
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் செதேஸ்வர் புஜாரா சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேனாக அறியப்படுகிறார். 2010ஆம் ஆண்டு அறிமுகமான அவர் மிகவும் நங்கூரமாக விளையாடி நிறைய பந்துகளை எதிர்கொண்டு ரன்கள் குவிக்கும் ஸ்டைலைக் கொண்டிருந்தார். அந்த அணுகு முறையில் 103 போட்டிகளில் விளையாடிய அவர் 7195 ரன்களை குவித்து இந்தியாவின் நிறைய வெற்றிகளில் பங்கேற்றினார்.
குறிப்பாக 2018/19, 2020/20 என அடுத்தடுத்த டெஸ்ட் தொடர்களை ஆஸ்திரேலிய மண்ணில் வென்று இந்தியா சரித்திரம் படைக்க புஜாரா முக்கிய பங்காற்றியதை யாராலும் மறுக்க முடியாது. இந்நிலையில் “தி டைரி ஆஃப் எ கிரிக்கெட்டர்ஸ் வைஃப்” என்ற பெயரில் புஜாராவின் மனைவி பூஜா புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் தம்முடைய கணவரின் வாழ்க்கையில் நிகழ்ந்த பல்வேறு சுவாரசியமான நிகழ்வுகள் குறித்து அவர் பகிர்ந்துள்ளார்.
அந்தப் புத்தகத்தை வெளியிடும் விழா சமீபத்தில் நடைபெற்றது. அந்த விழாவில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா விருந்தினராக கலந்து கொண்டு புத்தகத்தை அறிமுகப்படுத்தினார். அப்போது 2012 வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தில் புஜாராவின் பணம் மற்றும் முக்கிய பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்ட விவரத்தை ரோஹித் சர்மா பகிர்ந்தார். இது பற்றி ரோஹித் பேசியது பின்வருமாறு.
“இந்தப் புத்தகத்தில் அந்த நிகழ்வு எழுதப்பட்டிருக்காது என்று நான் நம்புகிறேன். 2012 இந்தியா அணியின் வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயண நிகழ்வு பற்றி ஏதாவது இருக்கிறதா? என்ன நடந்தது” என்று ரோஹித் சர்மா கேட்டார். அதற்கு அருகிலிருந்த புஜாரா தொடர்ந்து பேசியது பின்வருமாறு. “அந்த நிகழ்வு பற்றி என்னுடைய மனைவியிடம் சொல்லவில்லை. அது பற்றி அவருக்கு தெரியும். ஆனால் விவரமாகத் தெரியாது”
“நான் சைவம். அதனால் இரவு நேரத்தில் சாப்பாடு உணவை தேடினோம். ட்ரினிடாட் அண்ட் டொபாகோ இரவு நேரத்தில் நாங்கள் 11 மணிக்கு சாப்பாடு தேடினோம். ஆனால் எங்களுக்கு சாப்பாடு கிடைக்கவில்லை. அதனால் மீண்டும் ஹோட்டலுக்கு திரும்பிக் கொண்டிருந்த போது நான் கொள்ளையடிக்கப்பட்டேன். அது பற்றிய விவரத்தை நான் சொல்ல முடியாது”
இதையும் படிங்க: ஓப்பனிங்கில் ராகுல் வேண்டாம்.. இங்கிலாந்தில் சரியான டாப் 5 இந்திய பேட்ஸ்மேன்களை பரிந்துரைத்த பாண்டிங்
“அந்த நிகழ்வைப் பற்றி தான் ரோகித் சர்மா இங்கே குறிப்பிடுகிறார்” எனக் கூறினார். இறுதியாக ரோகித் சர்மா பேசியது பின்வருமாறு. “இந்தக் கதையின் கருத்து என்னவெனில் புஜாரா பிடிவாதமாக இருந்தார். இத்தனைக்கும் நீங்கள் இரவு 9 மணிக்கு மேல் வெளியே செல்லக்கூடாது என்று அவரிடம் ஏற்கனவே நாங்கள் எச்சரித்திருந்தோம். ஏனெனில் அது இந்தியா கிடையாது. வெஸ்ட் இண்டீஸ்” என்று கூறினார்.