இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக இங்கிலாந்து மண்ணில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. அந்தத் தொடரில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் ஓய்வு காரணமாக விளையாடப் போவதில்லை. எனவே இங்கிலாந்தில் சுப்மன் கில் தலைமையிலான இளம் இந்திய பேட்டிங் வரிசையில் மாற்றங்கள் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
அதே சமயம் ஜெய்ஸ்வால் – கேஎல் ராகுல் ஆகியோர் துவக்க வீரர்களாக விளையாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் கடந்த ஆஸ்திரேலிய தொடரின் முதல் போட்டியில் அவர்கள் 200க்கும் மேற்பட்ட ரன்களை பார்ட்னர்ஷிப் அமைத்து இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினர். அத்துடன் ஜெய்ஸ்வால் கடந்த ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடி நல்ல ஃபார்மில் இருக்கிறார்.
டாப் 5 பேட்டிங் வரிசை:
அதே போல நல்ல ஃபார்மில் இருக்கும் ராகுல் நேற்று இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிரானப் போட்டியில் சதத்தை அடித்துள்ளார். இந்நிலையில் இங்கிலாந்து மண்ணில் நடைபெறும் தொடரில் இந்திய அணிக்காக தமிழகத்தின் சாய் சுதர்சன் மற்றும் ஜெய்ஸ்வால் ஆகியோர் ஓப்பனிங் பேட்ஸ்மேன்களாக விளையாட வேண்டும் என்று ஆஸ்திரேலிய ஜாம்பவான் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார். இங்கிலாந்து தொடரில் தம்முடைய இந்திய டாப் 5 பேட்ஸ்மேன்கள் வரிசை பற்றி அவர் ஐசிசி இணையத்தில் பரிந்துரைத்தது பின்வருமாறு.
“இங்கிலாந்தில் சாய் சுதர்சன் – ஜெய்ஸ்வால் ஆகியோர் ஓப்பனிங் செய்வார்கள் என்று நினைக்கிறேன். எனக்கு க்ளாஸ் பிளேயராகத் தெரியும் சுதர்சன் டெக்னிக்கல் அளவில் டெஸ்ட் போட்டிகளில் அசத்துவதற்கான திறமையைக் கொண்டுள்ளதாக தெரிகிறது. அவர்கள் இருவருமே மிகவும் எளிமையான ஓப்பனிங் பேட்ஸ்மேன்கள். எனவே 3வது இடத்தில் இந்தியா கொஞ்சம் அனுபவமிக்கவரை விளையாட வைக்கப் பார்ப்பார்கள்”
பாண்டிங் தேர்வு:
“அது கேஎல் ராகுல் அல்லது கருண் நாயராக இருக்கலாம். சுப்மன் கில் 4வது இடத்தில் விளையாடக்கூடிய வீரராக இருக்கும். கேப்டனாக இருக்கும் அவருக்கு அந்த இடத்தில் விளையாடுவது கொஞ்சம் வாழ்க்கையை எளிதாக்கும். அவரைப் போன்ற இளம் கேப்டன் துவக்க வீரராக அல்லாமல் 3வது இடத்தில் விளையாடுவது கொஞ்சம் எளிதாக இருக்கும்”
இதையும் படிங்க: கேட்டு வாங்கிய வாய்ப்பில் பொளந்து கட்டிய கே.எல் ராகுல்.. இதுதான் ரோல்ஸ் ராய்ஸ் ராகுல் – விவரம் இதோ
“எனவே இங்கிலாந்து தொடரின் ஆரம்பத்தில் சுதர்சன், ஜெய்ஸ்வால், ராகுல், கில், கருண் நாயர் ஆகியோர் சிறந்த டாப் 5 வீரர்களாக இருக்கக்கூடும்” என்று கூறினார். மொத்தத்தில் இம்முறை பேட்டிங் துறையில் ராகுல், ஜடேஜா, பண்ட் தவிர்த்து மற்ற அனைவருமே இங்கிலாந்து மண்ணில் பெரிய அனுபவத்தைக் கொண்டிராத வீரர்களாக இருக்கின்றனர். அப்படிப்பட்ட அவர்கள் இந்தியாவை வெற்றி பெற வைப்பார்களா? என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.



