இலங்கைக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் தொடரில் 2 – 0 (3) என்ற கணக்கில் இந்தியா தோல்வியை சந்தித்தது. குறிப்பாக 27 வருடங்கள் கழித்து முதல் முறையாக இலங்கைக்கு எதிராக ஒரு தொடரில் இந்தியா தோல்வியை சந்தித்தது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது. இத்தனைக்கும் இலங்கையை விட தரமான வீரர்களை கொண்டிருந்தும் இந்தியா தோல்வியை சந்தித்தது ரசிகர்களை சோகமடைய வைத்தது.
இந்த தோல்விக்கு சுழலுக்கு சாதகமான ஆடுகளத்தில் இலங்கையின் ஸ்பின்னர்களை இந்திய பேட்ஸ்மேன்கள் சிறப்பாக எதிர்கொள்ளாததே முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக கேப்டன் ரோகித் சர்மா ஆரம்பத்திலேயே பவர் பிளே ஓவர்களை பயன்படுத்தி அதிரடியாக விளையாடி நல்ல துவக்கத்தை கொடுத்தார். ஆனால் எதிர்ப்புறம் விராட் கோலி உள்ளிட்ட மற்ற பேட்ஸ்மேன்கள் யாருமே பொறுப்புடன் விளையாடவில்லை.
ஹெல்ப் பண்ண நினச்சேன்:
இந்நிலையில் சுழலுக்கு சாதகமான பிட்ச்சில் பவர்பிளேவை பயன்படுத்தி ஆரம்பத்திலேயே அதிரடியாக விளையாடி அடுத்து வரும் பேட்ஸ்மேன்களுக்கு உதவி செய்ய நினைத்ததாக கேப்டன் ரோஹித் சர்மா கூறியுள்ளார். ஆனால் இந்திய பேட்ஸ்மேன்கள் அதை வீணடித்ததால் தம்முடைய திட்டம் பாழானதாகவும் அவர் வருத்தத்தை தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.
“பவர் பிளே ஓவர்களில் ரன்கள் குவிப்பது மிகவும் முக்கியம் என்று நான் உணர்ந்தேன். எனவே துவக்க வீரரான நீங்கள் அந்த வாய்ப்பை எடுத்துக் கொள்ள வேண்டும். அதனாலேயே பவுலர்களை அழுத்தத்தில் போடுவதற்காக நான் அந்த வாய்ப்பை எடுத்தேன். டாப் ஆர்டரில் அடிக்கும் ரன்கள் அடுத்த 40 ஓவரில் அணிக்கு மிகப்பெரிய உதவியை செய்யும்”
“நீங்கள் உங்களுடைய நேரத்தை எடுத்து பிட்ச், சூழ்நிலை, பந்து எப்படி சுழல்கிறது, எந்த வேகத்தில் வருகிறது என்பனவற்றை பார்க்க வேண்டும். அந்த வகையில் நான் பவர் பிளே ஓவர்களில் முடிந்த வரை ரன்கள் எடுக்க தனிப்பட்ட முறையில் முயற்சித்தேன். அதற்காக பவர் பிளே முடிந்ததும் அவுட்டாக வேண்டும் என்று நான் விரும்பவில்லை. மாறாக பவர் பிளே முடிந்தும் அதே வேகத்தில் விளையாட வேண்டும் என்று நினைத்தேன்”
இதையும் படிங்க: இலங்கை அணியிடம் தோத்தது கூட பரவாயில்லை.. என்னோட கவலையே வேற.. இந்தியா எப்படி தயாராகும் – வாசிம் ஜாபர்
“துரதிஷ்டவசமாக நான் அவுட்டானேன். இருப்பினும் என்னுடைய திட்டம் மிகவும் எளிதானது” என்று கூறினார். அந்த வகையில் முதல் 2 போட்டிகளில் கேப்டன் ரோகித் சர்மா அரை சதமடித்து நல்ல துவக்கத்தை கொடுத்தார். ஆனால் அதை மற்ற வீரர்கள் பயன்படுத்தாததே தோல்விக்கு காரணமானது. இதனால் ஸ்பின்னர்களை எப்படி எதிர்கொள்வது என்பதை இந்திய பேட்ஸ்மேன்கள் மறந்து விட்டார்களா என்ற விமர்சனங்கள் எழுந்துள்ளன.



