்.



